இந்து நாகரீகம் கற்பிப்பதை யாரும் பேசுவதில்லை, ஆனால் இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய அரபு கற்பித்ததை பேசுகின்றனர்

விடுதலைப் புலிகள் எதை ஆரம்பித்து போராட்டம் நடாத்தினார்களோ அதே பதின்மூன்று அம்சங்க கோரிக்கைகளையும் மீண்டும் தங்களது தீர்மானம் என்று யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மூலம் தமிழ் தலைமைகள் கொண்டு வந்துள்ளனர் என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனரும், ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஓட்டமாவடி மீராவோடை அந்நூர் மண்டபத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தலைமைகள் இன்னும் முடிவு செய்யவில்லை. மகிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, மங்கள சமரவீர ஆகியோரும் பேசுகின்றனர். யார் மூலம் ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி பேச முடியும், தங்களது பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் என்று செல்கின்றார்கள்.

யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மொத்த கட்சி தலைவர்களையும் ஓரே மேசையில் கொண்டு வந்து பதின்மூன்று அம்சங்க கோரிக்கைகளில் கையொப்பம் இட வைத்துள்ளனர். ஆயுதம், அடக்கு முறைகள், அட்டகாசங்கள் இல்லாமல் வட மாகாணத்திலுள்ள ஐந்து கட்சியின் தலைவர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் எதை ஆரம்பித்து போராட்டம் நடாத்தினார்களோ அதே பதின்மூன்று அம்சங்க கோரிக்கைகளையும் மீண்டும் என்று தீர்மானம் எடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளில் உங்களால் எதை செய்ய முடியும் என்று பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.

ஆனால் நாடு முழுவதும் பறந்து வாழும் முஸ்லிம் சமூகம் இதனை விட பல பிரச்சனைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். தமிழ் மக்களது பிரச்சனை வடகிழக்கு மாத்திரம் தான். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு தேச வழமைச் சட்டம் உள்ளது. இவர்களது திருமணம், சொத்துக்கள் உட்பட பல விடயங்களை பார்ப்பதற்கு இந்த சட்டம் உள்ளது. சமூகம் சார் சட்டம், இடம்சார் சட்டம் என்று சொல்லுவார்கள். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு சரியா சட்டம். யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு தேச வழமைச் சட்டம்.

இந்து நாகரீகம் கற்பிப்பதை யாரும் பேசுவதில்லை, ஆனால் இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய அரபு கற்பித்ததை பேசுகின்றனர். நாங்கள் பல பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றறோம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பேசுகின்ற போது சொன்னார். நாங்கள் சண்டை பிடித்து போராடி சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வந்தோம் என்று சொன்னார்.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் முஸ்லிம் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் பிரச்சனை இல்லை. கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக வந்தால் முஸ்லிம் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால் பிரச்சனை இல்லை. ஆனால் பதின்மூன்று இலட்சம் வாக்குகள் வழங்கி பெற்ற மைத்திரிபால சிறிசேனவால் எங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை.

எமது முஸ்லிம் சமூகம் இன்று பட்டுக் கொண்டிருக்கின்ற துன்பங்கள் துயரங்கள், கஸ்டங்கள், பிரச்சனைகள், தேர்தலுக்கு பின்னால் நாம் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சமூகத்தினுடைய நமக்கு இருக்கின்ற உரிமைகள், முன்னைய தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகள் எல்லாம் சட்ட ரீதியாக பறிப்பதற்கு, இரண்டு பிரதான வேட்பாளர்களின் முகாம்களில் இருக்கின்ற நமது சமூகத்தினுடைய எதிரிகள் திட்டமிட்டு அதற்கான வரைபுகளையும், கங்கணங்களையும் கட்டி தேர்தல் முடிந்தவுடன் இந்த சமூகத்திற்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகளை செய்ய உள்ளனர்.

இவர்கள் ஈஸ்டர் குண்டு தாக்குதலுடன் நிக்காபை நீக்க முடியுமா, ஹிஜாவை நீக்க முடியுமா, குர்ஆனை தடை செய்ய முடியுமா, பாடசாலைகளில் இஸ்லாம் அரபு மொழிக் கற்களை நெறிகள் கற்பிப்பதை தடை செய்ய முடியுமா? அரபு மதரசாக்களை முழுமையாக நிறுத்தி அரசாங்க அமைச்சின் கீழ் கொண்டு வந்து மார்க்கம் கற்பிக்காமல் ஏனைய துறைகளுடன் சம்பந்தப்படுத்த முடியுமா? இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு இருக்கின்ற இஸ்லாமிய சரியா சட்டத்தை நீக்கி விட்டு பொதுவான சட்டத்தின் கீழ் முழு நாட்டையும் கொண்டு வர வேண்டும் என்றெல்லாம் பலவாறு சொல்ல முடியும்.

பள்ளிவாயல்களில் ஒலிபெருக்கி மூலம் வாங்கு சொல்ல தடை மற்றும் பள்ளிவாயல்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று எவ்வாறெல்லாம் இவற்றை செய்ய முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையில், ரட்ண கெமிக் தேரர் தலைமையில், ஆசுமாரசிங்க தலைமையில், ஞானசார தேரர் தலைமையில் இப்படி மிக தீவிரமானவர்கள் இரவு பகலாக சிந்தித்து சில வரைபுகளை செய்து கொண்டிருந்த போது தேர்தல் வந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் இதனை அரங்கேற்றுவதற்கு ஆயத்தமான சூழ்நிலையில் தான் நாம் இந்த தேர்தலை முகம்கொடுத்துள்ளோம்.

நம்மை பொறுத்தவரையில் சஜித் பிரேமதாச, கோட்டபாய ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷ எல்லோரும் ஒன்டுதான். இவர்கள் ஒரே குட்டையில் கூரிய மட்டைகள் தான். இவர்கள் யாரும் எமக்கு உயர்வு தாழ்ந்தவர்கள் அல்ல. முஸ்லிம் சமூகத்தினுடைய உரிமைகளை பறிக்க முடியுமா நானா நீயா என்று சஜித் பிரேமதாச, கோட்டபாய ராஜபக்ஷ பாய்ந்து விழுந்து செல்வார்கள் என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் யூ.எல்.அஹமட் லெவ்வை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் மௌலவி எஸ்.எச்.ஹாறூன் (ஸஹ்வி), வாழைச்சேனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜே.அல்பத்தாஹ், வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்