மட்டக்களப்பில் அசம்பாவிதங்கள் இல்லை

மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்களிப்பு இன்று  பிற்பகல் 4.15 மணியுடன் முடிவடைந்துள்ளது. அஞ்சல் வாக்களிப்பு நடைபெறும் போது எவ்விதமான அசம்பாவிதங்களும் இரண்டு தினங்களிலும் பதிவாகவில்லை என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தெரிவித்தார்.

அஞ்சல் மூல வாக்காளர்களின் வாக்குகள் காப்புறுதி செய்யப்பட்ட தபால் உறையில் இடப்பட்டு அஞ்சலகங்களில் கையளிக்கப்பட்டவை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் பொறுப்பளிக்கப்பட்டு வருகின்றது.

தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு பொறுப்பளிக்கப்படுகின்ற காப்புறுதி அஞ்சல் பொதிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்புவதற்கு ஏதுவாக வாக்குப்பெட்டிகளில் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அரச திணைக்கள உத்தியோகத்தர்களின் வாக்குகள் கணிசமான அளவு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும்,  மாவட்ட அரசாங்க அதிபருமான மா.உதயகுமார் தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில் நேற்றும் இன்றும் வாக்களிக்க தவறும் அரச திணைக்களங்களின் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் நவம்பர் 07 ஆந் திகதி உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் வாக்களிக்க இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.