திரிசங்குநிலையில் தமிழ்முஸ்லிம் மக்கள்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாவின் பெயர் அறிவிக்கப்பட்டது முதல் பல பக்க விமர்சனங்களும், அச்சங்களும், பதட்டங்களும் குவிந்த வண்ணமுள்ளன.அவர் மீது கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையே மீண்டும் விமர்சகர்கள் மீட்டுகிறார்கள்.
அவர் மீதான அச்சத்தை மக்கள் மீது கட்டமைப்பதால் அவரை தோற்கடித்துவிடலாமென எதிராளிகள் வியூகம் வகுக்கின்றார்கள்.

கோட்டா முன்னாள் ராணுவ வீரர். இறுதிப்போர்க்காலத்தில் பாதுகாப்பு செயலராக பணிபுரிந்த போது யுத்தத்தை வென்றதற்கான பெரும் பங்கை கோரியவர்.
மாத்திரமல்ல நகர திட்டமிடல் அமைச்சின் செயலராகவும் ஏக காலத்தில் பணிபுரிந்து கொழும்பில் தூர்ந்து போய்க்கிடந்த சதுப்பு நிலங்களை பெரும் பூங்காவனங்களாகவும், இளைப்பாறுமிடங்களாகவும் மாற்றிக்காட்டியவர்.
அத்தோடு கைவிடப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான பல புராதன கட்டடங்களை புனர் நிர்மாணம் செய்து நவீன சந்தைகளாக, வியாபார பெரு நிலையங்களாக நிலைமாற்றம் செய்தவர்.
ராணுவ அனுபவம், அமெரிக்க வாழ்வில் பெற்ற பயிற்சி என்பன கோட்டாவிற்குள் இருக்கும் நேரான உத்வேகத்திற்கும், இலக்குகளை நோக்கிய அவரது இயங்கு திசைக்கும் பிரதான காரணங்கள்.
முன்னர் சில குறிப்புகளில் எழுதியது போல கோட்டா 2015 ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தன்னை தயார்படுத்த தொடங்கியவர். இதற்கான முதலாவது கூட்டமொன்றை ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் அவர் நடாத்தியிருந்தார்.
அதனை தொடர்ந்து 2019 தேர்தலை இலக்குவைத்து ‘எலிய’, ‘வியத்மக’ போன்ற பல நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்துவந்தார்.
MiG deal, Avant-garde, DA Rajapaksa memorial hall, Lasantha Wickramathunge, White Van abductions etc என அவர் மீதான குற்றப்பட்டியல்கள் நீண்டு கொண்டு சென்றாலும் இது வரை ஒன்றில் கூட அவரை குற்றவாளியாக நிறுத்த முடியவில்லை!
ஐதேக அரசியல்வாதிகளும் ஏனைய எதிர்ப்பரசியலாளர்களும் கோட்டா மீது அடுக்கி வந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கும் அவரை தண்டித்து விடுவதற்கும் மக்கள் அவர்களது கரங்களில் ஆட்சியை தூக்கி கொடுத்தார்கள்!
இருந்த போதும் நடந்தது என்ன?
அவரது வழக்குகளில் இருந்து நீதிபதிகள் விலகிச்சென்றார்கள்.
அவருக்காக அமைக்கப்பட்ட வீசேட நீதிமன்றங்கள் வழக்குகளை அங்குமிங்குமாக ஒத்திவைத்தன. யாருக்கும் வழங்கப்படாத சலுகைகளும், முன் ஜாமீன்களும் கோட்டாவிற்கு வழங்கப்பட்டன.
நீதியமைச்சையும், ஆளும் அதிகாரத்தையும் தன்னகத்தே வைத்திருக்கும் ஐக்கிய தேசியக்கட்சியின் அனுசரணை இல்லாமல் இதுவெல்லாம் நடந்துவிடுமா?
