மண்முனை பற்று ஆரைம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பு

(க.விஜயரெத்தினம்)
தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இந்து சமய விவகாரங்களுக்கான  அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் பாரம்பரிய மற்றும் நவீன கலைத்துறைக்கு  பல தசாப்த காலமாக பங்களிப்பு செய்த கலைஞர்களை பாராட்டும் விதத்தில்  அமைச்சர் மனோகணேசன் அவர்களின்  சிந்தனைக்கமைவாக நாட்டின் பல பாகங்களிலுமிருந்து 222 கலைஞர்கள் முதன்முறையாக  கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இம்மாதம் கடந்த 02 ஆம் திகதி பாராட்டி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இவ் கலைஞர் கௌரவிப்பு விழாவில் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த மூத்த கலைஞர் கலாபூசணம் மு .கணபதிப்பிள்ளை (மூனாக்கானா )அவர்களுக்கு  கலைமாமணி விருதும்,ஆரையம்பதியைச் சேர்ந்த இலங்கை வானொலி தேசியக் கலைஞரும் ஊடகவியலாளருமான விஸ்வநாதன் பத்மசிறி  அவர்களுக்கும் மற்றும்  புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பிரபல இலக்கியவாதி தங்கராசா இன்பராசா அவர்களுக்கும்  கலைச்சுடர் விருதும் அமைச்சர் மனோகணேசன் அவர்களினால்  வழங்கி வைக்கப்பட்டது.

ஆரையம்பதியைச் சேர்ந்த இலங்கை வானொலி தேசியக் கலைஞரும் ஊடகவியலாளருமான விஸ்வநாதன் பத்மசிறி  அவர்கள் கிராமியப்பாடல்கள்,இலங்கை வானொலியில் 30 மேற்பட்ட மெல்லிசைப்பாடல்களையும்,கிழக்கிழங்கையில் வரலாற்றுப் பெருமைகொண்ட 56இந்து ஆலயங்களின் தலவரலாற்று பாடல்களான கும்மி,காவடி, தாலாட்டு,காவியம்,பக்திப்பாடல்கள் அடங்கலாக 650 பாடலுக்கும் மேலாக பாடி ஆலயங்களின் மூலமாகவும்,ரசிகர்கள் மூலமாகவும் தேனக இசைமாணி பக்திரசப் பாவலன்,தெய்வீகக்குரலோன் என மக்களால் புகழ்திரைக்கப்பட்ட இவருக்கு முதன்முதலாக கலைச்சுடர் எனும் அரச விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியதும் மெச்சக்தக்கதொரு விடயமாகும்.