கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஏர்பூட்டு விழா இன்று(17) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

2019ஃ2020ம் ஆண்டிற்கான விவசாய செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முகமாக, சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்தக்குருக்கள், சிவஸ்ரீ வ.சோதிலிங்கக் குருக்கள் ஆகியோரினால் பூமி பூசைகள் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து ஆலய வண்ணக்குமார்கள் ஏர்பிடித்து உழுதனர்.

ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றமையுடன், தீர்த்தோற்சவம் திங்கட்கிழமை இடம்பெற்றது. தான்தோன்றீஸ்வரருக்கான தேரோட்டம், திருவேட்டை, தீர்த்தம் நடைபெற்று முடிந்ததும் ஏர்பூட்டு விழாவும் வருடாந்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்நிலப்பகுதியாக படுவான்கரைப் பகுதி உள்ளமையுடன், இப்பகுதியில் விவசாய செய்கையே அதிகம் செய்கைப்பண்ணப்படுகின்றன. இவ்விசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் வகையிலேயே பூசை வழிபாடுகளுடன் ஏர்பூட்டி உழும் செயற்பாடு வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. இவ்விழாவினைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது வயல்களிலும் உழும் செயற்பாடுகளை முன்னெடுப்பர்.

விவசாய செய்கைகளின் போது, எவ்வித தீங்குகளும் ஏற்பட்டுவிடக்கூடாது, நல்விளைச்சல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இறைவனை வழிபட்டபின் விவசாய செய்கைகளில் ஈடுபடுகின்றமையும் வழமையானதொன்று. அதேவேளை விவசாய செய்கையின் போது பயிர்களுக்கு நோய் ஏற்படுகின்ற போது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரரின் தீர்த்த்தினைக்கொண்டு விசிறி வருகின்றமையும் எடுத்துக்காட்டத்தக்கதே.

ஏர்பூட்டுவிழாவின் தலைவர் க.சிவகுருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தனர்.