எனது முகத்தினை அவர்கள் கிழித்தெறியலாம். ஆனால் எனது செயற்பாடுகளை முடக்க முடியாது.

நாசகார செயல்களை செய்யும் கொலைகாரக் கூட்டத்திற்கு சரியான பதிலடியை மக்கள் வழங்க வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

வரும் நவம்பர் மாதத்தில் இந்த நாட்டை நடத்திச் செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக் கூடிய சந்தர்ப்பம் மக்களை நாடி வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன்மூலம் மக்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வீட்டுத்திட்ட கிராமங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில்,

“இந்த நாட்டிலே கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற காட்டுமிராண்டித்தனங்கள், அத்துமீறல்கள், ஏழைகள் மீது தொடுக்கப்பட்டிருக்கின்ற பிழையான செயற்பாடுகளை நாங்கள் கண்டறிந்தோம்.

அந்தவகையில் தான் இவ்வாறான மக்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பதாதைகளை கிழித்தெறிந்திருக்கின்றார்கள். ஆனால் தாங்கள் வந்தால் தேசிய பாதுகாப்பைத் தருவோம் என்கின்றார்கள். எனது முகத்தினை அவர்கள் கிழித்தெறியலாம். ஆனால் எனது செயற்பாடுகளை முடக்க முடியாது.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கடந்த காலங்களில் இப்பகுதியில் மக்களுக்கு இடையூறாக கூலிப்படையாக செயற்பட்ட கொலைகாரக் கூட்டமாகும்.

இந்த கொலைகாரக்கூட்டம் அனைத்து பாகங்களிலும் காணப்படுகின்றனர். அவர்களால் நாசகரமான செயல்களை மாத்திரம் செய்ய முடியுமே தவிர நல்ல செயல்களை செய்ய முடியாது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இந்த நாட்டை நடத்திச் செல்லக்கூடிய ஒருவரை தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் மக்களாகிய உங்களை நாடிவருகின்றது. இதன்மூலம் நீங்கள் சரியான முடிவை எடுக்கும்போது நாங்கள் சரியான முடிவை வழங்க இருக்கின்றோம்” என்று தெரிவித்தார்.