பல்கலைக்கழகக் கல்வியணிசாரா ஊழியர்கள் இரு நாள்கள் வேலைநிறுத்தம்

கிழக்குப் பல்கலைக்கழகக் கல்வியணிசாரா ஊழியர்கள், நாளையும் (28) நாளை மறுதினமும் (29) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஏகமனதாகத் தீர்மானித்துள்ளதாக, கிழக்குப் பல்கலைக் கழகக் கல்விசாரா ஊழியர் சங்கச் செயலாளர் தங்கவேல் சிறிதர் குறிட்டுள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இவ்வாறு குறிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், பல்கலைக்கழக ஊழியர் சமூகத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அடிப்படைச் சம்பளத்தில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வது தொடர்பாக அமைச்சர்களான மங்கள சமரவீர, ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் தொழிற்சங்க ஊழியர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலின்போது, சம்பள முரண்பாடு பற்றிய எந்தவோர் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்போது மேற்குறிப்பிட்ட அமைச்சர்களால் ஓகஸ்ட் 22ஆம் திகதி மாலை 04 மணிக்கு முன்பதாக இது தொடர்பான அறிக்கையை தொழிற்சங்க தலைவர்களுக்கு வழங்கும்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஓகஸ்ட் 21ஆம் திகதியன்று பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையின்படி, பேராசிரியர், உதவி பேராசிரியர் ஆகிய பதவிகளுக்கு 2020.01.01 அன்று 107%  ஆகக் காணப்பட வேண்டிய பெறுமதி 102.07 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது தமது தொழிற்சங்கத்தால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

எனவே, அனைத்து அரச தாபனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கும் 2020.01.01 அன்று 107% ஆக வழங்கப்படவிருக்கும் அடிப்படைச் சம்பள உயர்வை பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் வழங்க வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது வேண்டுகோளுக்கு முரணான விதத்தில் இரண்டு பதவிகளுக்கு மாத்திரம் இந்த முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையானது பல்கலைக்கழக கல்வியணிசாரா ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருப்பதன் காரணமாகவே, பல்கலைக்கழக கல்வியணிசாரா ஊழியர்கள், 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடும்படி ஏகமனதாகத்  தீர்மானித்துள்ளதாகவும் இந்த அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.