அம்பாறையில் காலநிலை மாற்றத்தால் கடற்றொழில் பாதிப்பு

கடந்த இரு தினங்களாக தொடர்ச்சியாக காலநிலை மாற்றம் நிலவுவதால், தமது கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

குறிப்பாக நேற்று (02) மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டதோடு, கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்பட்டதால்,  மீன்பிடி குறைவடைந்துள்ளதாகவும், மீனவர்கள் தெரிவித்தனர்.

இதனால் கரைவலை மீனவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, மாயவலை மீனவர்கள் சில இடங்களில் மீன்பிடியில் ஈடுபட்டு வருமானம் ஈட்டி வருவதாகவும், மீனவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மீனவர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

திடீரென கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் மீன்பிடித்தொழில் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், அன்றாட மீன்பிடி  குறைவடைந்துள்ளதனால் நாளாந்த வருமானமும் பாதிப்புற்றுள்ளது.

கடல் நீரோட்டத்தின் தன்மையின் மாற்றம் காற்றின் வேகம் , நீரின் தன்மையின் மாறுதல் போன்ற காரணிகளால் கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.