சாதிக்கும் படுவான்கரைப் பெண்கள்

— படுவான் பாலகன் —

படுவான்கரைப் பெண்கள் சாதிக்கப் பிறந்தவர்களே!,இவர்களின் சாதனைக்கு அளவே இல்லை. மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினை பலருக்கும் இனங்காட்டிய பெருமையும் இவர்களையே சாரும் எனக்கூறி மகிழ்ச்சி கொள்கிறார் கதிர்காமத்தம்பி.

ஆயித்தமலை சந்தியில் நின்று வீரபாகுவிடம் பேசிக்கொண்டு இருக்கையிலேயே இச்சந்தோசத்தினை வெளியிட்டார். ஏன் இவர் இவ்வாறு கூறி மகிழ்ச்சியடைந்தார் என பலரும் சிந்திக்க கூடும். உண்மையில் படுவான்கரைப்பெண்கள் செய்யும் சாதனைகள் மற்றவர்களுக்கு தெரிவதில்லை.  படுவான்கரை மக்கள் செய்யும் சாதாரண வேலைகளை நகரத்தில் உள்ளவர்களோ மற்றவர்களோ செய்தால் அவை சாதனைகளாக மாறுகின்றன. ஆனால் படுவான்கரையில் வாழும் பெண்களுக்கு அவை சாதாரண விடயங்களே. எத்தனையோ பெண்கள் இன்று கணவர்களை இழந்து பிள்ளைகளுக்கு தாயும்,தந்தையும்,சகோதரங்களாகவும் இருந்து குடும்பத்தினை வழி நடத்துகின்றனர்.  இவர்கள் அன்றாடம் செய்யும் வேலைகள், துன்பங்கள்,துயரங்களை அளவிடமுடியாது,சொல்லியும் வெளிக்காட்டிட முடியாது. கடந்த கால வரலாறுகளை மீட்டிப்பார்க்கும் போது இங்குள்ள பெண்களுக்கென தனி வரலாறு கூட இருக்கின்றது. இதனைச் சொல்லி விளக்கவேண்டிய அவசியம் இருக்காது,அவ்வாறு தெரியவில்லையெனக் கூறினால்,அவ்வாறானவர்களே வெட்கித் தலைகுனிய வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படுவான்கரைக் கிராமங்களை உள்ளடக்கியிருக்கின்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், கிழக்கு மாகாணத்தின் விளையாட்டுப் போட்டியில் பலதடவை வெற்றிகளை குவித்திருக்கின்றது. இவ்வெற்றிகளை நிலைநாட்டியவர்கள் பெண்களே. கடந்த கால ஐந்து வருட பகுப்பாய்வுகளைப் பார்க்கின்ற போது,மாகாணமட்டத்தில்,கரப்பந்தாட்டத்தில் 2014தொடக்கம் 2018வரை1தொடக்கம் 3வரையான இடங்களில் ஒன்றினை 19/20வயதுப்பிரிவு பெண்கள் அணியினர் பெற்றுவந்திருக்கின்றனர். உதைபந்தாட்டம், எல்லே,கபடி, துரோபந்து போன்ற போட்டிகளில் மாகாணத்தில் பெண்கள் அணியினரே பெரும்பான்மையாக வெற்றியீட்டி,தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியிருக்கின்றனர். குழு விளையாட்டுக்களில இவ்வாறு சாதித்தித்து மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு முகவரி கொடுத்தமை போன்று, தனி விளையாட்டிலும் இங்குள்ள பெண்கள் வெற்றியீட்டியிருக்கின்றனர்.100மீற்றர் ஓட்டம், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல்,அஞ்சல், 80மீற்றர், 200மீற்றர், 400மீற்றர், 800மீற்றர்,குண்டுபோடுதல், 1500மீற்றர், 5000மீற்றர் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்று வந்திருக்கின்றமையினையும் இங்கு சுட்டிக்காட்டிட முடியும்.

