பாடசாலைகளுக்கு அண்மையில் வீட்டுத்திட்டம் : பாடசாலைக்கு நன்மையே!

0
475

— படுவான் பாலகன் —

‘மேட்டிலையும்,மலையிலையும்,குடிசையிலையும் இருந்த மக்களை ஒன்றாக இணைத்து கல்வீட்டில் குடியேற்றி இருக்கா மிக்க சந்தோசம்’ என்கிறார் சாமித்தம்பி.

அண்மையில் நாற்பதுவட்டை,  விடுதிக்கல் கிராமங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் அமைச்சர் சஜித் பிரமதாசவினால் திறந்து வைக்கப்பட்டன. தாந்தாமலையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளமையினால் முருகப்பெருமானின் பெயரை தாங்கியதாக 25வீடுகளுடன் குமரன்குடியிருப்பு என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமும், விடுதிக்கல் கிராமத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காளி கோயிலை நினைவுபடுத்தும் வகையில் 26வீடுகளை கொண்டதாக காளிகாபுரம் என்ற பெயரில் ஒரு மாதிரி கிராமமும்  அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

உண்மையில் இவ்வீட்டுத்திட்டம் அமையப்பெற்றமை இங்குள்ள மக்களுக்கு வரப்பிரசாதம்தான் இதனை யாரும் மறுத்துவிட முடியாது. இதற்காக உழைத்து நின்ற, குறிப்பாக வீட்டுத்திட்டத்தினை அமைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு செயற்பட்ட கிராமமட்ட உத்தியோகத்தர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரையும் பாராட்ட வேண்டும். அவர்களை வாழ்த்தவும் வேண்டும். என்பது சாமித்தம்பியுடன் பேசிக்கொண்டிருந்த விகஸ்டியின் கருத்தாகும். அதிகாரிகள் வீட்டுத்திட்டத்தினை அமைப்பதில் ஆர்வம் காட்டாதிருந்தாலும்,வீட்டுத்திட்ட வேலைகள் விரைவாக நிறைவேறுவதும் கஸ்டம்தான்.

இரு மாதிரி கிராம வீட்டுத்திட்டங்களினால் மக்கள் அடைந்துள்ள பயனையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. விடுதிக்கல்,நாற்பதுவட்டை ஆகிய கிராமங்களில் வாழும் மக்கள் ஓரிடத்தில் கூட்டாக வாழ்ந்தமை மிகக்குறைவு,ஆங்காங்கு அமைந்துள்ள மேட்டுநிலங்களிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் இம்மக்களுக்கான பாதுகாப்பென்பது கேள்விக்குறியான காலச்சூழலில், ஒரே இடத்தில் 25வீடுகள் அமைக்கப்பட்டமை என்பது ஆங்காங்கு சிதறி,குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது.

பாடசாலைக்கும் அப்போது வீடுகள் அமைந்துள்ள இடத்திற்குமான தூரம்2கிலோ மீற்றர் அல்லதுஅதற்கும்மேல் என்பதினால் கடந்த காலங்களில் மாணவர்களின் பாடசாலைக்கான வரவிலும்,நேரத்திற்கு சமுமளித்தலிலும் சிக்கல்கள் நிலவியிருந்தன. ஆனால் இப்போது அமைக்கப்பட்டுள்ள இரு வீட்டுத்திட்டங்களும் பாடசாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ளமை இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. பாதுகாப்பற்றிருந்த பாடசாலைகள் பாதுகாப்பினை பெறும் நிலையினை அடைந்திருக்கின்றன. அண்மையில் மக்கள் அமைந்துள்ளமையினால் எந்நேரமும் மக்களின் நேரடிக்கண்காணிப்பு பாடசாலை மீது ஏற்படும். பாடசாலைக்கும் சமுகத்திற்குமான தொடர்பு நெருங்கியதாகவிருப்பதற்கும், மாணவர்களின் வரவு வீதம் அதிகரிப்பதற்குமான நிலையினை அடைந்துள்ளதெனலாம். ஒரு கிராமத்தின் இரு கண்களாக இரு ஆலயங்கள் பார்க்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று இறை ஆலயம் மற்றையது வித்தியாலயம் இவை இரண்டிற்கும் அண்மையில் மாதிரிகிராமம் அமைந்துள்ளமை இக்கிராமத்தினை எழுச்சி கிராமமாக மாற்றுவதற்கான அடித்தளமே என்கிறார் சாமித்தம்பி.

இப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீரினைப் பெறுவதில் நாள்தோறும் இன்னல்களை எதிர்நோக்கியே பெறுவதுண்டு. இவற்றினை குறைக்கும் வகையில் இம்மாதிரி வீட்டுத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு குடிநீரினை வழங்கும் பொருட்டு கிணறொன்று அமைக்கப்பட்டு நாளொன்றிற்கு 5000லீற்றர் நீரினை இங்குள்ள25வீடுகளுக்கும்  வழங்கும் வகையில் வீட்டுத்திட்டத்தினை அமைத்துள்ளமை சிறப்பானது. இப்பகுதிகளில் யானைகளின் தொந்தரவும் அதிகமே. ஆனாலும் ஒருமித்த சூழலில் எல்லோரும் வாழ்கின்ற போது யானைகளை துரத்துவது, அவற்றின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கும் ஓரிடத்தில் வாழல் பயன்கொடுத்துள்ளது.

மின்சார இணைப்பு வசதிக்கான செலவினை வீட்டு உரிமையாளர்கள் வழங்கினாலும்,அனைவருக்கும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடக்கூடியதே. இதனோடு காணிகளும் வழங்கப்பட்டுள்ளமை இன்னமும் இம்மக்களுக்கு நன்மையே. வீடு அமைப்போமா? என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்கள் கூட இவ்வீட்டுத்திட்டம் கிடைத்தமையினால் அளவற்ற மகிழ்ச்சி கொண்டிருக்கின்றனர். இருந்தபோதிலும் இன்னும் சிறிய சிறிய அபிவிருத்தி வேலைகளையும் இத்திட்டத்தில் செய்ய வேண்டியும் உள்ளது. குறிப்பாக விடுதிக்கல் வீட்டுத்திட்டப் பகுதியில் மணலினாலேயே வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வீடுகள் கிறவல் வீதிகளாக மாற்றப்பட வேண்டும். வீதி மின்விளக்குகளும் அமைக்கப்பட வேண்டும் என்பதும் இங்குள்ள மக்களின் குறைகளாக தெரிவதாக சாமித்தம்பி சுட்டிக்காட்டுவதுடன், திறப்பு விழாவின் போது விடுதிக்கல் கிராம வீடுகள் விழாக்கோலம் பூண்டிருந்தமையுடன்,இத்திட்டப்பகுதியில் மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்புக்குரியதே. எனக்கூறியவனாக சாமித்தம்பியும், விகஸ்டியும் இவ்விடம் விட்டு சென்றனர்.