இறையின்ப பாவாரம் ஒரு வரலாற்று பொக்கிசம்

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மண்முனைப் பற்று பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபரும் கவிஞரும் எழுத்தாளருமாகிய செம்மொழிப்புலவர் ஆரையூர் அருள் (மு.அருளம்பலம்) அவர்களது பக்தி இலக்கிய வகையைச் சேர்ந்த இறையின்பப்பாவாரம் என்ற நூல் பற்றிய ஒரு அறிமுக உரையை எழுதுவதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

742 பக்கங்களைக்கொண்ட பெருங் கவிதை நூலான இந்நூல் இந்த நூற்றாண்டில் ஈழத்தில் வெளிவந்த மிகப் பெரும் கவிதை நூல் என்ற பெருமையைப் பெறுகிறது. மொத்தம் 3010 பாடல்களைக் கொண்ட இந்நூலே ஈழத்தின் பக்திப் பாடல் வரிசையில் மிகப்பெரிய நூலாகும்.

பக்திப் பாடல்கள், பஜனைப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள், கும்மிப் பாடல்கள், காவடிப்பாடல்கள்,கரகாட்டப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள்,
காவியப் பாடல்கள் என பல வகைக் கிராமியப் பாடல்களையும் கொண்டமைந்த இந்த நூலைப்போன்ற ஒரு நூலை இந்த நூற்றாண்டில் ஈழத்தில் இதுவரை நான் காணவில்லை.

கவிஞர் ஆரையூர் அருள் அவர்கள் எழுதிய அளவுக்கு இத்தனை வகையாக இத்தனை பக்திப் பாடல்கள், ஊஞ்சற் பாடல்கள், காவடிப்பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், தெம்மாங்குப் பாடல்கள், திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் வேறு யாரும் பாடியிருப்பதாகவும் அறிய முடியவில்லை.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் சுவாமி பிரபு பிரேமானந்தா அவர்களின் ஆசியுரை, மட்டக்களப்பு காயத்திரி பீட பிரதம குரு திருகோணமலை சிவயோகச் செல்வன் த.சாம்பசிவம்
சிவாச்சாரியார் அவர்களின் ஆசீர்வசனம், கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் வாழ்த்துரை, ஆரையூர் க.சபாரத்தினம்
அவர்களின் அணிந்துரை, கல்முனைத் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பரதன் கந்தசாமி அவர்களின் நீண்ட சிறப்புரை, ஆசிரியரின் முன்னுரை என்பவற்றோடு ஆசிரியரின் அன்னை அன்னம்மா அவர்களுக்குச்
சமர்ப்பண மிட்டு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஆலயங்களிலுள்ள விநாயகர், சிவன், முருகன், விஷ்ணு, வைரவர், வீரபத்திரர், அனுமான், நரசிங்கர், நாகலிங்கேஸ்வரர், கண்ணகை, பேச்சி, மாரி, காளி, கடலாட்சி,காமாட்சி, நாககன்னிகை முதலான தெய்வங்களின் மீது பாடப்பட்ட இசை, நடன மற்றும் பாரம்பரியப்
பாடல்கள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பாடலின் கீழும் பாடப்பட்ட ஆண்டு மாதம் திகதி வாரியாகக் குறிப் பிடப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். 1980 இலிருந்து 2016 பிற்பகுதிவரை இவரால் பாடப்பட்ட பாடல்களை இங்கு காணக்கூடியதாக இருக்கின்றது. பாடல் பாடப் பெற்ற காலத்தில் நாட்டில் நடைபெற்ற சம்பவங்கள்
பாடல்களில் பதிவுகளாகியிருப்பது சிறப்பம்சமாகும்.

பெரிய புராணத்தை பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள் வரலாற்றுப் புராணம் என்பார். ஏனெனில் பெரிய புராணம் மூலமாக தமிழரின் வரலாறு கண்டறியப் படக் கூடியதாக இருக்கிறது என்கிறார். அதேபோல இந்த இறையின்பப் பாவாரம் நூலிலுள பல பாடல்களின் மூலமாக எமது
நாட்டில் அக்காலத்தில் நடந்த நிகழ்வுகளை அறியக்கூடியதாக இருக்கிறது. அதனால் இந்நூல் ஒரு வரலாறுப் பொக்கிஷமாகக் கருதத் தக்கது.

