குளங்களைப் புனரமைக்க அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வர வேண்டும்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவ முன்வர வேண்டுமென, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலமாக நிலவும் வரட்சி தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு மாவட்டத்திலே 398 சிறு குளங்களும் 21 நடுத்தர குளங்களும் 5 பெரிய குளங்களும்  காணப்படுகின்றன. இந்தக் குளங்கள் யாவும் பருவ மழைக் காலத்தில் பாதுகாப்பான முறையில் இடர் ஏற்படாத வகையில் நீரைத் தேக்கி வைத்து கோடை காலத்தில் நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் பராமரிக்கப்பட வேண்டும்” என்றார்.

இம்மாவட்டத்திலுள்ள சிறிய, நடுத்தர, பெரிய குளங்களைத் தேவைக்கு ஏற்ற வகையில் தூர்வாரி ஆழமாக்கி புனரமைக்கும் செயற்றிட்டங்களை அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கோரினார்.

மேலும், மாவட்டத்தின் நீர்த் தேவையை நிவர்த்திப்பதோடு, இம்மாவட்டத்தின் விவசாயப் பகுதிகளையும், வன விலங்குவாழ் பகுதிகளையும் எக்காலத்திலும் வரட்சி ஏற்படாது ஈரலிப்பாகவும் பராமரித்துப் பாதுகாத்துக் கொள்ள முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறட்சி ஏற்படுகின்றபோது நகர, கிராமப்புற மனிதர்கள் மாத்திரமன்றி வனவாழ் விலங்குகளும் நீரின்றிப் பாதிப்படைய நேரிடுவதாக விவசாயிகளும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.

வரட்சியான காலங்களில் குடிநீர் தேடியும் உணவு தேடியும் வனவாழ் விலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் ஊர்களுக்குள் ஊடுருவி அழிவுகளை ஏற்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மாதத்திலிருந்து அமுலுக்குக் கொண்டு வரப்பட்ட நீர்வெட்டு தற்போதும் இருந்து வருகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப் பகுதிகள் யாவற்றுக்கும் உன்னிச்சை குளத்திலிருந்து பெறப்படும் நீர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.