மட்டக்களப்பில் தமிழரசு உறுப்பினர்களுடன் சுமந்திரன் எம்.பி கலந்துரையாடல்.

பா.உ சுமந்திரனுடனான கலந்துரையாடல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் கிளைகளின் உறுப்பினர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் அவர்கள் இன்றைய தினம் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொ.கனகசபை, பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள், கட்சிக் கிளைகளின் உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கட்சியின் செயற்பாடுகள், தலைமைகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள், கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், மாவட்டத்தின் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் பாரபட்சம் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.