கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு

கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு (கட்டுப்பாடல்களின்தொகுப்பு) நூலின் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை (11) மாலை மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.இன்பமோகன் தலைமையில் நடைபெற்றது.
சுதந்திர ஆய்வு வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலைப் பேராசிரியர் செ.யோகராசா கலந்து சிறப்பித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் நா.வாமனின் வரவேற்புரையுடன் நடைபெற்ற இவ் வெளியீட்டு விழாவில், கலாநிதி எம்.ஐ.எம்.ஹனிபா நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்.
பிரதம அதிதியாக கலநது கொண்ட ஓய்வு நிலைப் பேராசிரியர் செ.யோகராசாவின் சிறப்புரையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், கல்விமான்கள், இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பயிலப்பட்டுவந்த மக்கள் சார் இலக்கிய மரபொன்றை பதிவு செய்வதாக இந் நூல் அமைந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூரைச் சேர்ந்த கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளராவார்.
மரபிலக்கியம், நவீன இலக்கியம், ஈழத்து இலக்கியம், நாட்டாரியல், பண்பாடு வரலாறு ஆகியவற்றில் ஈடுபாடுடைய இவர் இத்துறைகள் தொடர்பாகப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஈழத்து ஆரம்ப கால சஞ்சிகைகளில் ஒன்றான பாரதி (மண்டூர்) இதழ்களின் தொகுப்பின் ஆசிரியரான இவர் சுதந்திர ஆய்வு வட்டத்தினால் வெளியிடப்பட்டுவரும் மொழிதல் ஆய்வுச் சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராவார்.