மட்டக்களப்பில் பேச்சியம்பாள் வழிபாடு

மட்டக்களப்பு மாநிலத்தில் பேச்சியம்பாள் வழிபாடு பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்தே இவ்வழிபாடு இங்கு பரவியுள்ளது என்பதற்கு “கம்சவதம்” நிறுவி நிற்கின்றது. ஆயர் பாடியில் அவதரித்த கம்ச சங்கார காரண நாரணிக்கு தமிழ் நாட்டில் வழிபாடு ஓரிரு இடங்களிலேதான் நடைபெறுவதாக அறிய முடிகின்றது. திருநெல்வேலியில் கழுகு மலைக்கு அருகிலுள்ள பேச்சியாலயம் பற்றிக் கூறப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் ஆகாயப் பேச்சி, பள்ளயப் பேச்சி, சுடலைப் பேச்சியென மூன்று வகையாகப் பேசப்பட்டாலும் அதிகமாகப் பள்ளயப் பேச்சி, ஆகாயப் பேச்சி வழிபாடுகளே மேலோங்கிக் காணப்படுகின்றன. இப்பிரதேசங்களில் காணப்படும் மாரியம்பாள் ஆலயங்களிலே அதிகமாக பேச்சியம்பாளையும் ஒரு பரிபாரத் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காளி கோவில்களிலும் பரிபாரத் தெய்வங்களிலொன்றாகவே பேச்சியம்பாள் வழிபடப்படுவதும் காணப்படுகின்றது. உதாரணமாக புன்னைச்சோலைப் பத்திரகாளியாலயம், ஆரையம்பதி வடபத்திரகாளி யாலயங்களையும் குறிப்பிடலாம்.

பேச்சியம்பாளின் அவதாரம் பற்றி இந்தியாவின் தமிழகத்திலே பல்வேறுபட்ட கர்ணபரம்பரைக் கதைகள் வெவ்வேறு பட்ட கருத்துக்களைக் கூறிநிற்கின்றன. தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் சங்கராச்சாரியார் சுவாமிகள் பேச்சியம்பாள் பற்றிக் கூறியுள்ளார். திருநெல்வேலி பேச்சியம்பாளின் தோற்றம், உற்பத்தி பற்றியவ் வாலய வரலாறு கூறுவதிலிருந்து சங்கு, சக்கர, அபய, வரத கைகளுடன் சாந்த சொருபியாகவும், பேசாதவர்களைப் பேசவைக்கும் பேச்சியம்பாளாகவும் அதனால் சரஸ்வதி யென்னும் பெயர் பெறுகின்றாள். காரணகாரியத்தோடு பேச்சியம்பாளின் அவதார வரலாற்றினை சரியான ஒழுங்கு முறையில் கூறி எழுதுவதற்கு உத்வேகம் அளித்த மதிப்புக்கும் வணக்கத்துக்கு முரிய சுவாமி பிரமச்சாரி ஜாக்ரத்சைத்தன்யா (சின்மயா ஆச்சிரமம், இராம்போடை) அவர்கள் பேச்சியம்பாள் பற்றிச் சொன்னதையும் இங்கு கூறுகின்றேன்.
உலகில் அதர்மம் மலிந்து தர்மம் அழிந்து போகும் காலை அவ்வப் போது அதர்மத்தை அழித்து தர்மத்தை ஸ்தாபிதம் செய்வதற்கு பல வடிவங்களில் பல்வேறு அவதாரங்களை எடுத்து அருளியிருப்பதனை இந்து சமய வேதாகம, புராணங்கள் விளக்கி நிற்கின்றன. இந்த வகையில் சைவசமயத்தின் முழுமுதற பரம்பொருளான சிவன் பன்னீராயிரம் அவதாரங்கள் எடுத்துக் காக்கும் அதேவேளை இறையின் திருவருள் சக்தியாகிய பராசக்தியும் அதற்கீடாக அவதாரங்களை எடுத்து அருளாட்சி புரிந்திருப்பதனைக் காணலாம். இறைவனது இத்தகைய அவதாரங்களுள் ஒன்றாகவே பேச்சியம்பாள் அவதார அற்புதங்களும் மனங்கொள்ளத் தக்கதாகும்.

