கல்வியில் அரசியலை கலக்கக்கூடாது

0
409

எப்போதும் கல்வியில் அரசியலைக் கலக்கக்கூடாதெனவும் கல்வி அனைவருக்கும் வேண்டியதும் எமது சமுதாயத்தின் முதுகெலும்பாகவுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.

கல்வியமைச்சின் “அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின கீழ், பட்டிருப்பு வலய ஆசிரியர் வாண்மை விருத்தி மத்திய நிலையப் புதிய கட்டடத் திறப்பு விழா, இன்று (09) காலை நடைபெற்றது.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியே தமிழ் மக்களது சொத்து எனவும் 1950ஆம் ஆண்டுகளில் இலங்கையிலுள்ள அமைச்சுகளில் 60 சதவீதமான தமிழர்கள்தான் செயலாளர்களாக இருந்துள்ளார்கள் என்றும் 40 சதவீதமானவர்கள்தான் அக்காலத்தில் பெரும்பான்மை இனத்தவர்கள் செயலாளர்களாக இருந்துள்ளார்கள் என்றும் தெரிவித்ததுடன், கல்விச் சமூகத்தை நாங்கள் மதிக்கவேண்டுமென்றார்.

பதவிகளை வகிக்கின்றவர்களின் ஆளுமை மிகவும் முக்கியமெனவும் அந்த ஆளுமையை வைத்துக் கொண்டு, பல விடையங்களைச் சாதிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.