2

ஆலய பரிபாலன சபையினர், அடியார்கள், ஊரவர்கள் கேட்டுக்கொண்டதற் கிணங்க ஆலய வரலாறு, தெய்வ முகூர்த்தங்களின் அவதாரம், அற்புதம், பூசைமுறைகள், சடங்கு முறைகள், ஆலய
அமைவிடங்கள், முதலானவற்றை உள்ளடக்கியதாக இவரது பாடல்கள் எழுதப்பட்டுள்ளன.

 

46 ஊஞ்சற் பாடல்கள் பாடியுள்ளார். 22 திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பாடியுள்ளார். 608 காவடிப்படல்களைப் பாடியுள்ளார். 24 கும்மிப் பாடல்களைப் பாடியுள்ளார். இப்படிப் பாடுவது மிகக்கஷ்டமான வேலை. ஏனெனில் ஒரே அமைப்பில் பலவிதமாகப் பாடவேண்டும். தேர்ந்த தமிழ்ப்
புலவனாலேயே அது முடியும். இவர் அதைச் சாதித்துக் காட்டியுள்ளார் என்றே சொல்லலாம்.

நாட்டார் கலைவடிவங்களில் ஒன்றான கோலாட்டப் பாடல் வடிவத்தைமட்டும் ஏனோ தவிர்த்துவிட்டார். மாணிக்க வாசக சுவாமிகள் தான் நாட்டார் கலை வடிவங்களை நாட்டார் மெட்டுக்களை முதன் முதல் பக்திப் பாடல்களிலே புகுத்தியவர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். திருவம்மானை, திருச்சாழல், திருப்பொற்சுண்ணம், திருப்பூவல்லி, முதலான பலவகைப் பாடல்களை பக்தி இலக்கியத்துக்குள் கொண்டுவந்தவர் அவரே.

கவிஞர் ஆரையூர் அருள் அவர்களும் இந்த முறையைப் பின்பற்றி பலவகை நாட்டார் பாடல் வகைகளை ஆடவும் பாடவும் ஏற்றவகையில் பாடலாக்கித் தந்துள்ளார். இவரது தெம்மாங்கு மெட்டிலமைந்துள்ள பாடல்களும் இந்தவகையைச் சேர்ந்தனவே.

திருகோணமலை திருக்கோணேஷ்வரரையும்இ ஸ்ரீ பத்திரகாளி அம்மனையும் பாடி கிழக்கைப் பூரணப்படுத்தியுள்ளார்.
நல்ல தமிழ்ச் சொல் வளம் மிக்கவராகவும்இ பல நூல்களில் நிறைந்த பயிற்சி உள்ள வராகவும். நீங்காத இறை உணர்வு மிக்கவராகவும், ஓசை ஒத்திசைவை சரியாக உணரக் கூடியவராகவும்இ நாட்டார் பாடல்இ
கலை வடிவங்களைச் சரியாகத் தெரிந்து கொண்டவராகவும் உள்ள ஒரு கவிஞராலேயே இத்தகைய சாதனையை நிகழ்த்த முடியும்.

கவிஞர் ஆரையூர் அருள் அவர்கள் இத்தனையும் நிரம்பப் பெற்றதோடு தெய்வ கடாட்சம் நிரம்பப் பெற்றுள்ளதனால்தான் இவற்றைப் பாட முடிந்துள்ளது என்றால் மிகை இல்லை. “இறையின்பப் பாவாரம்” என்னும் இந் நூல் நாட்டியக் கலைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படவேண்டும். இசை அமைப்பாளர்கள் இதிலுள்ள பாடல்களை இசை அமைத்து
இறுவட்டுக்களாக வெளியிடவேண்டும். பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இப்பாடல்களை ஆட்டங்கள் மூலமாகவும் இசை மூலமாகவும் அறிமுகப் படுத்த வேண்டும்.

இந்த நூலும் நூலாசிரியரும் புகழால் பல்லாண்டு நிலைத்திருக்கவேண்டும். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய நூலாகிய இந்நூல் எல்லோராலும் படிக்கப்படவேண்டும். வாழ்க நூலாசிரியர். வாழ்க

இறையின்பப் பாவாரம்.
நன்றி
கவிஞர் தமிழ்மணி அகளங்கன்