பரமனொரு போது பன்னீராயிரம்
உருவெனத் தோற்ற
எவ்வுயிர்க் குயிராயுத்தமி
உமைவராகி உமாபதி லீலி…
பித்தனாருடன் பேச்சியானவளே…
எனப் பேச்சியம்பாள் அகவல் கூறி நிற்பதிலிருந்து புலனாகின்றது. பேச்சியின் அவதார நோக்கங்களுள் ஒன்றாக கம்சசங்கார காரணநாரணி பற்றியிங்கு அறிய விளைவோம். பேச்சியம்பாளுக்கு அம்மச்சி, அம்மூச்சி, பிடாரி, பணிக்கக்காரி, கருணைசொருபி யென்று பற்பல நாமங்கள் உள்ளதாக அறிய முடிகின்றது. விபுலானந்தர் யாழ் நூலை யார்ப்பதற்கு முன்னர் கல்லடி- உப்போடை பேச்சியம்பாளை வழிபட்டு பத்து விருத்தப்பா பாடியதில் ஐந்தாவது விருத்தப்பாவில் பேச்சியம்பாளை சாரதா தேவியராகக் காண்பதாகவும் பாடியுள்ளதை அறியக் கூடியதாக உள்ளதும் ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.

கிரேதாயுகத்தில் படியளக்கும் பரம்பொருளான பகவானிடம் பரபக்திகொண்ட பல தேவர்கள் அவரைப் பல முறைகளில் தொட்டு (பற்றி) இன்புற விருப்புக்கொண்டு பல வடிவங்களில் அவதரித்து தங்கள் தங்கள் வேண்டுகோள்களைப் பூர்த்தி செய்யும்படி தவமியற்றி வேண்டுதல் செய்தனர். கிரேதாயுக இராமபிரான் அவதாரத்தில் ஏகபத்தினி விரதனாக இருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத நோக்கின் போக்கினை நிலைநிறுத்தி இந்த உயர்வான இலட்சியத்தை காப்பதுவே இவ்வவதாரத்தின் காரணகாரியத்தில் ஒன்றாகும் என்பதையும் துபாபரயுகத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுக்கும் போது உங்களுள் தவம் பலிதமடையுமென்றும் பகவான் திருவாய் மொழிந்தருளிய படி, வாசுதேவரும் தேவகியும் பகவானே தங்களுக்;கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும், நந்தபோபனும் யசோதையும் பகவானை மகனாக வளர்க்க வேண்டும் என்றும் பல காலம் தவம் செய்த பலனும்; துபாபரயுகத்தில் நிறைவேறும் என்றார்.

ஒரு நாள் பிரம்மா உலகத்தில் கந்தரூபர்கள் அறுவரும் பிரமனைக் கேலி செய்ததனால் கோபமுற்ற பிரமன் துபாபரயுகத்தில் பூலோகத்தில் போய்ப் பிறக்கக்கடபது எனச் சாபமிட்டார். அந்த அறுவரும் பூலோகத்தில் பிறந்து நெடுங்காலம் வாழவிரும்பாது நாரதர் பாதாரவிந்தங்களைப் பணிந்து,“சுவாமி! நாங்கள் எங்கு பிறந்தாலும் அங்கு வந்து கலகம் செய்து எங்களை மீண்டும் எங்கள் பதவிக்கு அனுப்பி வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டனர். துபாபரயுகம் ஆரம்பமானது அப்போது வடமதுராவை உக்கிரசேனன் என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனின் ஒரு மகன் கம்சன் கெட்ட நண்பர்களின் தீய சகவாசத்தாலும் துற்புத்தியாலும் தந்தையைச் சிறையிலடைத்து தான் ஆட்சியைக் கைப்பற்றி அதர்ம வழியிலே கொடுமைகள் புரிந்து மக்களைத் துன்புறுத்தி கொடூர ஆட்சி நடத்தினான். அக்காலை தமது குருவாகிய வாசுதேவருக்கு தமது சித்தப்பா தேவகன் மகளான தேவகியை திருமணம் செய்து வைத்து அவர்களைக் கம்சன் தேரினிலே ஏற்றி அழைத்துச் செல்கின்ற வேளை “அடேய் கம்சா! உல்லாசமாய் அழைத்துச் செல்லும் உனது தங்கையின் எட்டாம் மகனாலேயே உனக்குக் கட்டாயம் மரணம் ஏற்படும்” என்று ஆகாய மார்க்கமாக ஓர் அசரீரி கேட்டது. அந்த நிமிடமே கம்சன் பந்த பாசம் மறந்தான். சகோதரியின் கூந்தலைப் பிடித்து இழுத்து உடை வாளை உருவி வெட்ட முயன்ற போது “பொறு, பொறு கம்சா! உனக்கு இவளா இயமன்? எமக்குப் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையையும் உன்னிடமே ஒப்படைக்கின்றோம். குழந்தைகளை எது வேண்டுமாயினும் செய்து கொள், இப்போ அவளை விட்டுவிடு” என்ற குருதேவரின் கட்டளைப் படி விட்டுவிட்டான்.

