வடக்கு கிழக்குப் பகுதிகளில்மொட்டுக்கு ஆதரவு வழங்கும் தமிழர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்.பிரசன்னா கேள்வி

0
305

 

(கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் -பிரசன்னா இந்திரகுமார்)

சாதாரண ஒரு பெயர்ப்பலகை விடயத்திற்கே இத்தனை ஆர்ப்பரிப்பு என்றால் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என எமது மக்கள் சிந்திக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்

அணமையில் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகை தொடர்பில் தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ தரப்பிலுள்ளவர்களின் இனவாத ரீதியான கருத்துக்களைப் பார்க்கும் போது அவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கான விடயங்களைக் கையாள்வார்கள் என சந்தேகிக்கத் தோன்றுகின்றது. சாதாரண ஒரு பெயர்ப்பலகை விடயத்திற்கே இத்தனை ஆர்ப்பரிப்பு என்றால் ஏனையவை தொடர்பில் சொல்லவே தேவையில்லை. அண்மையில் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்ட பலாலி விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ் மொழி முதன்மைப் படுத்தி எழுதப்பட்டதற்கே கொதித்தெழும் தென்னிலங்கை மொட்டு அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.

இவர்களை நம்பி எமது மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து எவ்வாறு அவர்களுக்கு ஆதரவினை வழங்க முடியும். நாட்டின் அரசியல் யாப்பினை முழுமையாக அறிந்திராத தன்மையை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ், சிங்கள மொழிகள் இந்த நாட்டின் நிருவாக மொழிகளாகவும், வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் மொழிக்கே முதன்மை வழங்கப்பட வேண்டும் எனவும் உள்ளது. இவ்வாறான நிலையில் அரசியல் யாப்பில் குறிப்பிட்ட விடயத்தை மேற்கொண்டமைக்கே கொதித்தெழுபவர்கள் எமது மக்களுக்கான தீர்வு அடிப்படையிலான விடயங்களைப் புதிதாக உள்வாங்கி நடைமுறைப்படுத்துவர்கள் என்பதை எவ்வாறு நம்புவது.

இவ்விடயம் தொடர்பில் எமது வடக்கு கிழக்குப் பகுதிகளில் அவர்களுக்கு ஆதரவு வழங்கும் குறிப்பாக தமிழர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள். இவ்வாறான இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் அவர்கள் மௌனம் சாதிப்பது ஏன்? இவ்வாறு மௌனம் சாதிப்பவர்கள் தான் எமது தீர்வு விடயத்தை அவர்களிடம் விலயுறுத்தி பெற்றுத் தரப்போகின்றார்களா? இந்த ஒரு சிறிய விடயத்தையே தட்டிக் கேட்காமல் ஆதரவு வழங்குபவர்கள் எமது மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஏனைய விடயங்களையும் இவ்வாறுதான் கண்டும் காணாமல் இருப்பார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. வெறுமனே இனவாதத்தைக் கக்கும் கும்பலின் செயற்பாடுகளை நாம் நம்பிவிட முடியுமா என்ற கேள்வியும் எங்களுக்குள் எழுகின்றது. இக் கேள்வி எங்கள் ஆதரவு விடயத்தையும் கேள்விக்குறியாக்குகின்றது. எனவே தமிழ் மக்களாகிய நாம் முக்கிய கட்டத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம். நிதானமாகச் சிந்தித்து இனம் மதம் சார்ந்த வெறியூட்டல்களுக்கு அடிமையாகாமல் எமது கொள்கைகள், குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு ஆராயந்து சரியான முடிவினை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.