மிக அண்மையில் கோட்டா அமெரிக்க குடியுரிமையினை துறந்ததாக அறிவித்த பின்னர் கூட இலங்கை கடவுச்சீட்டை அதி துரிதமாக பெற்றுக்கொள்ளவும் ரணில் விக்ரமசிங்கவே நேரடியாக உதவியதாக Colombo Telegraph குற்றஞ்சாட்டியிருந்தது.
இங்கே நடந்து கொண்டிருப்பது ஒரு அசிங்கமான அரசியல் deal என்பது நாட்டு மக்களில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
2010 ம் ஆண்டு தேர்தலை போர் வெற்றியை சொல்லி வெல்ல முடிந்த மஹிந்தவுக்கு,
2015 இல் அந்த கோசத்தோடு அதனைச்செய்ய முடியவில்லை.
அதற்காகத்தான் பாதி யுத்தக்கதைகளும் மீதி பெருந்தேசியவாத பிரச்சாரமுமாக அவரது தேர்தல் வியூகம் இருந்தது. அளுத்கமை தாக்குதல் சம்பவம் பெருந்தேசியவாத பிரச்சாரத்தில் விளைந்திருந்த போதும் அதுவே அவரது தோல்விக்கான பிரதான காரணிகளில் ஒன்றாகவுமிருந்தது.
மஹிந்த கடைசியாக ஜனாதிபதியாக இருந்தபோது காலியில் திறக்கப்பட்ட பொது பல சேனாவின் காரியாலய நிகழ்விற்கு கோட்டா பிரதம அதிதியாக கலந்து கொண்டார் என்பது முதல் அவர் அந்த இயக்கத்தின் போஷகர்களில் ஒருவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
ஆனால் இந்தக்கதைகளை எல்லாம் கூறி பொதுபல சேனாவை நாய்க்கூட்டில் அடைக்கப்போவதாக அமைக்கப்பட்ட ஆட்சியில் என்ன நடந்தது?
ஆட்சியின் ஜனாதிபதியானவர் திகன எரிந்து கொண்டிருந்த போது ஜப்பானுக்கு பறந்து போனார். அவர்கலந்து கொண்ட ஜப்பான்  கூட்டத்தில் கண்டிக்கலவரங்களின் சூத்திரதாரிகளில் ஒருவரான ஞானசார தேரோவும் பங்குகொண்டார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்த தேரோவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கடுமையான பொழுதில் திறந்துவிட்டார்.
முஸ்லிம் சமூகத்தை unofficial ஆக பழிவாங்கும் படலத்திற்கு மறைமுகமாக பிள்ளையார் சுழி போட்டது யார் என்பது இதனால் தெட்டத்தெளிவானது.
சிரிசேன ஜனாதிபதி எப்போதும் பெளத்த பெருந்தேசியவாதத்தை போஷித்து வளர்ப்பதில் முன்னோடி என்பதற்கு மேற்சொன்ன சம்பங்கள் மிகச்சில உதாரணங்களே.
அண்மைய நாட்களில் முஸ்லிம்கள் தொடர்பாகவும் இஸ்லாம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் ஓமல்பே சோபித தேரரை ஜனாதிபதி தனது கம்போடிய பயணத்தில் இணைத்துக்கொண்டு போயிருப்பது மற்றுமொரு பெருந்தேசியவாத விசுவாசமே அன்றி வேறில்லை.
மறுபுறம் ரதன தேரோ காட்டித்திரியும் குறளிகளை பார்க்கும் போது பெருத்த எரிச்சலும் சிலவேளைகளில் குபீரென்ற சிரிப்பும் வருகிறது.
ரதன தேரோ ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்.
அவரது நடவடிக்கைகள் தொடர்பில் வலுத்த கண்டனங்களையோ அல்லது பாராளுமன்ற பதவியை பறிக்கும் நடவடிக்கைகளையோ அந்த கட்சி இது வரை செய்ததாக தெரியவில்லை.