முதலாவது குழந்தை பிறந்ததும் கம்சனிடம் வசுதேவர் குழந்தையைக் கொடுக்க “இந்தப் பிஞ்சுக் குழந்தையா என்னைக் கொல்லப் போகிறது, எட்டாவது குழந்தையாள் தானே எனக்கழிவு? நீங்கள் கொண்டு சென்று வளருங்கள்” என்று கூறிக் குழந்தையை கொடுத்து விட்டான். இவ்வாறே அடுத்தடுத்துப் பிறந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் படி கொடுத்து விட்டான். அவனது அரச சபைக்கு வந்த நாரதரை வரவேற்ற கம்சன் ஏதாவது விசேடமா நாரதனே என வினவ,“ஆறு குழந்தைகளும் உனக்கு இயமனாச்சே? ஏன் விட்டு வைத்திருக்கின்றாய்? எட்டாவது குழந்தையால் கட்டாயம் அழிவென்றால், எட்டாவது குழந்தையில் இருந்து மறு புறமெண்ணினால் முதலாவது குழந்தையும் எட்டாவதாகத் தானே வரும்” என்று நாரதர் கூறிச் செல்ல, தங்கையின் வீட்டிற்குச் சென்ற கம்சன் ஆறு குழந்தைகளையும் ஒவ்வொன்றாகக் காலில் பிடித்து சுவரில் மோதியடித்துக் கொல்ல தங்கை அழுது அரற்றியும் அவன் கேட்கவில்லை. நாரதரிடம் கந்தரூபர்கள் கேட்டுக் கொண்டபடி அவர்களின் வேண்டுகோள் நிறைவேறியது. ஆனால் தேவகி ஏழாவது கற்பமுற்றதை அறிந்த கம்சன் பயந்து, வசுதேவரையும் தேவகியையும் கால், கைகளுக்குச் சங்கிலி பூட்டிச் சிறையில் வைத்து பலத்த காவலும் வைத்தான். ஐந்து மாதக் கற்பத்தில் இருந்த குழந்தையை, பகவான் வசுதேவரின் முதலாவது மனைவியாகிய ரோகினி வயிற்றுக்கு மாற்றி விட்டார். கம்சனிடம் கற்பம் கலைந்து விட்டது என்று பொய் கூறினார்கள். எட்டாவது கற்பம் உற்றாள் தேவகி. எட்டாவது எனக்கு இயமன் எனவே எந்த வகையிலும் தப்பிக்க விடக் கூடாது என்று பாதுகாப்பை பலப்படுத்தினான். அதே சமயத்தில் ஆயர் பாடியில் யசோதரையும் கருவுற்றிருந்தாள்.

இறைவனுடைய ஆலோசனைப்படி மாயையால் உலகமாதாவாகிய ஆதிபராசக்தியை யசோதை வயிற்றில் குழந்தையாகப் பிறக்கும் படி அனுப்பி வைத்தார் பகவான். ஒரே நேரத்தில் வசுதேவர், தேவகி இருவர் கனவிலும் தோன்றி பகவானாகிய நானே உங்கள் தவப்படி பிறக்கின்றேன். நானிங்கு பிறக்கும் அதே நாளில் சில நாளிகையின் பின்னர் ஆயர் பாடியில் யசோதை வயிற்றில் எரு பெண் குழந்தை பிறக்கும் “வசுதேவரே! சிறைக்கதவுகள் தானாகத் திறக்கும், விலங்குகள் விலகி வழிவிடும். என்னைக் கூடையிலே எடத்தச் சென்று ஆயர் பாடியில் யசோதையருகே கிடத்தி விடு. அங்கே இருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு சேரும். எல்லாம் நல்ல படியாகவே நடக்கும்” என்று கூறியதற்கமையவே குழந்தை பிறந்ததும், வசுதேவர் செயற்படுத்தினார். சிறைக்கதவு தானாகவே மூடிக்கொண்டது. விலங்குகள் மறுபடியும் பூட்டிக் கொண்டன. தேவகியருகில் கிடத்தப்பட்ட பெண் குழந்தை “குவா குவா” எனக் குரல் கொடுத்து அழுதது. குழந்தையின் அழுகுரல் கேட்ட கம்சன் “எட்டாவது குழந்தை பிறந்து விட்டது” என்று சத்தமிட்ட படி சிறையை நோக்கி அமைச்சர் பின் தொடர ஓடி வந்தான். கம்சனின் கொலை வெறிக் கோலத்தை கண்ட தேவகி,“அண்ணா இது பெண் குழந்தையடா? இந்த குழந்தையா உனக்கு யமன்? விட்டு விடுங்கள் அண்ணா” எனக் கண்ணீர் மல்கிக் கதறினாள். “இல்லவே இல்லை இது எட்டாவது குழந்தை ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரிஇதனாலேயே எனக்கழிவு” என்று சொல்லிக் கொல்ல நினைக்கையிலே அருகே சென்ற அமைச்சர்,“அரசே! குழந்தையைத் தூக்கி மேலே வீசுங்கள், வாளைத் திருப்பிப் பிடியுங்கள் குழந்தை வாளில் பட்டு வெட்டுண்டு இறந்து விடும், பாவம் உங்களுக்கில்லை என்றான். அதுவும் சரிதான் என்று ஆமோதித்த கம்சன், குழந்தையின் கால்களைப் பிடித்து மேலே வீசினான். வாளைத் திருப்பி பிடித்தான். ஆனால், மேலே நிமிர்ந்து பார்த்த கம்சன் ஆகாயத்தில் கண்ட காட்சியும் கேட்ட வார்த்தைகளாலும் வாய்பிளந்து, விழிகள் பிதுங்க மெய் மறந்து நின்றான்.

