இந்தமுறை வெல்லப் போவது பிரேமதாச மாத்திரமல்ல மக்களும்தான்

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நவம்பர் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு நான் தயாராகி விட்டேன் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரமேதாச தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமூலையில் இந்திய நிதி உதவி மூலம் அமைக்கப்பட்ட காந்தி மாதிரிக் கிராமம் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அல்மஜ்மா நகரில் அமைக்கப்பட்ட முகைதீன் அப்துல் காதர் மாதிரிக் கிராமம் என்பன மக்களிடம் இன்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

கல்குடாப் பிரதேசத்தில் மக்களிடம் கையளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கான பிரதான நிகழ்வு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

எமது நாட்டு மக்களுக்காக, அவர்களுடைய தேவைக்காக, மக்களுடைய அபிவிருத்திக்காக என்னை அர்ப்பணிப்பதே எனது நோக்கம். எனவே அனைவரும் ஒன்றிணைந்து நீங்கள் வழங்கும் ஒத்துழைப்புடன் நாட்டு மக்களை  ஐக்கிய இலங்கைக் கூடாக, தேசிய பாதுகாப்புக் கூடாக, சிறந்த முற்போக்கு அபிவிருத்திக் கூடாக நாட்டை கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.

உங்களால் வெற்றி பெற முடியுமா?, வெற்றி பெறுவீர்களா என்று கேட்கின்றார்கள். பிரேமதாச தேர்தலில் தோல்வியுற்றதில்லை, இந்த பிரேமதாசவும் தோற்க போவதில்லை. இந்தமுறை வெல்லப் போவது பிரேமதாச மாத்திரமல்ல மக்களும்தான் . எனவே உங்களின் வியர்வை மற்றும் உழைப்பை உயர்ந்தவனாக  உங்களில் ஒருவனாக, எனது ஆடை எந்த மாற்றமும் வராமல், சிம்மாசனத்தில் அமர்வதற்கு ஆசைப்படுபவன் அல்ல.

உங்ளோடு இருந்து கொண்டு உங்களுக்காக சேவை செய்வதற்கு எப்போதும் உள்ளேன் என்பதை கூறுவது வேறு யாருமல்ல சஜித் பிரேமதாச என்பதை கூறிக் கொள்கின்றேன். நாட்டு மக்கள் புதிய பாதையை, புதிய வேலைத் திட்டங்களை நோக்குகின்றார்கள். புதிய அபிவிருத்தி வளங்கள் என்பவற்றுக்கான நாட்டிலே தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள். தொழில் முயற்சி மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இரண்டிலும் தான் ஒரு நாடு அபிவிருத்தியின் பால் ஈர்க்கப்படும்.

இன்று அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகின்றார்கள். தொழில் முயற்சியை பேசுகின்றார்களே தவிர தொழில் முயற்சியின் மூலம் இலங்கை அபிவிருத்தி அடைந்துள்ளது என்றால் பொய் என்றே கூற வேண்டும். கனிசமான அளவுக்கு இலங்கையில் தொழில் முயற்சியை பயன்படுத்தவில்லை.

அரசியல்வாதிகள் பேசும் பேச்சளவிற்கு தொழில் முயற்சிகள் அபிவிருத்தி காணவில்லை என்றே கூறவேண்டும். நான் உங்கள் மத்தியில் வீணான பேச்சுக்களை பேசவரவில்லை. வெறும் பேச்சில் மாத்திரம் தங்கியிருப்பவன் அல்ல. நவம்பர் மாத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு சரியான முடிவாக இருந்தால் அந்த முடிவின் பால் செயற்பட ஆசைப்படுகின்றேன்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 332 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றது. இந்த பிரதேச செயலகங்களில் தொழிற்சாலைகள், தொழில்பேட்டைகளை அமைக்க இருக்கின்றேன். காலஞ்சென்ற எனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இறுநூறு தொழில் பேட்டைகளை அமைத்தார்கள். இதனால் ஏழை எழிய மக்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது.

எனவே எனது தந்தைம வழியில் நானும் 332 பிரதேச செயலகங்களில் தொழில் பேட்கைளை உருவாக்கி உங்களையும், உங்கள் பிரதேசத்தையும் அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டங்களை கொண்டு வருவேன். நீங்கள் ஒத்துழைக்கும் பொழுது உங்களுக்கான இந்த பணியை செய்வேன்.

தற்போது 2548 மாதிரி கிராம வீட்டுத் திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. நாட்டு மக்கள் நவம்பர் மாதங்களின் சரியான தீர்மானங்களை எடுக்கும் பொழுது இதே போன்று இருபதாயிரம் மாதிரிக் கிராமங்களை உருவாக்குவேன் என்று உறுதி வழங்குகின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.தரங்ஜித் சிங் சன்து, இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட சிரேஷ்ட முகாமையாளர் க.ஜெகநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள், மதகுருமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.