வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் அதிபர் , ஆசிரியர்கள்

சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

 

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும் இன்று வரையில் எம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசாங்கமோ கல்வி அமைச்சோ எவ்வித பதிலும் வழங்கவில்லை.

எனவே தான் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் இம் மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சகல அதிபர் , ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

அத்தோடு 26 ஆம் திகதி கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளோம். எமது கோரிக்கைகள் தொடர்பில் தொடர்ந்தும் அரசாங்கம் பாரா முகமாக செயற்படுமாக இருந்தால் தொடர்ச்சியான வேலை நிறுத்த்தில் ஈடுபட வேண்டியேற்படும்.

கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான இந்த போராட்டத்தில் சகல அதிபர் ஆசிரியர்களையும் ஒன்று திரளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.