மேலே சென்ற குழந்தை உருப்பெருத்த பெண்ணாகிப் பித்துப் பிடித்தவள்போல் நின்றதையும் பித்தனாகிய சிவனார்,“நில்லு பேச்சி! நில்லு பேச்சி! என்று கூறியதும், கண்கள் கோபாக்கினி கொண்ட பேச்சி கோலம் மாறிப் பராசக்தி அசுரர்களை அழிப்பதற்காக எப்போதும் அவதாரம் எடுக்கும் நீலியுருக் கொண்டு,“அடேய் கம்சா! நானே உன்னை அழித்திருப்பேன், ஆனால் நீ தெரிந்தோ தெரியாமலோ என் பாதங்களைப் பற்றி விட்டாய் என்பதற்காக உன்னை விட்டு விட்டேன் உன்னழிவுக்கு நானே மூலகாரணி விட்டு விட்டேனென்று மெத்தனம் கொண்டு எக்களிப்புக் கொள்ளாதே. ஆயர்பாடியில் என் அண்ணன் கண்ணன், மாயக்கிருஷ்ணன் உன்னையழிக்கவென்றே வளர்கின்றான்” என்று கூறியதைக் கேட்ட கம்சன் அதிர்ச்சியால் வாயுழற நீ யார்? என்றான். தன்னையறியாமலே தன்னிரு கைகளையும் கூப்பி நின்ற கம்சனுக்கு சங்கு, சக்கரம் ஏந்திய கைகளுடன் அபய, வரதம் காட்டிய கரங்களுடனும் சாந்த சொரூபியாக காட்சியளித்து, நாராயணி தானே என உணர வைத்தாள். மருண்டு நின்ற கம்சன் மயங்கி வீழ்ந்தான். அரனார் பேச்சியை நோக்கி,“நீ ஆகாய மார்க்கமாக நின்றவதாரம் காட்டியதால் இன்று முதல் ஆகாயப் பேச்சியாகி அடியார்களுக்கு அனுக்கிரகம் செய்வாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஆயர்பாடியில் வளர்ந்த கண்ணன் படிப்படியாக தமது அவதார நோக்கை நோக்கிப் பல வகையான திருவிளையாடல்களை காட்டி, அவரின் அவதார நோக்கங்களுள் ஒன்றான தனது தங்கை பேச்சியின் கூற்றுப்படி மாமன் கம்சனை வதம் செய்ய ஆயர் பாடி மக்கள் அகம் மகிழ்ந்து கண்ணனுக்கு கனத்த விழா எடுத்ததோடு கண்ணனின் ஆஞ்சைப்படி, ஆண்டுதோறும் கம்சசங்கார காரணியான பேச்சியம்பாளுக்கு தண்ணீர்ச்சோறு, பால், தயிர், பலகாரங்கள், கூழ், சர்க்கரை, கற்கண்டு, கனிவர்க்கங்களுடன் சிறு குழந்தைகளையும் வைத்து அவர்களுக்கும் பள்ளயம் படைத்து, பூசகர்கள் கன்னிமார் பூசை செய்து பேச்சியன்னையை குளிர்வித்ததனாலேயே பள்ளயப் பேச்சி எனப் பெயர் பெற்றதாகவும், இவ்வகையான தண்ணீர்ச்சோறு, பால், தயிர், பலகாரங்கள், கூழ், கர்க்கரை, கற்கண்டு, கனிவர்க்கங்கள் சேர்ந்த படையலை மக்கள் விருந்தாக எண்ணாமல் ஆண்டுக் கொருமுறை பேச்சியன்னையர்க்கு பள்ளயமாயளித்து நோய் தீர்க்கும் மருந்தாக எண்ணி உண்டு பல வகையான நோய் நொடிகளையும் தீர்த்துக் கொள்கின்றார்கள்.

