இம்முறை வாக்குச்சீட்டின் நீளம் 2 அடி 2 அங்குலம்

இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டின் நீளம் இரண்டு அடி இரண்டு அங்குலம், அல்லது 26 அங்குல  நீளமாக இருக்கும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வரலாற்றில் மிக நீளமான வாக்குச்சீட்டு இதுவாகும் என, ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றிலேயே அதிகூடிய எண்ணிக்கையான   35 வேட்பாளர்கள் போட்டியிடுவதே அதற்கான காரணமாகும்.

வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மாத்திரமன்றி வாக்களிப்பு நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைப்பது, வாக்குப் பெட்டி இறக்குமதி செய்வது, கூடுதல் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது போன்ற பல பிரச்சினைகள் எழுவதாக குறிப்பிட்ட அவர் இதற்காக வேட்பாளர்கள் ஒத்துழைப்பை வழங்க ​வேண்டும் என்றும் கோரினார்.

பேரணிகள் தடை

இதேவேளை, நேற்றையதினம் (07) வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் வரை வீதிப் பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முறையிட துரித இலக்கங்கள்

தேர்தல் தொடர்பிலான உங்கள் ஆட்சேபனைகளை தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்வைக்க 0112868212, 0112868214, 0112868217 ஆகிய தொலைபேசி இலங்கங்களுக்கோ 0112862529 எனும் பெக்ஸ் இலக்கத்திற்கோ 0719160000 எனும் இலக்கத்தினூடாக வட்ஸ்அப், வைபர் மூலமோ,பேஸ்புக் கணக்கிற்கோ முறைப்பாடுகளை செய்யலாம்என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

சின்னம் ஒதுக்கீடு

கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்குச் சீட்டை விட இரட்டிப்பு நீளமான வாக்குச் சீட்டு அச்சிட வேண்டியுள்ளதாகதெரிவித்த அவர், வேட்பாளர்களுக்கான சின்னங்களை கோருமாறு தெரிவித்துள்ளதோடு,ஒரே சின்னத்தை இரண்டுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் கோரினால் உடன்பாட்டின் மூலமோ அல்லது சீட்டிழுப்பின் மூலமே சின்னம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

சிங்கள அகரவரிசைப்படி பெயர் வரிசைப்படுத்தல்

அத்துடன், சிங்கள அகரவரிசைப்படி வாக்குச் சீட்டில் பெயர் வரிசைபடுத்தப்படும் எனவும் வேட்பாளர் விரும்பினால் தமது பெயர்களின் முதல் எழுத்துக்களை குறைக்க முடியும் என்றுதெரிவித்த அவர்,பின்னாலுள்ள முதல் எழுத்துகளை முன்னால் கொண்டு வர முடியாது என்றும்  அவர் அறிவித்தார்.

செலவு அதிகரிப்பு

தேர்தலுக்கு ரூபா 400 கோடி செலவிட திட்டமிடப்பட்டதுஎனவும்ஆனால் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக செலவை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கட்சிகள் சார்பில் 70  பிரதிநிதிகள்

35 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் கட்சிகள் சார்பில் 70  பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். இதனை குறைக்க முடியுமாக இருந்தால் எமது பணிகளுக்கு சாதகமாக அமையும். வாக்களிப்பு நிலையங்களுக்கு தலா 2 ஊழியர்களை நியமிக்க வேண்டும் சில இடங்களுக்கு மூவரை நியமிக்க வேண்டும்.அந்த வகையில் கட்சி சார்பில் ஒரு நிலையத்திற்கு 175 பிரதிநிதிகள் வரை நியமிக்கப்படும். இதனை 100 ஆக குறைக்க ஒத்துழைக்குமாறு கோருகிறோம். இன்றேல் பெரிய மண்டபங்களை ஒதுக்க நேரிடும்என்றார்.