கலைச்சுடர் விருது பெற்ற துறையூர் தாஸன்

லக்ஸ்டோ ஊடக வலையமைப்பு, ஆர்.கே. ஊடக வலையமைப்பு மற்றும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம் இணைந்து நடாத்திய பல்துறை சார்ந்தோருக்கான திறமைக்கான தேடல் விருது விழா சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் அண்மையில்(12) இடம்பெற்றபோது, துறையூர் தாஸன் என எழுத்திலக்கிய ஊடகத்துறையில் அறியப்படும் பாக்கியராஜா மோகனதாஸ் கலைச்சுடர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

தரம் 01 முதல் க.பொ.த உயர்தரம் வரை துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று உயர்தர கலை பிரிவில் சித்தியடைந்து, கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நான்கு வருட விசேட நுண்கலைமாணி நாடகமும் அரங்கியலும் பட்டப்படிப்பினை 2013 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்திருந்தார்.

பாடசாலைக் காலங்களிலிருந்து தமிழ்மொழி, கலையிலக்கியம் மற்றும் சமூகம் மீது கொண்ட சிந்தனை பற்றினாலும் வாசிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தினாலும், பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

பல்கலைக்கழக இறுதியாண்டில்(2013) கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கத்தின் “போர்க்கால உளவியங்கள் நாகங்கள் ஓர் மதிப்பீடு” எனும் ஆய்வினை முன்னெடுத்து ஆய்வுத்துறையிலும் பெருவாரியாக ஈடுபட்டு வருவதுடன், ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழா(2015), அகில இலங்கை தமிழ்மொழித் தின கிழக்கு மாகாண மட்டப் போட்டி(2019) உட்பட பல்வேறு போட்டிகளில் நடுவராக கடமையாற்றியும் உள்ளார்.

மேலும் 2011 இல் இருந்து இற்றை வரைக்குமாக வீரகேசரி, தினகரன், தினக்குரல், தமிழ்த்தந்தி, சுடர் ஒளி, தமிழ்மீரர் ஆகிய சுயாதீன தேசிய நாளிதழ்களில் பத்தி எழுத்துக்கள், ஆய்வுக் கட்டுரைகள், நேர்காணல்கள், திறனாய்வு போன்றவற்றை எழுதிவருவதுடன், ஊடகத்துறையிலும் தடம் பதித்து இடையறாது இயங்கி வருகிறார்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் 2018 ஆம் ஆண்டு பல்துறை இளங்கலைஞர் விருதினையும் மலையக கலை கலாசார சங்கத்தினால் தேசபிமானி விஸ்வகீர்த்தி எனும் தேசியப் பட்ட கெளரவத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.