கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.

கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்கதாகவும், சுயம்புலிங்கமாக தோன்றியதுமாகிய கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குள புனரமைப்பு பணி இன்று(22) வியாழக்கிழமை ஆரம்பமானது.
ஆலய வராலாற்றுக்காலத்தனைக் கொண்ட குறித்த தீர்த்தக்குளமானது நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாது காணப்படுகின்றது. 1998ம் ஆண்டிற்கு முன்னர் இத்தீர்த்தக்குளத்தில் ஆலய உற்சவத்தின் நிறைவுநாள் தீர்த்தோற்சவம் ஆடப்பட்டு வந்த நிலையில், தீர்த்தக்குளத்தின் நீர் மிகவும் குறைவாக அதன் பின்னரான காலத்தில் இருந்தமையினை கருத்தில் கொண்டு, ஆலயத்தின் முன்வாயிலில் உள்ள கிணற்றிலே 1998ம் ஆண்டிற்கு பின்னர் தீர்த்தமாடப்பட்டு வந்தது. இந்நிலையில், குறித்த ஆலயத்தின் தீர்த்தக்குளம் புனரமைப்பு செய்யப்பட வேண்டுமென கடந்த தேசமகாசபைக்கூட்டத்தில் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்கமைய, மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் உதவியுடன், ஆலய பரிபாலன சபையினரால் இன்று புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாரம்ப புனரமைப்பு பணி நிகழ்வில் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர், உபதவிசாளர், ஆலய வண்ணக்கர் தலைவர், செயலாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.