ஆயுத பலத்தால் முடியாததை அறிவுப் பலத்தால் சாதிப்போம்! தமிழரசு செயலாளர் துரைராஜசிங்கம்

எமது ஆயுதப் போராட்டத்தால் தகர்க்க முடியாத இறுகி வைரமாகியிருக்கின்ற இலங்கையின் பேரினவாதச் சிந்தனையை அறிவுப் பலத்தால் வென்றெடுக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். இதற்கான புற அழுத்தங்களையும்கூட பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பயன்படுத்தியும் வந்திருக்கின்றோம். எந்த விதத்திலும் அலட்சியமோ, தொய்வோ, பிற்போடலோ இல்லாமல் அந்தரங்க சுத்தியோடும் முழுமையான ஈடுபாட்டோடும் தான் நாங்கள் செயற்படுகின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாட்டுத் தீர்மானங்களைச் செயலுருவாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது தேசிய மாநாடு இனிதே நடந்தேறியது. கடந்த ஆனி 28,29,30ம் நாட்களில் இம்மாநாடு நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மார்டீன் வீதி தலைமைச் செயலகம், நல்லூர் இளங்கலைஞர் மண்டபம் மற்றும் யாழ் வீரசிங்கம் மண்டபம் ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இறுதி நாள் நிகழ்வு தமிழரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை செல்வா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலையிடல், அவரது திருச்சமாதியில் மலரஞ்சலி செய்தல் ஆகிய நிகழ்வுகளோடு தொடங்கியது. இதன் தொடர்;சியாக யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் பேராளர் மாநாடு மங்கல நிகழ்வுகளுடன் மலர்ந்தது. தலைவர் கௌரவ மாவை சோசேனாதிராஜா அவர்கள் தலைமையுரை வழங்கினார். பெருந்தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்கள் முக்கிய உரையை வழங்கினார். இறுதி நிகழ்வாக மாநாட்டுத் தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. பொதுச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தீர்மானங்களை வெளிப்படுத்தினார்கள்.

சுமார் 32 தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு தீர்மானமுமே முக்கியமான தீர்மானம் தான் இருப்பினும், பொதுமை கருதி சில தீர்மானங்கள் முன்னிலை வகிக்கின்றன. அரசியற் தீர்வு, ஐ.நா மனித உரிமைத் தீர்மானம், ஆக்கிரமிக்கப்பட்ட நில விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, மீள்குடியேற்றம், அரசியற் கைதிகள் விடுதலையும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம், மரணதண்டனையைத் தடுத்தல், இலங்கை அரசியலமைப்பில் உறுப்புரை 19ஏ என்பன இந்த நிரலில் அடங்குகின்றன. பிரதேச ரீதியாக முன்னிலை வகிக்கும் தீர்மானங்களாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது மற்றும் வவுனியா ஓமந்தைப் பிரதேச செயலக உருவாக்கம் என்பன தொடர்பான விடயங்கள் அமைந்திருந்தன. ஏனைய விடயங்களாக இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, வடக்கு கிழக்கில் தொழிற் துறைகளை அபிவிருத்தி செய்தல், தெங்கு பனம்பொருள் அபிவிருத்தி, மீன்பிடித் துறையின் அபிவிருத்தியும் தடைகளை நீக்குதலும், கல்வி, நில நீர் உரிமையை நிலைநாட்டல், வங்கிக் கடன் ரத்து, தொழிற்சங்க உரிமை, கூட்டுறவுத்துறை, உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள், மருத்துவம், உடகவியலாளர்களின் உரிமைகள், பலாலி விமானத்தளம் அமைத்தல். வடக்கு கிழக்கு இணைந்த கட்டுமானம் என்பன அமைகின்றன.