மாகாணத்தில் சாதித்து,தேசியத்திற்கு தெரிவாகியுள்ளார்கள் என்று கூறினால், இவர்களின் வெற்றி அவர்கள் செய்த செயற்பாட்டின் மூலமாக பெறப்பட்டவையே. ஏனைய வசதி கூடிய பாடசாலைகளில் நடத்தப்பட்டு வருகின்ற விளையாட்டுப் பயிற்சியின் ஊடாக இவர்கள் வெற்றிகளை சூடவில்லை. மாறாக யானைகளுக்கு பயந்து நாள்தோறும் ஓடிப்பயணிப்பதும்,வீட்டிலிருந்து பாடசாலைக்கு நீண்ட தூரம் ஆகையிலும் களைப்பின்றி நடப்பதனாலும்,துவிச்சக்கரவண்டி ஓடியதனாலும், பள்ளம்,படுகுழிகளை தாண்டி பாய்ந்தும், காடுகளை கடந்தும் செல்லுதலுமே இவர்களுக்கு கிடைத்த பயிற்சிகள் எனலாம். பாடசாலைகளில் ஒழுங்கான விளையாட்டு மைதானங்கள்,விளையாட்டுக்கான உபகரணங்கள்,விளையாட்டுக்கான நுட்ப பயிற்சிகள் இல்லாது இவ்வாறு சாதிக்கின்றார்கள் என்றால்,வசதிபடைத்த பாடசாலைகளுக்கு கிடைக்கும் வரப்பிரசாதங்கள் இவர்களுக்கு கிடைத்தால், இவர்கள் புரியும் சாதனைகளும் எந்தளவு பல்மடங்காக அமையும் என சிந்திக்க வைக்கும்.

வருடாந்தம் சாதனைகளை நிலைநாட்டிய பாடசாலைகளை பார்க்கின்ற போதும்,அப்பாடசாலைகள் காடுகளை அண்டிய பகுதிகளாகவே உள்ளன. இதுவரை மகிழவெட்டுவான்,இருட்டுச்சோலைமடு,காயன்குடா, ஆயித்தியமலை,பன்சேனை, அம்பிளாந்துறை,கடுக்காமுனை, போன்ற பாடசாலைகளையே அதிக வெற்றிகளை தமதாக்கி இருக்கின்றன. அதேபோன்று விளாவெட்டுவான்,நாவற்காடு, வவுணதீவு,கன்னன்குடா, கித்துள்,முனைக்காடு போன்ற பாடசாலைகளும் ஒருசில வருடங்களில் வெற்றிகளை பெற்றிருக்கின்றன. ஆனாலும்,அதிகம் வெற்றிகளைப் பெற்ற பாடசாலைகளாக எல்லைப்புற பாடசாலைகளையே பார்க்க முடிகின்றது.

சாதிக்கக்கூடிய பெண்கள் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ளமையுடன், தொடர்ந்தும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். இவர்களுக்கு பல்வேறு விடயங்கள் தடங்கல்களாக உள்ளபோதிலும் சாதிக்கின்றனர். இவர்களின் உடல்களிலே அதற்கான சக்தி இருக்கின்றது. இவர்களுக்கு தேவை நுட்பமே. இதனை வழங்கக்கூடியவர்கள் பயிற்றுவிப்பாளர்களே. பல பாடசாலைகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. தற்போதுதான் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நியமிக்கப்பட்டவர்களுள் ஒருபகுதியினர் படுவான்கரைப்பகுதியினர் என்பதில் கதிர்காமத்தம்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. இவர்களின் மூலமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மாணவர்கள் இன்னும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கதிர்காமத்தம்பி போன்றவர்கள் இருக்கின்றனர். இந்த வருட கிழக்கு மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் பெண்கள் பிரிவு தனிவிளையாட்டுப் போட்டியில்3வது இடத்தினை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் நிலைநாட்டியுள்ளது. இவ்வாறான சாதனைகளை நிலைநாட்டுவதற்கு இன்னும் பல படுவான்கரைப் பெண்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவையும் உள்ளதாக கூறி கதிர்காமத்தம்பி அவ்விடத்திலிருந்து அகன்றான்.