கிரானில் பிரதேச செயலக ஊழியர்களும் பொதுமக்களும் போராட்டத்தில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகத்திற்கு கிரான் பிரதான சந்தியில் இருந்து செல்லும் பிரதான பாதையினை புனரமைத்து தருமாறு கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இரண்டு மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று புதன்கிழமை ஈடுபட்டனர்.

குறித்த பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட இரண்டு மணிநேர வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பிரதேச பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களுடைய போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது குன்றும் குழியுமாக இருக்கும் பாதை சீர்செய்யப்படாமல் இருப்பது ஏன்? சீரான பொது போக்குவரத்து நடைமுறைப்படுத்த ஆவண செய், வீதி அபிவிருத்தியை துரிதப்படுத்த முயற்சி செய், மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பிரதான வீதிகளும் புனரமைக்கப்பட்ட நிலையில் புலிபாய்ந்தகல் பாலமும் வீதியும் புறக்கணிக்கப்பட்டது ஏன் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் கலந்து கொண்டனர்.

கிரான் பிரதேச செயலகத்திற்கு செல்லும் பிரதான பாதையானது புனரமைக்கப்படாமலும், சீரான போக்குவரத்தின்மையாக காணப்படுவதால் அரச உத்தியோகத்தர்கள், அன்றாட கூலித் தொழிலாளிகள், பாடசாலைகள் மாணவர்கள் உட்பட்டோர் பயணிப்பதில் பாரிய இடர்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராம மக்கள் தங்களுடைய தேவைகளை செயலகத்தில் பெற்றுக் கொள்வதற்கு வருவதாயின் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்கி காலதாமதம் இன்றி வருகை தருகின்றனர். அத்தோடு செயலக உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருவதால் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்குவதுடன், மழை காலத்தில் பயணம் செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி கடமைக்கு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே கிரான் பிரதான சந்தியில் இருந்து செல்லும் பிரதான பாதையினை உடனடியாக புனரமைப்பு செய்து தருமாறு கிரான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை கேட்டுக் கொள்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிரான் பிரதேச செயலாளருக்கான மகஜரினை கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபுவிடம் செயலக உத்தியோகத்தர்களால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த மகஜரினை அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதாக பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.

அத்தோடு குறித்த வீதியினை கிரான் பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் இராணுவத்தினரின்; உதவியுடன் கிறவல் இட்டு தற்காலிகமாக புனரமைப்பு செய்தால் மழை காலத்தில் வீதி பாதிப்படைகின்றது என பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மேலும் தெரிவித்தார்.

இப்படுவான்கரை பிரதேசத்திலே 2500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிப்பதுடன் 11 கிராமசேவகர் பிரிவுகளும் காணப்படுகின்றன. இப்பிரதேசத்திலே 5000ற்க்கு ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்களும், 2000ற்க்கு மேற்பட்ட சேனைப்பயிற் செய்கை நிலம் காணப்படுவதுடன், 10000ற்கும் மேற்பட்ட கால்நடைகளும் காணப்படுகின்றன. அத்தோடு 14 பாடசாலைகளும், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், விவசாய அபிவிருத்தி அலுவலகம், போன்ற பொது நிறுவனங்கள் இருந்த போதும் இப்பாதையானது பன்னெடுங்காலமாக மிகவும் மோசமான நிலையில் குன்றும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.