மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60வது புதிய தலைவராக வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் பதவியேற்பு…

 

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60வது புதிய தலைவராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள், முதலாவது பிரதி உபவேபந்தரும், மகப்பேற்றியல் பெண்நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் பதவியேற்றுள்ளார்.

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வு இன்று (20) மாலை மட்டக்களப்பு பயணியர் வீதியில் அமைந்துள்ள கழகக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய யோசப் பொன்னையா ஆண்டகை பிரதம அதிதியாகவும், ரோட்டரியின் துணை ஆளுநர் ம.பத்மநாதன் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி சுகுணன் உட்பட கழக அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 2019ஃ2020ம் ஆண்டுக்குரிய 60வது புதிய தலைவராக வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் வைபவரீதியாக பதவிப் பொறுப்பினைப் பெற்றுக் கொண்டார்.

முன்னாள் தலைவர் வி.பார்த்தீபன் அவர்களினால் பொறுப்புகள் கைளிக்கப்பட்டதுடன், துணை ஆளுநரினால் ரோட்டரி தலைமைத்துவச் சின்னமும் வழங்கிப் பொறுப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கழகத்திற்கு புதிய அங்கத்தவர்கள் இணைக்கும் நிகழ்வும் வைபவ ரீதியாக சின்னம் அணிவித்து நிகழ்த்தப்பட்டதுடன் அதிதியாக வருகை தந்திருந்த அதிதிகளுக்கு புதிய தலைவரினால் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இவ் 60வது வருட பூhத்தியை முன்னிட்டு பல்கலைக்கழகத்தற்குத் தெரிவான தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது பல்கலைக்கழகக் கல்வி ஊக்குவிப்புக்காக புலமைப்பரிசில் திட்டமும் வழங்கி வைக்கப்பட்டது.

சமூக, கல்வி ரீதியான பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் இக்கழகமானது நடப்பாண்டு திட்டமாக முப்பத்தொரு இலட்சத்திற்கும் அதிகமான செலவில் ஓந்தாச்சிமடம் விநாயகர் வித்தியாலத்திற்குரிய சுற்றுமதில், கணனி உபகரணங்கள் மற்றும் ஆரையம்பதி வைத்தியசாலைக்குரிய உபகரணங்கள், கொங்கிறீற்றுப் பாதை போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியதுடன் எதிர்வரும் காலங்களிலும் பல்வேறு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.