மட்டக்களப்பு மாநிலத்தில் கல்லடி- உப்போடை நொச்சிமுனைப் பேச்சியம்பாள், சின்ன ஊறணி ஆதிபேச்சியம்பாள், சிறுவாமுனை ஸ்ரீபேச்சியம்பாள், ஆரையம்பதிப் பேச்சியம்பாள், குருக்கள் மடம்- வெள்ளக்கட்டுப் பேச்சியம்பாள், மொறக்கட்டான்சேனை ஸ்ரீபேச்சியம்பாள், விநாயகபுரம் பேச்சியம்பாள், பெரிய நீலாவணைப்பேச்சியம்பாள், விளாவெட்டுவான் ஸ்ரீபேச்சியம்பாள், வாழைச்சேனை ஸ்ரீபேச்சி, குளுவினாமடு பேச்சியம்பாள், குடும்பிமலைப் பேச்சியம்பாள், வெல்லாவெளிப் பேச்சியம்பாள் ஆகிய கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபட்டு வரப்படுகின்றாள். மேற்கூறப்பட்ட கோயில்களில் ஆண்டுக்கொருமுறை வெவ்வேறு மாதங்களில், வெவ்வேறு எண்ணிக்கையான நாட்களில் கதவு திறத்தலுடன் சடங்கு ஆரம்பமாகிப் பள்ளயச் சடங்குடன் கும்பம் சொரிதலுடன் நிறைவு பெறுகின்றது. இவற்றுள் மிகப் பிரசித்தி பெற்ற ஆலயங்களாகவும் மட்டக்களப்பு மாநில மக்கள் மட்டுமன்றிப் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாட்டு மக்களாலும் நம்பிக்கையோடு வழிபடப்படும் ஆலயங்களாக கல்லடி- உப்போடை நொச்சிமுனைப் பேச்சியம்பாள் ஆலயமும் ஆரையம்பதி பேச்சியம்பாள் ஆலயமும் விளங்குகின்றது.

கல்லடி- உப்போடைப் பேச்சியம்பாளின் சடங்கு ஆண்டு தோறும் ஆடியமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி ஒன்பதாம் நாள் திங்கட்கிழமை மாலை பள்ளயச் சடங்கு நிறைவு பெற்று கடலில் கும்பம் சொரிதலுடன் நிறைவு பெறும். ஆரையம்பதி பேச்சியம்பாள் சடங்கு ஆடிமாதம் வரும் ஒரு வெள்ளிக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி அடுத்து வரும் வெள்ளிக்கிழமை தீப்பள்ளயம் நடைபெற்றுச் சனிக்கிழமை அதிகாலை பள்ளயச் சடங்குடன் நிறைவுற்று கடலில் கும்பம் சொரிதலுடன் நிறைவு பெறும். காளி, பேச்சி, மாரிக்கு கும்பங்கள் வைத்து பத்ததி முறைப்படி வழிபாடு இயற்றுவர். பேச்சியம்பாள் வழிபாட்டுக்குரிய பத்ததியில் பள்ளயப் பேச்சிப் பத்ததி, சுடலைப் பேச்சிப் பத்ததி எனும் இருபத்ததிகளே உள்ளன. அவற்றிலேதான் ஆகாயப் பேச்சிக்குரிய பூசை முறைகளும் காணப்படுகின்றன. அதிகமான ஆலயங்களில் ஐந்து நாட்கள் அல்லது மூன்று நாட்கள் சடங்கு நடைபெற்று வருகின்றன. தேவாதிகள் ஆடி அடியவர்களுக்கு வாக்குகள், மருந்தளித்து வருவது பேச்சியம்பாள் ஆலயச் சடங்குகளில் விசேட தன்மையாகும்.
சில ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, பூரணைப் பூசைகள் நடைபெறுகின்றன.

மூ.அருளம்பலம் (ஆரையூர் அருள்)