பாடசாலைக்குள் அரசியல் – வீதிக்கு இறங்கிய பெற்றோர்கள் : சாய்ந்தமருது பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைந்தது !!

(சாய்ந்தமருது நிருபர் ஹுதா உமர் )

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட  கமு/கமு/அல்- ஜலால் வித்தியாலயத்தில், கல்வியமைச்சினால் உருவாக்கப்பட்ட திட்டமான “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” திட்டத்தின் கீழ் பாடசாலை கட்டிடம் ஒன்றை நிர்மாணிக்க ஒதுக்கப்பட்ட ஒரு கோடி தொண்ணுறு இலட்சம் ரூபாயை கட்டிட வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது தடுத்து நிறுத்தி வேறுபாடசாலைக்கு கொண்டுசெல்ல கல்முனை கல்வி வலய சிரேஷ்ட பொறியியலாளர் ஒருவர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை பழைய மாணவர் அமைப்பினரும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (9) காலை பாடசாலை முன்றலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும், பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலை பழைய மாணவர் அமைப்பினரும் இணைந்து கொண்டு கல்முனை வலயக்கல்வி காரியாலய அதிகாரிகள், மாகாண கல்வியாதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இன்று (10) காலை பாடசாலை முன்றலுக்கு முன்னால் திரண்ட பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விக்கு தடையாக இருக்கும் இத்தகைய செயட்பாடுகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து அரசாங்கமும், அரசியல்வாதிகளும் தலையிட்டு இந்த விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் இரண்டு நாட்களாக போராடி வரும் எமது போராட்டத்தின் குரலை கேட்க எந்த அரச உயரதிகாரிகளும் இங்கு வரவுமில்லை. தீர்வுகள் தரவுமில்லை என கவலை வெளியிடுகின்றனர்.

சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்டு வெளிநாட்டு நிறுவன உதவியுடன் மீள உருவாக்கப்பட்ட இப்பாடசாலையில் கடலை வாழ்வாதாரமாக கொண்ட பெற்றோர்களின் ஏழை மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். அரசியல் செய்யும் இடமாக எமது பாடசாலையை மாற்றிவிடாமல் நிர்மாண பணிகளை உடனடியாக ஆரம்பிக்க அரசாங்கமும்,அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாடசாலை அபிவிருத்தி சங்கமும் பழைய மாணவர் அமைப்பும் வேண்டிக்கொண்டுள்ளது.

நேற்றும், இன்றும் சாய்ந்தமருது கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்விபயிலும் மாணவர்களின் வருகை எண்ணிக்கையில் மிகப்பாரிய பின்னடைவு உள்ளதை காணக்கூடியதாக உள்ளதுடன் பாடசாலைகள் விரைத்தோடி போகி உள்ளது.