சஜித்திற்கு ஆதரவளிப்பது ஏன்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் அவர்களின் கடந்த கால செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி, உண்மையாகவே ஜனநாயகத்தில் பற்றுக்கொண்டவராகவும் சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச்செல்லக்கூடிய அதிகாரவாதத்திற்கு எதிரானவராகவும் சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சேவைத்துறை, குறிப்பாக அரசாங்க சேவை ஆகியவற்றின் மீது உண்மையாகவே பற்றுறுதி பூண்டவராகவும் இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடு அனைவருக்கும் உரியது என்று உணர்வதைப் போன்று, தாம் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று உணரும் ஓர் ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச்சென்று சகல பிரஜைகளுக்கும் தேசிய ரீதியாகவும் பிராந்திய ரீதியாகவும் ஆட்சியில் உண்மையாகவே பங்குபற்ற அவர்களது இனத்துவம் அல்லது மதத்தை பொருட்படுத்தாது அவர்களுக்கு உதவுவதற்கு பற்றுறுதி பூண்டவராகவும் ஜனாதிபதி இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதான வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் கடந்த கால செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பொருத்தமான கணிப்பொன்றை மேற்கொண்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுஜன பெரமுன மற்றும் அதன் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவருடன் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களின் கடந்த கால செயற்பாடுகள் கவலையளிப்பதாகவும் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நீக்கி 18 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியமை, பாராளுமன்றத்தை ஆட்டிப்படைத்தமை, அரசியலமைப்பு பேரவையை இல்லாதொழித்தமை, சேவைத்துறைகள் மற்றும் நீதித்துறைக்கான உயர் நியமனங்களை முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய மேற்கொண்டமை, பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி எத்தனை தடவையும் பதவியில் தொடர்ந்தும் இருப்பதற்கு உதவும் வண்ணம் அரசியலமைப்பை திருத்தியமைத்தமை என்பன கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் சர்வாதிகார ஆட்சியை தொடர்வதற்கான திடசங்கற்பத்தை ஏற்படுத்தியதாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அரசியலமைப்பிற்கு முரணாக அவர்கள் பாராளுமன்றத்தில் செயற்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது ஜனநாயகத்திற்காக பாராளுமன்றத்தில் உறுதியாக நின்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தன்னார்வத் தொண்டர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலைகளும் காணாமற்போதல் சம்பவங்களும் வௌ்ளை வேன் பீதியும் மக்களுக்கு நினைவில் இருக்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கியும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கும் பேச்சுவார்த்தையை ராஜபக்ஸ அரசு கைவிட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாட்டிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை அந்த அரசாங்கம் நிறைவேற்ற தவறியதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அவர் சார்ந்த அரசியல் இயக்கமும் அத்தகைய முறைப்பாட்டிற்கு இடமளிக்கவில்லை என கூட்டமைப்பு கூறியுள்ளது.

ஐக்கிய, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயம், காணாமலாக்கப்பட்டோரின் விடயம், தடுப்புக் காவலிலுள்ள கைதிகளின் விடயம், காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி அவசரமாக தீர்வு காண வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கூட்டமைப்பு ஆராய்ந்ததாகவும், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் திட்டங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை வைப்பதே சரியான விடயம் என தீர்மானித்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பு கட்சிகளின் தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.