தலைகீழான தேசத்தில் தலைநிமிர்த்தும் வாக்காளன் !! யாரால் ? யார் ? யாருக்கு நாம் வாக்களிப்போம் !!

 

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது பிரதான போட்டியாளரும் வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் குதித்து விட்டார். சில பொழுதுகளுக்கு முன்னர் காதலர்களின் கோட்டையான காலிமுகத்திடலில் ஜே.வி.பி கூட்டிய கூட்டம் மிக பிரமாண்டமானது. நாட்டின் மூன்று பெரிய கட்சிகளுக்கும் பல செய்திகளை உணர்த்துவது போன்று அமைந்திருந்தது. கூட்டத்துக்கு வந்த எல்லாருமே வாக்களிப்பார்களா? என்ற கேள்வி இங்கு முக்கியமானது. ஆனாலும் மூன்று பெரிய கட்சிகளும் வழமையாக கூட்டத்திற்கு ஆட்களை திரட்டும் பொழுது கைக்கொள்ளும் அதி முட்டாள்தனமானதும் படுகேவலமானதுமான உத்திகளை ஜேவிபி கைக்கொள்வதில்லை என்று ஆண்டாண்டு காலமாக நம்பப்படுகிறது.

அந்த கூட்டம் காசு கொடுத்து, குடிக்கச் சாராயம் கொடுத்து அவர்கள் கூட்டத்துக்கு ஆட்களைத் திரட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே இந்த கூட்டம் அக்கட்சியின் கீழ்மட்ட வலைப்பின்னல் ஊடாக திரட்டப்பட்டது என்று கருதப்படுகிறது. (சமூக வலைத்தளங்களில் வெளியான படங்களின் கதை அது வேறு சோடனைகள்.)

அனுரகுமார திசாநாயக்க எனும் இளம் தலைமையான ஆளுமை அண்மைக் காலங்களில் இலங்கை சோஷலிச குடியரசில் துருத்திக் கொண்டு மேலெழுந்து வந்த ஓர் அரசியல்வாதி ஆகும். இப்போதைய தேசத்தின் தலைவராக அடையாளப்படுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய அப்பத்தின் அதிகாரம் கொண்டெழுதிய ஆட்சி குழப்பத்தின் போது அனுரகுமார திசநாயக்க நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்காக சரியான முடிவுகளை எடுத்தார் என்று கருதப்படுகிறது.

நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கு கடந்த ஒக்டோபர் மாதம் அவர் எடுத்த முடிவு மட்டும் போதாது. அதைவிட ஆழமான பொருள் இனப்பிரச்சினை தொடர்பில் அவர் என்ன முடிவை எடுக்கிறார் என்பதில்தான் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அவர் பாதுகாத்தாரா இல்லையா என்பதைப் பற்றிக் கூற முடியும். என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

எனினும் மூன்று பெரிய கட்சிகளும் ஆட்சி குழப்பத்தால் தளம்பிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் நான்காம் அல்லது ஐந்தாம் இடத்தை கொண்ட அனுரகுமார திசாநாயக்க ஒரு தீர்மானிக்கும் சக்தி போல விம்பமாளித்தார்.

இப்பொழுதும் அவர் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக மேலெழுவாரா? – அவருடைய பிரவேசம் யாரை அதிகம் பாதிக்கும்? அல்லது யாரை பலப்படுத்தும்? கோத்தபாயவின் வாக்கு அலை எனப்படுவது ஏனைய கட்சி வேட்பாளர்களோடு ஒப்பிடுகையில் அதிகம் பலமானது. அந்த வாக்கு வங்கியில் உடைவை ஏற்படுத்த அனுரகுமாரவால் முடியுமா? என்ற கேள்விகள் கடல் காற்றோடு கலந்து தேசமெங்கும் வீசிக்கொண்டிருக்கிறது.

ஏனெனில் 2009 இல் மஹிந்த எனும் அரசனும் அவர் குடும்ப மந்திரிகளும் திட்டமிட்டு பெற்ற யுத்த வெற்றியோடு மஹிந்தவை தவிர வேறு யாரும் நாட்டுக்கு தலைமை தாங்க முடியாது என்ற நிலைமை கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது.

எனவே அனுரகுமார ஒன்றில் ராஜபக்ச அணியோடு இணைய வேண்டும். இல்லையென்றால் தனித்துச் சென்று நடுவே நிற்கும் மூன்றாவது வழி ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டும். அனுரகுமார அப்படி ஒரு வழியைத்தான் தெரிந்தெடுத்து இருக்கிறாரா? என எண்ணத்தோன்றுகிறது.

