ஓட்டமாவடி குப்பையேற்றும் உழவு இயந்திர சாரதி மீது தாக்குதல்!

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் குப்பைகளை அகற்றும் உழவு இயந்திர சாரதி மீது  (26.09.2019) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வழக்கம் போன்று பிரதேச சபையின் சுகாதார சுத்திகரிப்பு ஊழியர்கள் இன்று ஓட்டமாவடி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் போதே குறித்த  இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி – 2ம் வட்டாராம் காதர் டெக்ஸ் பின் வீதியில் குப்பைகளை அகற்றும் போது ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவர் உழவு இயந்திரத்தை அப்புறப்படுத்தி வழி விடுமாறு கூறி வாய்த்தர்க்கம் செய்து சென்றுள்ளார். சென்றவர் மீண்டும் அவ்விடத்திற்கு தனது சகோதரருடன் வந்து சாரதியை பலமாகத் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தாக்குதலில் தலைப்பகுதியில் பலத்த காயங்களுக்குள்ளான சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் தேடி வருவதோடு,  இது குறித்த  மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.