படுவான்கரையில் பற்றி எரியும் வயல்நிலங்கள்

 

—- படுவான் பாலகன் —

‘படுவான்கரையில் தண்ணீர் இன்றி பலரின் வயிறுகள் பற்றி எரிகின்றன. அதேபோல வேளாண்மை வயல்நிலங்களும் பற்றி எரிகின்றன. என்ன அநியாயம்தான் இந்த நாட்டில நடக்கின்றது?’ என மணற்பிட்டி சந்தியில் நின்று வெள்ளையனும் விநாயகனும் பேசிக்கொண்டிருந்தனர்.

குடிநீருக்காக ஆறு ஏழு கிலோமீற்றர் சென்று நான்கு வாளி நீர் அள்ளிவிட,கிணற்றின் அடியில் மணல்தெரிய மீண்டும் நாலு வாளி தண்ணீர் ஊறும் வரை பார்த்திருந்து, வரம்பு, மேடு,பள்ளம் என முட்டியுடனும்,கலன்களுடனும் நடந்து அவற்றிலே தடக்கி வீழ்ந்து காயம் ஏற்பட்டு நாட்பொழுதில் அரைவாசிக்கு மேலான நேரத்தினை தண்ணீரை தேடி அலைவதிலேயே கழித்து,இன்று, நாளை மழை பெய்யாதா? என வானத்தினையும் அண்ணார்ந்து பார்த்து ஆண்டவனையும் நினைத்து நொந்து கொண்டு,வானம் இருள்வதும் பார்த்து சந்தோசம் அடைவதும், பின் மழைபெய்யாமல் செல்ல மனம் சோர்ந்து போவதும்,வெப்பத்தின் உச்சத்தால் உடல் எரிவதும், வாழ்வில் நிலைப்போமா? என்ற உணர்வுநிலை படுவான்கரை மக்களிடையே ஏற்பட்டிருக்கின்றது என்கிறார் வெள்ளையன்.

வெள்ளையனும்  நீருக்கான போராட்டத்தில் அகப்பட்டிருக்கின்றான். இதனால் அவனும் அதிகாலையில் இருந்து,நித்திரை செல்லும் வரை வேறு வேலைக்கும் செல்ல முடியாதவனாக நீரினை பெற்றுக்கொள்வதற்காக சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றான். அவனின் மனநிலையும் விரக்தியும், வெறுப்பும் கலந்ததாகவே இருக்கின்றது.

குடிநீருக்கான தவிர்ப்பு ஒரு பக்கமாகவிருக்க,வரண்டுபோய் கிடக்கும் வயல்நிலங்களையும்,புற்தரைகளையும், வயலிலே அறுவடை செய்த நெல்லின் வைக்கோல்களையும் சிலர் எரித்து விடுகின்றனர். இதைபார்த்தாலே மனம்நொந்து போகின்றது என்கிறார் விநாயகன். படுவான்கரைப் பகுதியில் சில இடங்களில் இவ்வாறான மோசமான செயல் நடைபெறுகின்றது. ஏன் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதை தட்டிக்கேட்க யாரும் இல்லையா? எனவும் விநாயகன் வினா எழுப்புகின்றான்.

கால்நடைகள் நீரின்றியும்,பச்சையான புற்தரைகள் இன்றியும் உண்பதற்கு உணவில்லாதும், குடிப்பதற்கு நீரின்றியும் அவதியுறும் நிலையில் கால்நடைக்கான உணவினை அழிக்கும் செயற்பாட்டை முன்னெடுகின்றார்களே! மண்ணிலே உருவாகக்கூடிய மண்புழுக்களையும்,வயல்நிலங்களுக்கு நன்மை தரக்கூடிய புழுக்களையும் அழிக்கின்றனர். வயல்நிலத்தில் பசளை தரக்கூடிய வைக்கோல்களையும் வயல்நிலத்திலே கிடந்து அழிந்து பசளையாக விடாமல் தீ வைக்கின்றனர். வரண்டுபோய் கிடந்த நிலங்களில் காட்டுத்தீ போல நெருப்பு பரவி செல்கின்றது. பார்ப்பதற்கே மனம் இடம்கொடுக்கவில்லை. வயல்களுக்கு தீ வைப்பதினால் ஏற்படக்கூடிய தீங்குகள் தொடர்பில் விளக்கமில்லாது செய்கின்றனரா?. அல்லது தெரிந்தும் புற்களை இல்லாமல் செய்கின்றோம் என்ற நிலைப்பாட்டில் செய்கின்றனரா? என்ற வினாவும் தேங்கி நிற்கின்ற நிலையில், விவசாய அபிவிருத்தியில் பங்கெடுக்கும் திணைக்களங்கள், அதுசார்ந்த உத்தியோகத்தர்கள் விவசாயிகளை உடன் அணுகவேண்டிய தேவை தற்காலத்தில் உருவாகியிருக்கின்றது.

பாரம்பரிய விவசாயச் செய்கைகளின் போதும் இவ்வாறான சிக்கல்கள் இருக்காத அதேவேளை,கடவுள் நம்பிக்கையும்,மனநம்பிக்கையும் மேலோங்கியிருந்தது. இதனால் சிறந்த விளைச்சலைப் பெற்றமையுடன்,உயிரினங்களும் தமது வாழ்க்கையினை சிறப்புற கடத்தியும் இருந்தன. தற்போது விவசாயிகளுக்கான தெளிவுபடுத்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். உரிய தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டு, இயற்கை முறையிலும்,உயிரினங்களுக்கு பங்கம் வராத வகையிலும்,இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத முறையிலும் விவசாயத்தினை மேற்கொள்வது,ஆயத்தப்படுத்து தொடர்பில் குறிப்பிட்டு, அவ்வாறான தெளிவுபடுத்தல்களையும் கேட்டதன் பின்பும் தவறுகள் இழைக்கின்றவர்களுக்கு தகுந்த தண்டணைகளை வழங்குவதுடன், அரசினால் வழங்கப்படும் மானியங்களையும் நிறுத்துவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். இன்று காடுகளை அழித்து நீரின்றி வாடுகின்றோம். அவ்வாறான நிலையினை மிகமோசமாக தொடர்ந்தும் கொண்டு செல்லாதிருக்க இப்போதே செயற்றிட்டங்களை வகுக்க வேண்டும் என்கிறார் வெள்ளையன். அவ்வாறு கூறிக்கொண்டே இருவரும் அவ்விடத்தினை விட்டு அகன்றனர்.