காலிமுகத்திடலில் அவர் ஆற்றிய மிக முக்கிய உரையில் அபிவிருத்தியை பற்றி ஆழமாக பேசுகிறார். ஊழலற்ற ஆட்சியை பற்றி உணர்வு பூர்வமாக பேசுகிறார். ஆனால் இனப்பிரச்சினை என்ற ஒன்றைப் பற்றி வாய்திறக்காமல் பேசிவருகிறார். அதாவது இனப்பிரச்சினைக்கு அவரிடம் தீர்வு இல்லை. என்பதை மறைமுகமாக ஒப்புதல் கொள்கிறார். ஆனால் மஹிந்த அரசை வீழ்த்த ஐ.தே.க முக்கிய புள்ளிகள் ஏவிவிட்ட இனவாத ஷைத்தான்களும், மதவாத பிசாசுகளும் இன்னமும் இலங்கையில் இரத்தவெறி கொண்டு அலைகிறது. அதனை கட்டுப்படுத்த புலிகள் எனும் இரத்த காட்டேரிகளை அடக்கி கீசாவில் (போத்தலில்) அடைத்த கோத்தாபய எனும் பூசாரி வரவேண்டும் என சிங்கள மக்கள் தீர்ப்பை எழுதிக்கொண்டு காத்திருக்கிறார்கள். அந்த எண்ணங்களை அனுர உடைத்து தன்னை சரியான பூசாரியாக அடையாளம் காட்ட முடியுமா என்பது மில்லியன் டொலர் கேள்வி.

அனுரவின் காலிமுகத்திடல் உரையைப் பொறுத்தவரை அபிவிருத்தியைத்தான் அவர் தீர்வாக முன்வைப்பது தெரிகிறது. அதனை மையமாக கொண்டால் அபிவிருத்தியையும் ஒரு மையப்புள்ளியாக கொண்டிருக்கும் கோத்தபாயவுக்கும் அவர்களுக்கும் இடையே வேறுபாடு என்ன? ஏன் அவர் தேர்தலுக்கு தயாராகிறார். இருவரினதும் கொள்கை ஒன்றாயின் அவர் கோத்தாவுடன் நிபந்தனை ஆதரவை வழங்கலாம் தானே.

அரசியல் வியாதிகளின் கிறுக்குத்தனமான முடிவுகளால் ‘இந்த நாடு சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் குப்பைத் தொட்டிலாக மாறியுள்ளது. எமது எதிர்கால குழந்தைகளுக்கு விஷம் இல்லாத ஒரு பழத்தையும் விஷம் இல்லாத ஒரு சொட்டு நீரையும புதிய காற்றின் சுவாசத்தையும் கொடுப்பதற்காகவே நாங்கள் இந்த அரசியல் போராட்டத்தை நடத்துகின்றோம்’ என்று அனுரகுமார கூறுகிறார். அப்படியாயின் விஷமில்லாத பழத்தையும் விஷமில்லாத சொட்டு நீரையும் வழங்குவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும் அவர் விஷமில்லாத அரசியல் குறித்து ஏன் வாக்குறுதி அளிக்கத் தவறினார்? – அவருக்குள் அல்லது சிவப்பு கரை படிந்த தனது இயக்கத்தினுள் இருக்கும் விஷத்தை அவரால் நீக்க முடியவில்லையா?

இலங்கை தீவின் விஷம் எனப்படுவது இனவாதம்தான். இச்சிறிய தீவைக் கட்டி எழுப்பியது சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவம் எனும் நால் இனங்களும்தான் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான் விஷம்.

இந்நான்கு இனங்களையும் இத்தீவைக் கட்டி எழுப்பிய சக நிர்மாணிகளாக ஏற்றுக்கொண்டு ஓர் அரசியல் தீர்வை முன்மொழிய ஏன் ஜே.வி.பி.யால் முடியவில்லை? ரணில் மைத்திரி கூட்டு அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட யாப்பு உருவாக்கக் குழுவிற்கு ஜே.வி.பி. வழங்கிய பரிந்துரையில், ஆளுநரின் அதிகாரத்தை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. இது தொடர்பில் சிறுபான்மை இன மக்களுக்கு அனுர கூறும் பதில் என்னவாக இருக்கிறது?

தமிழ் அரசியல்வாதிகளின் கனவான வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக, சுனாமிப் பொதுக் கட்டமைப்புக்கு எதிராக வழக்கு தொடுத்த ஒரு கட்சியே ஜே.வி.பி. தமிழ் மக்களின் தாயகக் கோட்பாடு தொடர்பில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு வித்தியாசமானது இப்படி இருக்க அவர்களுக்கு தமிழ் அரசியல்வாதிகளினதோ அல்லது அதிக பெரும்பான்மை தமிழ் மக்களினதோ வாக்குகள் கிடைக்கப்போவதில்லை.