தீர்மானங்கள் என்பவை எமது இயங்கு நிலையின் இலக்குகளாகும். அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரையில் அது எமது பிரதான இலக்காக விளங்குகின்றது. இந்த இலக்கை எய்துவதற்காக 2015 தை மாதம் 08ம் திகதிக்குப் பின்னர் பல்வேறு விடயங்களை இலங்கை அரசியற் பரப்பில் செயற்படுத்தினோம். இதன் காரணமாகத் தான் பாராளுமன்றம் அரசியமைப்பு சபையாகவும் இயங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் உருவாக்கத்திற்காக 07 உபகுழுக்கள் அமைக்கப்பட்டன. அவை செயற்பட்டு அறிக்கைகளும் சமர்ப்பித்தன. அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கொண்ட நடவடிககைக் குழுவும் தேவையான நேரங்களில் கூடியது. உபகுழுக்களின் அறிக்கைகள் கிடைத்த பின் நடவடிக்கைக் குழு இடைக்கால அறிக்கையை வெளியிட்டது. இந்த இடைக்கால அறிக்கையை வடக்கு கிழக்கில் மாவட்டங்கள் தோறும் எடுத்துச் சென்று மக்களுக்கு விளக்கினோம்.

இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்த பாராளுமன்றத்திலே புதிய அரசியலமைப்பு தொடர்பான நிபுணர்குழு உருவாக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கை கூட வெளியிடப்பட்டது. இந்த நிலையிலே தான் 2018 ஐப்பசி 26ல் யாருமே எதிர்பாராத விதமாக ஜனாதிபதி அவர்கள் புதிய பிரதமரொருவரை நியமித்து பெரியதொரு அரசியற் சிக்கலை ஏற்படுத்தினார். இது புதிய அரசியலமைப்பை உருவாக்கும் எமது முயற்சியில் பெரியதொரு தடைப்பாறாங்கல்லாய் அமைந்தது. எனினும், இந்த நிகழ்வுகள் சாதுரியமாகக் கையாளப்பட்டு ஆட்சி மாற்றமொன்று உருவாவது தடுக்கப்பட்டது. தொடர்ந்தும் புதிய அரசியலமைப்புத் தொடர்பான எமது முயற்சியை முன்நகர்த்தினோம். இதன் காரணமாக அதிகாரப் பங்கீடு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பதற்கு நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டது. இதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் 2019 சித்திரை 21 வன்கொலைத் துன்பியல் இடம்பெற்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் நாமெடுத்த முயற்சிகள் இவ்வாறான தடங்கல்களால் தடைப்பட்டு விடுமா? என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், இதனை முன்நகர்த்தும் ஒரு உத்தியாக ஆடி 25ல் எமது கட்சி புதிய அரசியலமைப்பு தொடர்பாக தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து பாராளுமன்றத்திலே இரண்டு நாள் விவாதத்திற்கு வழிவகுத்தது. பெருந்தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் 72 நிமிடங்கள் நின்ற நிலையிலேயே தொடர்ச்சியாக உரை நிகழ்த்தினார். இது தொடர்பில் பல்வேறு கட்சியினருடைய உரைகளும் பதிவாகியிருக்கின்றன.

சிங்களத் தலைவர்கள் புதிய அரசியலபை;பு தொடர்பில் எதையெல்லாம் விலியுறுத்துகின்றார்களோ அவற்றுக்கெல்லாம் முரணாக இன்னொரு சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிடுதல் என்பதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பதை தற்போதும் மீள்பதிவு செய்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரேரணையை முன்மொழிந்து பேசிய ஜனாதிபதி அவர்கள் அரசியலமைப்பு என்பது யாரும் பயப்படுகின்ற ஒன்றாக அமையக் கூடாது. இது நாட்டுக்குத் தேவையான ஒன்று என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்றோ அது பயப்படுத்துகின்ற ஒன்று என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்துவிட்டாரா என்ற எண்ணும் வகையிலே நடந்து கொள்கின்றார். இருப்பினும், இவ்விடயத்தில் இன்னும் கையாளக் கூடிய உத்திகளை நாம் கையாளுவோம்.

