மட்டக்களப்புமாவட்ட வீட்டுத்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படுவதுநிறுத்தப்பட வேண்டும் – சீ.யோகேஸ்வரன்

மட்டக்களப்பு மாவட்ட வீட்டுத்திட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வீடுகள் வழங்கமுடியாது. அவ்வீடுகளை அமைப்பதற்கு காணியும் இல்லை. குறிப்பாக மட்டக்களப்பில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படுவது முற்றாக நிறுத்தவேண்டும். இவ்வாறான வீட்டுத்திட்ட அமைப்புக்கு அபிவிருத்தி குழு அனுமதி வழங்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், வீடமைப்பு அதிகாரசபையினரின் சார்பில் கலந்துகொண்ட உத்தியோகத்தரிடம் குறிப்பிட்டார்.

மண்முனை தென்மேற்கு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை பிரதேசஅபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி மற்றும் சோ.கணேசமூர்த்தி (ஐ.தே.க அமைப்பாளர்) தலைமையில் நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்தார்.

சிலரின் சிபார்சில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகள் வழங்குகின்ற வேலைகள் நடைபெறுகின்றன. இனியும் இவ்வாறு வெளிமாவட்டத்தைச்சேர்ந்தவர்களுக்கு வீடுகளோ காணிகளோ வழங்கமுடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

இக்கூட்டத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அம்பாறை மாவட்ட அனுமதிப்பத்திரத்துடன் மண்முனை பிரதேசசெயலாளர் பிரிவுகளில் சட்டவிரேத மணல் அகழ்வில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கபட்டது. சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோருக்கு எதிராக பொலிசார் நடிவடிக்கை எடுக்கும் போது நேர்மையாக சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம் செய்ய, இம்மணல் அகழ்வில் ஈடுபடும் சிலர் இணைந்து முயற்சிப்பதாகவும்; குற்றம்சாட்டப்பட்டது. மேலும், சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் கடத்தப்படுவதாகவும் இதனை வனபரிபாலனசபையினர் கண்டுகொள்ளாமலிருப்பதாகவும் பாமர ஏழைகள் சிறு கத்தியுடன் சென்றால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை புரிவதாகவும் கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன்;, பிரதேசசபையின் தவிசாளர் சீ.புஸ்பலிங்கம், மற்றும் பிரதேசசெயலாளர் திருமதி.தெட்சணகௌரி தினேஸ் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்து ஆராயப்பட்டதுடன் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன. மேலும், பிரதேசத்தில் காணப்படும் பொது மக்களின் பொதுவான பிரச்சினைகளான வாழ்வாதாரம் தொழில் வாய்ப்பு, குடிநீர் சுகாதாரம் மீன்பிடி விவசாயம், ஏனைய கைத்தொழில் போன்ற பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.