இலங்கைத்தீவில் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான ஒரு தீர்வை முன்வைக்காதவர் நாட்டின் இறைமையை பாதுகாக்க முடியாது. கோட்டாபய கூறுவதுபோல வெளிநாடுகள் தலையிடுவதை தடுப்பதற்கும் அவர்களால் முடியாது. ஏனெனில் இனப்பிரச்சினை என்ற ஒன்று உள்ளவரை இச்சிறிய தீவில் வெளிச்சக்திகள் தலையிட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் இன பாகுபாடு எனும் விதையை விதைத்து கிழக்கின் துறைமுகங்கள் முதல் நாட்டின் பல சொத்துக்களை சுருட்டுவதை இலக்காக கொண்டவர்கள். அவர்களை கட்டுப்படுத்த வெளிநாட்டு கொள்கைகளில் இரும்புக்கரம் கொண்ட ஒருவர் தேச நலன் மிக்கவர் ஜனாதிபதி ஆசனத்தில் நிமிர்ந்து அமர வேண்டும். நாட்டு பற்று அணுரகுமாராவுக்கு அதிகம் உண்டு ஆனால் இரும்புக்கரம் இல்லை என்பதை அவரே ஏற்றுக்கொள்வார்.

எனவே ஜே.வி.பி. முதலில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்வைக்க வேண்டும். காலிமுகத் திடலில் அனுரகுமார பேசும் போது இனப்பிரச்சினை தொடர்பாக எதையுமே தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிடவில்லை என்பதன் மூலமே அவரின் அரசியலின் அறிவையும், தமது போக்கின் திசையையும் தெளிவாக வெளிக்காட்டியுள்ளார்.

நாட்டின் அசூரனாக உருவெடுத்திருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைக்காத எந்த ஒரு பெருங்கட்சியும் மாற்றத்திற்கான ஒரு புதிய அரசியலை முன்னெடுக்க முடியாது. எனவே யானை, கை, மொட்டு வரிசையில் ஜே.வி.பி. முன்னெடுக்கும் அரசியலில் புதிய உள்ளடக்கம் எதுவும் இல்லை. மூன்று பெரிய கட்சிகளையும் விட ஜே.வி.பி. புதிதாக எதையும் கூறிவிடவில்லை. பழைய சாம்பாரில் உப்பை கூட்டினால் சுவை மாறும் ஆனால் சாம்பார் பழையதே என்பதை ஜே.வி.பி அபிமானிகளும் ஏற்றுக்கொள்ள தயங்க மாட்டார்கள்.

கோரதாண்டவம் ஆடிய யுத்த வெற்றிக்குப் பின் மஹிந்த ராஜபக்ச அணியை மேவிக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுக்கும் இனவாதத்துக்கு தலைமை தாங்க ஜே.வி.பி. ஆல் முடியாது. அதனால் யானையின் பாகன் ரணிலுக்கும் யுத்த கதாநாயகன் ராஜபக்ஷவுக்கும் இடையே உள்ள பிளவை கொண்டு அரசாங்கம் உருவாக்க கனவில் இடம் பிடிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அதில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையூட்டும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக மூன்றாவது அணியாக ஜே.வி.பி. போட்டியிடுவதன் மூலம் பெரிய கட்சிகளினது சமபலம் கொண்ட வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகளை சவால்களுக்கு உள்ளாக்கலாம். (கோத்தாவுக்கு சம பலம் கொண்ட வேட்பாளர் யானை கூட்டில் அடையாளப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது.)

இது யுத்த வெற்றி நாயகர்களான ராஜபக்சக்களை ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்காது. ஏனெனில் அவர்கள் மிகத் தெளிவாக சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். ஆனால் அனுரகுமாரவின் பிரவேசம் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்கு வங்கியை அதிகம் பாதிக்கும். ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைத் தீர்மானித்த வாக்குகளில் ஜே.வி.பி.யின் ஆதரவு வாக்குகளுக்கும் கணிசமாக செல்வாக்கு செலுத்தியது.

இம்முறை அனுரகுமார தனியாகக் கேட்பதால் அந்த வாக்குகள் மஹிந்தவுக்கு எதிரான அணிக்குப் போகாது. எனவே அனுர குமாரவின் பிரவேசம் ரணில் அணியைத்தான் வெகுவாக பாதிக்கும்.