இணக்க அரசியல் என்பது எமது கட்சியைப் பொறுத்தவரையிலே அக்கினிப் பரீட்சையாகவே ஆகிவிட்டது. ஒரு நாட்டுக்குள்ளேயே உரிமைகளை வென்றெடுத்தல் என்பது சாத்வீக வழிமுறையின் அடிப்படையில் இணக்க அரசியலாலே தான் சாத்தியப்படும். இதனை மிகவும் சாதுரியமாகவே நாங்கள் கையாண்டு வந்தோம். அடுத்த தரப்பினர் எதிர்நோக்கக் கூடிய சங்கடங்கள் அவர்களின் வாக்கு வங்கியிலே ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்பன தொடர்பாக அவதானம் செலுத்தாமல் இவ்விடயத்தை நாங்கள் முன்நகர்த்த முடியாது. நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய தீர்வு ஒன்றைப் பெற்றெடுத்தல் என்பதில் இத்தகைய ஆபத்துக்கு முகங்கொடுக்கும் செயற்பாடு தவிர்க்க முடியாததே.

புதிய அரசியலமைப்பைப் போலவே ஏனைய விடயங்களும் அரைகுறை தொலைவையே தாண்டியுள்ளன. எனினும், சந்தர்ப்பவாத அரசியல் செயவோர் இன்று ஒன்றுமே நடடைபெறவில்லை என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கான பின்புலங்களும் அவர்களுக்கு நிதி தொடக்கம் பல்வேறு வசதிகளை வழங்கி ஊக்குவித்துக் கொண்டிருக்கிறன. தொடர்ச்சியாக முரண்பட்ட வாதங்களை பல்வேறு வழிமுறைகளின் மூலம் அவர்கள் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். அரைகுறைப் பசியைப் போக்கும் அளவுக்குத் தான் எங்களுடைய இரை தேடல் அமைந்து விட்டது என்ற துர்ப்பாக்கிய நிலை நிரந்தரப் பட்டினியிலேயே இருக்கின்றோம் என்ற முரண்பாட்டாளர்களின் கருத்துக்கே முக்கியத்துவம் வழங்குகின்ற ஒரு மாயையை உருவாக்கியுள்ளது.

அரசியல் நிகழ்ச்சி நிரலை நடத்திச் செல்லல் என்பது நீதிமன்றத்தினூடான தீர்ப்பை நிலைநாட்டலுக்கு ஒத்ததல்ல. வாக்குறுதியை வழங்கியவர்கள் செயற்படாதிருக்கும் போது அல்லது இயலாமையை வெளிப்படுத்துகின்ற போது அல்லது சாக்குப்போக்குச் சொல்லுகின்ற போது அவர்களை செய்விப்பதற்கான எந்தவொரு பொறிமுறையும் அரசியலிலே இல்லை. இறுகி வைரமாகியிருக்கின்ற இலங்கையின் பேரினவாதச் சிந்தனையை தகர்த்தெறிவதற்காகத் தான் நமது தரப்பில் ஆயுதப் போராட்டம் உருவாகியது. ஆனால், அந்த இலக்கை எம்மால் எய்த முடியவில்லை. அதே வைரத்தை இணக்க அரசியலால் வென்றெடுக்கும் கைங்கரியத்தில் நாங்கள் ஈடுபட்டிருக்கின்றோம். இதற்கான புற அழுத்தங்களையும் கூட பயன்படுத்தக்கூடிய அளவுக்கு பயன்படுத்தியும் வந்திருக்கின்றோம். எந்த விதத்திலும் அலட்சியமோ, தொய்வோ, பிற்போடலோ இல்லாமல் அந்தரங்க சுத்தியோடும் முழுமையான ஈடுபாட்டோடும் தான் நாங்கள் செயற்படுகின்றோம்.

