நீங்கள் என்னை நம்பலாம் .வாழைச்சேனையில் மகிந்த.

இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும் நாங்கள் பலப்படுத்துவோம். நீங்கள் என்னை நம்பலாம் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக 1940ம் ஆண்டுகளில் தலைவர்கள் ஆற்றிய பணிகள். பிள்ளைகளுக்கு பால், விவசாயிகளுக்கு நிவாரணம், நிம்மதியான வாழ்க்கை என்ற நோக்கில் சேவையாற்றி வந்தனர். ஆனால் எமக்கு இருக்கின்ற சொத்துக்களை நல்லாட்சி அரசாங்கம் சூரையாடி இருக்கின்றது.

நாம் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்கினோம். இந்த அரசாங்கம் வவுச்சர்களை வழங்குகின்றது. வவுச்சர்களுக்கு சீருடை துணி வாங்க போனால் கையால் பணம் போட வேண்டிய நிலை உள்ளது. பலரும் செய்வது ஒரு வருடமும் ஒரே சீருடையை அணிவது தான்.

இந்த நாட்டில் பால் உற்பத்தியை அதிகரித்து பாடசாலை மாணவர்களுக்கு பாலினை நாம் வழங்கினோம். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தததும் பாலின் விலை அதிகரித்துள்ளது. அதேபோன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த கறவைப் பசுக்கள் இங்கு இறந்து போய் எமது உள்ளுர் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்போது பாலின் விலையை விட நீரின் விலை அதிகம். இங்கு பால் பண்ணையார்கள் செல்வதற்கு வழி இல்லை. பண்ணையார்களுக்கு இந்த அரசாங்கம் எந்த உதவியும் வழங்கவில்லை. இப்போது கறவைப் பசுக்களுக்கு உண்பதற்கு உணவும் இல்லை. புற் தரைகள் கூட இல்லை. இவர்கள் வனாந்தரங்கள் அல்லது வனங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.

இப்போது யானைகளின் தொல்லைகள் அதிகம். இது பற்றி இந்த அரசாங்கம் சிந்திப்பதில்லை. இப்போது நீங்கள் தனிய உள்ளீர்களா என்று இரவில் வந்து பார்க்கின்றார்கள். அதுவும் ஒரு வழமையாகி விட்டது. நாங்கள் விவசாயிகளின் விவசாய நிலங்களை பெற்றுக் கொடுத்தோம். காணிப் பிரச்சனை மற்றும் நிலப் பிரச்சனைகள் பாரிய பிரச்சனையாக உள்ளது.

அறுபது ரூபாவிற்கு இருந்த நெல் விலையை நாங்கள் நியாயமான விலைக்கு பெற்றுக் கொடுத்தோம். மூவாயிரத்து ஐநூறு ரூபாய் பெறுமதியான உரப் பொதியை 350 ரூபாவிற்கு பெற்றுக் கொடுத்தோம். இந்த அரசாங்கம் 350 ரூபா உரப் பொதியை இரத்து செய்தது. நான் 51 நாள் பிரதமராக இருந்த போது மீண்டும் 350 ரூபா உர பொதியை வழங்கினேன். அது எல்லாம் அன்று நடந்தது.

நாங்கள் இந்த உரப் பொதியை இலவசமாக வழங்குவதற்கு இந்த சந்தர்ப்பத்தில் உறுதி வழங்குகின்றேன். நெல் உற்பத்தி அதிகம் என்று நெல் உற்பத்தியை அரசாங்கம் தடை செய்தது. மத்தளை விமான நிலையம் நெல் களஞ்சியசாலையாக மாறி விட்டது. இப்போது யாழ்ப்பாணத்திற்கும் நெல் களஞ்சியசாலை வந்துள்ளது.

தற்போது யாழ்ப்பாணத்திலும் சர்வதேச விமான நிலையம் வந்துள்ளது. அங்கே ஒன்றும் நடந்ததில்லை. இந்த நாட்டு மக்களின் அச்ச உணர்வை நீக்க வேண்டும். தற்போது நாட்டு மக்களுக்கு தங்களது பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கு பயம் உள்ளது. ஏற்கனவே நாங்கள் அச்சம் இல்லாத நாட்டை உருவாக்கினோம்.

சுதந்திரமாக பயணிக்க கூடிய வழியை நாம் ஏற்படுத்தினோம். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தில் அடிபணிந்து, பயத்தோடு வாழ்ந்த நிலைமையை மாற்றினோம். ஈஸ்டர் குண்டு தாக்குதல் பின்னர் ஒருவருக்கு ஒருவர் அச்சம் ஏற்பட்டது. இப்படி வாழ முடியாது. சமூகத்திற்கிடையில் இருக்கின்ற பயத்தினை இல்லாமல் செய்வோம்.

உங்களுக்கு இருக்கின்ற விவசாய பிரச்சனை, மீனவர் பிரச்சனை, சமகால பிரச்சனை, வாழ்வாதார பிரச்சனை மற்றும் ஏனைய பிரச்சனைகள் அனைத்தiயும் நாங்கள் தீர்த்து வைப்போம். அந்த வகையில் நாங்கள் உங்கள் கிராமத்தை கட்டியெழுப்புவோம். நிங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவொம். இவ்வாறான வேலையைச் செய்வதற்கு கோட்டாபாய ராஜபக்ஷவை முன்னிறுத்தியுள்ளோம்.

இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பை, நாட்டின் பாதுகாப்பை நாங்கள் பலப்படுத்துவோம். நீங்கள் என்னை நம்பலாம். நான் உங்களை நம்புவேன். உங்களது பிரச்சனைகளை நான் தீர்த்து வைப்பேன். வேலையில்லா பிரச்சனையை தீர்த்து வைப்பேன். கிழக்கு மக்களுக்கு பல அபிவிருத்தி வேலைகளை செய்தேன். கிழக்கின் உதயம் மூலம் கிழக்கு மாகாணத்தில் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டேன். நீங்கள் என்னை நம்பலாம் என்றார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நாகலிங்கம் திரவியம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளிதரன், முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் எஸ்.வரதராஜப்பெருமாள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.