அதேசமயம் அனுரகுமாரவும் வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் ஜே.வி.பி.யின் வழமையான வாக்கு வங்கியின் படி 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை அவர்களால் பெறமுடியாது. அவர்கள் மட்டுமல்ல இரண்டு பெரிய கட்சிகளும் கூட ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துதான் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறலாம் என்ற நிலைமையே கடந்த தேர்தலின் போது காணப்பட்டது.

எனவே ஜே.வி.பி. இம்முறை வெற்றியை நோக்கிப் போட்டியிடவில்லை. மாறாக இரண்டு பெரிய கட்சிகளையும் குழப்பும் நோக்கத்திலேயே போட்டியிடுகிறது. இதன்மூலம் எதிர்காலத்தில் தமது கட்சியை மேலும் பலப்படுத்த முடியுமா என்று அவர்கள் சிந்திக்கக் கூடும். ஆனால் இரண்டு பெரிய கட்சிகளையும் அவர்கள் குழப்பினால் இதில் அதிகமாக குழம்பப் போவது மஹிந்தவுக்கு எதிரான அணியின் வாக்கு வங்கிதான்.

16.08.2019 அன்று ஜேவிபியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலர் ரில்வின் சில்வா பின்வருமாறு கூறியிருந்தார்…… “மகிந்த ராஜபக்ஷவின் முகாமை பிரதிநிதித்துவம் செய்யும் வேட்பாளரை கட்டாயம் தோற்கடித்தாக வேண்டும். அது கோட்டாபய மீது இருக்கும் பயத்தினால் அல்ல.

மகிந்த ராஜபக்ஷ அணியில் கேடுகெட்ட துஷ்டத்தனமான அரசியல் கலாசாரம் இருக்கிறது என்பதை நாங்கள் தொடர்ச்சியாக கண்டுள்ளோம். அவர்களின் பின்னால் இருப்பவர்கள், படுமோசமான மோசடிக்கார்களாகும், அவர்களால், இனவாதத்தையும் இனவெறியையும் தூண்டுகின்ற, மத வாதத்தை தூண்டுகின்ற, ஊழல் மோசடிகளுக்கு எதுவிதமான வெட்கமோ பயமோ, சூடுசொறணையோ இல்லாத, சட்டத்திற்கு புறம்பாக செயற்பட முயற்சிக்கின்ற, அரசியல் தாற்பரியங்களை புறக்கணிக்கின்ற, நமது நாட்டின் சகலவிதமான குற்றாசாட்டுகளுக்கும் பொறுப்பானவர்கள்தான் ராஜபக்ஷாவை சூழந்துள்ளனர்.

அதனால் அந்த அரசியல் கலாசாரத்தை பின்னணியாக கொண்ட இவர்களை தோற்கடித்தாக வேண்டுமென நாங்கள் திடமாக நம்புகின்றோம்’….என்று.

ஆனால் நடைமுறையில் மூன்றாவது தரப்பாக ஜே.வி.பி களமிறங்கியிருப்பது மகிந்தவுக்கு எதிரான அணியைத்தான் ஒப்பீட்டளவில் அதிகம் பாதிக்கப் போகிறது. தான் வெல்ல போவதில்லை என்பதை நன்கு தெரிந்திருந்தும் இரண்டு பெரிய கட்சிகளினதும் வெற்றி வாய்ப்புகளை குழப்பும் விதத்தில் ஜேவிபி களமிறங்கியிருக்கிறது.

ஜே.வி.பி இவ்வாறு இரண்டு பிரதான கட்சிகளினதும் வாக்குகளை உடைப்பது போல மஹிந்த அரசினாலும் ,ரணில் அரசினாலும் ஏமாற்றம் அடைந்த தமிழ் தரப்பும் மக்கள் அபிமானம் பெற்ற தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் இரண்டு பெரிய கட்சிகளையும் குழப்பினால் என்ன? அப்போது வேட்பாளர் வெற்றி பெறப்போவதில்லை. அதேசமயம் இரண்டு பிரதான வேட்பாளர்களும் பெறக்கூடிய வெற்றியை அவர் தீர்மானிக்கக் கூடும்.

அதன் மூலம் தமிழ் மக்களே இலங்கைத்தீவில் தீர்மானிக்கும் சக்திகள் என்பதனை மீண்டும் ஒரு முறை உலகத்துக்கு உணர்த்தலாம். மேலும் இரண்டாவது விருப்பத் தெரிவு வாக்கினை பிரதான வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு அளிப்பதன் மூலம் அவருடைய வெற்றியை தமிழ் மக்களே தீர்மானிக்கலாம். இது போன்ற ஒரு தேர்தல் வியூகத்தை வகுப்பதற்கு தமிழ் தலைவர்கள் தயாரா? எனும் கேள்விக்கு விடையை அவர்கள் கடல்கடந்தோர்களிடமே தேடுவர்.