ஆக கோட்டாவை,மஹிந்தவை எந்த பெருந்தேசியவாதத்திற்காக எதிர்த்து நின்று நல்லாட்சியென்று சிரிசேனவிற்கும் ரணிலுக்கும் ஆட்சிக்கதிரைகளை தாரைவார்த்தாமோ அந்தக்கதிரைகளை பெருந்தேசியவாத கால்களால் அலங்கரித்தே அவர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
இவைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது பெருந்தேசியத்திற்காக இதுவரை கோட்டா செய்தவை வலு குறைவாகவே தெரிகிறது
இரண்டு தெரிவுகள் இருந்தால் குறைந்த கெடுதியை தெரிவு செய்யும் ஒரு நிர்ப்பந்தம் இருக்கிறது.
2010 ம் ஆண்டு பொன்சேக்காவும், மஹிந்தவும் தேர்தலில் நின்ற போது தமிழ் மக்கள் பொன்சேக்காவை ஆதரித்தார்கள்.
போர் முடிந்து வெறும் ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில் போருக்கான தலைமையினை வழங்கிய ராணுவத்தளபதியா? போருக்கான வழிகாட்டலை வழங்கிய தேசத்தின் தலைவரா? என்ற கேள்வி எழுந்த இக்கட்டான சூழலின் போது தமிழ் மக்கள் பொன்சேக்கா பக்கம் சாய்ந்தது இன்னும் வியப்பாகவே இருக்கிறது!
அது போலதான் பெருந்தேசியவாதத்தின் இரண்டு முகங்களால் ஆன பிரதான வேட்பாளர்கள் நமக்கு முன்னே வர இருக்கிறார்கள்.
அதில் ஒன்று உறுதியாகியிருக்கிறது. இன்னொன்று ஐதேக முகாமிலிருந்து வர இருக்கிறது. சஜித் பிரேமதாச என்கிற அந்த முகத்தை பற்றிய அறிவிப்பு வெளியானதும் ஒரு குறிப்பை எழுத எண்ணியுள்ளேன்.
சிலவேளை அது நடக்காமல் போகவும் கூடும்.
இந்த பின்புலத்தில் கோட்டாவின் ஜனாதிபதிக்கதிரைக்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதை உணரமுடிகிறது.
அவர் ஜனாதிபதியானால் பதவியேற்கும் கையொப்பம் இட்ட பேனாவின் மை காய்வதற்கு முன்னமே அவரது மனதில் ஓடப்போகிற எண்ணம் என்னவென்றால்….
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெறுவது எவ்வாறு அல்லது சாகும் வரை அதிகாரத்தில் இருக்க என்ன வழி? என்பதேயாகும்.
அந்த சிந்தனை வரும் போது சிலவேளை சிறுபான்மை தொடர்பான கரிசனை பிறக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால் பெறப்போகும் வெற்றி பெருவாக்குகளின் வித்தியாசத்தால் வரப்போகிற வெற்றி அல்ல.
சிறுபான்மை வாக்குகளின் தாக்கம் நிச்சயம் வருகிற தேர்தலில் துலங்கும்.
ஆகையால் கோட்டா தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஜனாதிபதியானதும் இயல்பாகவே தள்ளப்படுவதற்கும், தேசம் தொடர்பான ஸ்திரமான கொள்கைக்கும், வளர்ச்சிக்கும் சிறுபான்மை இனங்களை பகைத்துக்கொள்வது நல்லதல்ல என்ற யதார்தத்தை உணருதற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
அதில் அவர் தவற நேர்ந்தால் இரண்டாவது வாய்ப்பு அவருக்கு இல்லை.
இந்த தேர்தலில் என்ன செய்வதென்ற திரிசங்கு நிலை இலங்கையின் தமிழ்- முஸ்லிம் சிறுபான்மை இனங்களுக்குள் எழுந்து நிற்கிறது.
 குறிப்பு: JVP அடங்கலாக மூன்றாவது கூட்டணி அமைந்தால் ஒரு பத்து லட்சம் வாக்குகள் தேறலாம். அதனால் ஒரு சுய திருப்தி ஏற்படுவதை தவிர  வேறொன்றும் ஆகாது.
BY : முஜீப் இப்ராஹீம்