பிரதமர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட, கட்சித் தலைவர்கள் நாளை (27) கலந்துரையாடவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (26) முற்பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்துள்ளார்.

பலாலி விமான நிலையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர், சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை ​சேனாதிராசா, M.A. சுமந்திரன், அமைச்சர்களான திலக் மாரப்பன, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

வட மாகாணத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளைப் பொதுமக்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என பல தடவைகள் பிரதமருக்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் எடுத்துரைத்தும் அது இடம்பெறாத நிலையில் அதற்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, பொதுமக்களின் சொந்த காணிகளை மீள அவர்களுக்கு வழங்குவதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு பிரதமருடன் இடம்பெற்ற இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாக மாவை சேனாதிராசா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் விமான நிலையத்தை திறக்க வேண்டும் என்பதனால் அதற்குத் தேவைப்படும் நிதியை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை எனவும் மாவை சேனாதிராசா நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.