ஆனால் முஸ்லிம் மக்களுக்கு இவைகள் எல்லாம் துளியளவும் பொருந்தாது. முஸ்லிம் வேட்பாளர் என்பது சிறுபிள்ளை விளையாட்டாக மாறிவிடும். தேசிய காங்கிரஸ் அவர்களின் கூட்டான வெற்றிலை கூட்டின் வேட்பாளரை ஆதரிக்கும். மரமும் மயிலும் தனது எஜமான்களின் அமுதவாக்குக்காக காத்திருந்து தனது மகாராஜா சொல்வதை அணுவளவும் மாறாமல் அமுல்படுத்தும் என்பது கடந்த கால வரலாறு. ஹசன் அலியின் வண்ணாத்தி, போன்ற கட்சிகளுக்கு அவர்களின் எதிர்காலம் மீது பாரிய கவலை இருப்பதால் அவர்களின் முடிவு சிங்கள மக்களின் வாக்குக்கு யார் தகுதியானவரோ அவரே அவர்களின் தெரிவாக இருக்கும். சுருங்க கூறின் பஸிலின் தோழர் பஷிரின் தெரிவு ரணிலாக இருக்காது.

ஹிஸ்புல்லாஹ் தனது பல்கலைக்கழகத்தை காப்பாற்ற போராடிக்கொண்டிருப்பதால் அவரின் ஆதரவு பாதுகாப்பு சார்ந்த வாக்குறுதிக்கே என்பது வெளிச்சமாக தெரிகிறது. இன்னும் சில சில்லறைகளின் ஐந்து பத்து அடங்கலாக முஸ்லிங்களின் தெரிவும் இருபக்கமும் இருக்கும் என்பது திண்ணம்.

கடந்த தேர்தலை விட இம்முறை கிழக்கிலும்,வடக்கிலும், ஏனைய முஸ்லிங்களின் நிலங்களிலும் கோத்தாவுக்கு கணிசமான வாக்குகள் அளிக்கப்படும். நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்த சரியான தலைமைகளை காத்திருக்கும் முஸ்லிங்கள் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்து மீண்டும் சட்டிக்குள்ளாவது சென்றுவிட தவித்து கொண்டிருக்கிறார்கள்.

யானைக்கே தொடர்ந்தும் வாக்களித்து பழக்கப்பட்டு போன இலங்கை முஸ்லிங்கள் இம்முறையும் யானைக்கே அதிக வாக்குகளை வழங்குவார்கள் என்பது உண்மை என்றாலும் இம்முறை முந்தைய காலங்களை விட மஹிந்த அணிக்கு கணிசமான வாக்குகளை முஸ்லிம் ஊர்கள் வழங்கும் (எதிர்பார்க்கப்படும் அளிக்கப்படும் வாக்குகள் வீதம் யானை- 60% , மொட்டு- 38%, மணி-2% ) ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிங்கள இனவாத அரக்கர்களும் தமிழ் இனவாத பிசாசுகளும் இணைந்து கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் விடியலுக்கான நேரமாக இந்த தேர்தல் கால வாக்களிப்பை பயன்படுத்தும் என்பது திண்ணம்.

மொட்டின் வேட்பாளராக கோத்தா இல்லாமல் இறுதி நேரத்தில் வேட்பாளர் மாறினால்…..
யானையின் வேட்பாளராக ஜனாதிபதிக்கு தகுதியில்லாதவர் “மில்க் பேபி” என்றெல்லாம் அழைக்கப்படும் சஜித் களமிறக்கபடாமல் விட்டால்……..
யானை கூட்டணியின் வேட்பாளராக ரணில் அறிவிக்கப்பட்டால்….
ஜே.வி.பி வேட்பாளர் களமிறங்காமல் விட்டால்….
தேர்தல் நியாயமான நீதமாக நடந்து முடிந்தால்….

வாழ்த்துக்கள் ஸ்ரீலங்கா !!

பழையன கழிந்து புதியன புகுந்து தேசம் வளம்பெறட்டும் !!!!!

அல்ஹாஜ் நூருல் ஹுதா உமர்
தவிசாளர்
தெற்காசிய சமூக அபிவிவிருத்தி ஸ்தாபனம், ஸ்ரீலங்கா
(அல்- மீஸான் பௌண்டஷன்)