பட்டத்தை பூர்த்திசெய்த , வருடத்தை கருத்திற்கொண்டே பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கினோம் : பிரதமர்

பட்டத்தை பூர்த்திசெய்த வருடத்தை கருத்திற்கொண்டே பட்டதாரிகளுக்கு  நியமனங்களை வழங்கினோம். அத்துடன் நியமனம் பெற்றுக்கொள்ளாதவர்களின் வெற்றிடங்களை தேடிப்பார்த்து வெளிவாரி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடம் கேள்வி கேட்கும் நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா, பட்டதாரிகளை அரச துறைகளுக்கு இணைத்துக்கொள்ளும் போது பின்பற்றிய முறைமை, வெளிவாரி பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் இதுவரை நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் எண்ணிக்கை தொடர்பாக கேட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பயிலுநர் பட்டதாரிகளை அரச துறைகளில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் பிரகாரம் 2018 மே மாதம் 25ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் பல கட்டங்களாக வேலையற்ற பட்டதாரிகளை பயிற்சி வழங்கும் கீழ் இணைத்துக்கொள்வதன், முதலாவது கட்டமாக 2018 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி பயிலுநர் பட்டதாரிகள் 3ஆயிரத்தி 200பேர் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தோம்.

அதன் பின்னர் இரண்டாம் கட்டமாக பயிலுநர் பட்டதாரிகள் 16ஆயிரத்தி 800பேருக்கு கடந்த ஜூலை மாதம் 30, 31ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் நியமனக்கடிதம் வழங்க முடியுமாகியது. இவ்வாறு வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க மிகவும் சாதாரண முறைமையொன்றை பின்பற்றினோம். அதன் பிரகாரம் பட்டத்தை பூர்த்திசெய்த வருடத்தை கருத்திற்கொண்டு அந்த நியமனங்களை வழங்கினோம் என அவர் மேலும் தெரிவித்தார்.