த.தே.கூ உள்ளுராட்சி உறுப்பினர்கள் மஹிந்தவைச் சந்திதார்கள் என்ற செய்தி ஊடகம் உட்பட அனைவரையும் ஏமாற்றமடையச் செய்துள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளார்கள் என்று வெளியாகியுள்ள செய்தி மூலம் சில ஊடகங்கள் உட்பட மஹிந்த தரப்பினர் பலரும் ஏமாற்றப்பட்டுள்ளனரே தவிர அவரைச் சந்தித்தவர்கள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்ததாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் சனிக்கிழமை 10ம் திகதி மாலை கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்துள்ளதாக புகைப்படத்துடன் கூடிய செய்தியொன்று வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தில் உள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவ்வகையிலே இச்செய்தி ஒரு பிழையான செய்தியாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இவ்வாறானதொரு பிளவுகள் ஏற்பட்டுள்ளன என்கின்ற செய்தி ஒரு முக்கியத்துவம் பெறக்கூடிய செய்திதான். ஆனால், இந்தச் செய்தி பலரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதே தவிர எவ்வித உண்மைத் தன்மையும் கொண்டதல்ல.

அந்தவகையில் வருகை தந்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களே என நம்பிக்கொண்ட மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார். அத்தோடு மட்டுமல்லாது அவர்களை சந்தித்துக் கலந்துரையாடிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்குமேலாக ஏமாற்றப்பட்டுள்ளார்.

எனவே இவ்விதம் தம்மைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்று சொல்பவர்கள் தொடர்பில் ஊடகங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  என தெரிவித்தார்.