வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்பு

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுப்பிட்டி பகுதியில்  ஆணொருவரின் சடலம் நேற்று (15)  மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கும்புறுப்பிட்டி – ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்திரகுமார் சதீஸ்கரன் (35வயது) எனவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திங்கள்கிழமை இரவு 14ம் திகதி  அவர் வீட்டிலிருந்து மாடுகளை பார்த்துவிட்டு வருவதாக கூறி  வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளதாகவும்

இன்று காலை பாடசாலைக்கு மாணவர்கள் சென்றுகொண்டிருந்தபோது  வீழ்ந்து கிடந்த நிலையில்  ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட  சடலத்தை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தில் தலையில் இரண்டு வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், கசிப்பு விற்பனையில்  ஈடுபட்டு வருபவர்களினால் தனக்கு பாதிப்புகள் ஏற்படும் என தனது தாயிடம் கூறியதாக நீதவானிடம் தாய் தெரிவித்தார்.

இதேவேளை  சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்குட்படுத்துமாறும், சாட்சியாளர்களையும், சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கையினையும் எதிர்வரும் நவம்பர் 13ம் திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கொலை செய்த சந்தேக நபரை கைது செய்யுமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை நிறைவுற்ற பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்