இருந்தாலும், எமது செயற்பாடுகளை பலவீனமானவை என்று வெளிப்படுத்துவதற்கு பல்வேறு சக்திகளும் பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர்களுக்கான ஒரே பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே விளங்குகின்றது. இந்த உண்மை நிலைமையை பல்வேறு காரணங்களுக்காக ஒத்துக் கொள்ளாமல் இருப்பது துர்ப்பாக்கியமே. இவ்வாறான முரண்பாட்டுச் செயற்பாடுகள் குறைந்த அளவிலாவது தாக்கத்தை ஏற்படுத்தும் எனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எய்துகின்ற பலவீனமென்பது ஈழத் தமிழர்களின் பலவீனமாகவே அமையும். இந்த உண்iயைச் ஏற்றுக்கொண்டு சுயநலமற்ற அக்கறையை முரண்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். நாம் உரிமையைப் பெறும் வரையில் ஒரே தலைமை, ஒரே கட்டுப்பாடு என்பது இன்றியமையாதது.

உலகின் எல்லா இடங்களிலும் இந்த விடயம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விடை காணப்பட்டுள்ளது. சித்தாந்த ரீதியான புரட்சிகளின் போது வன்முறை ரீதியான பலம் இந்த ஓரணிச் சித்தாந்தத்திற்கு சக்தி கொடுத்ததைக் காண்கின்றோம். சாத்வீக வழியிலே இவ்வாறான ஒரு பலப் பிரயோகம் இல்லை. இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடைப்பிடிப்பாக உள்ளது. சாத்வீக வழியிலே முரண்பாட்டாளர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு எவ்வித மார்க்கமும் இல்லை. இருப்பினும், திரட்சியான ஒரு சக்தியின் இன்றியமையாமை ஒத்துக் கொள்ளப்பட வேண்டும். இருக்கின்ற ஒன்றுக்கு பலம் சேர்ப்பதே அதற்கான வழிமுறை என்பதனையும் ஒத்துக் கொண்டேயாக வேண்டும். இவ்வகையிலே தமிழ் மக்களின் சக்தி முரண்பாட்டாளர்களால் சிதறடிக்கப்படுகின்றது என்ற உண்மையை முரண்பாட்டாளர்கள் ஒத்துக் கொள்வது கடினமே ஆனால் மக்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையிலே பிழை கண்டுபிடிப்பவர்கள், விமர்சிப்பவர்கள், பொய்புனைபவர்கள் எல்லாம் எதை சாதிக்கக் கூடியவர்கள் என்பதனை மக்கள் தான் கண்டறிய வேண்டும். அவ்வாறான பார்வையிலே முரண்பாட்டாளர்களுடைய செயற்பாடுகள் எல்லாம் தன்முனைப்பு சார்ந்தவையே என்ற தெளிவு மக்களுக்கு ஏற்பட வேண்டும். இந்த வகையிலே இன்றில்லாவிட்டாலும் தக்க தருணத்திலேயாவது தமிழ் மக்கள் மேற்சொல்லப்பட்ட வாத விவாதங்களின் உண்மை நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். இதனடிப்படையிலே தான் தமிழர் சக்தி ஒரே திட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இன்னும் வலுப்பெற்று தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் ஒரே சக்தியாக பலமடைய முடியும்.

அந்தவகையிலே புலம்பெயர்ந்துள்ள எமது உறவுகளை அன்பாக விழிக்கின்றோம். களம் தொடர்பான இயற்கை நிலை உங்களுக்குத் தெரியாததொன்றல்ல. 70 ஆண்டுகால எமது அரசியல் நடவடிக்கைகளில் நாம் கையாண்டு வந்த வழிவகைகள் எமக்குக் கற்றுத் தந்த பாடங்களை நாம் சரியாக மதிப்பிட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு நீங்கள் சொல்லக் கூடிய இயற்கைத் தன்மையோடு பொருந்திய ஆலோசனைகளை நாங்கள் ஏற்றுக் கொள்ளுவோம். அந்த அடிப்படையிலே உங்கள் கரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையிலான இன்னொரு சக்தியாக அமைந்திட வேண்டுகின்றோம். இத்தகைய செயற்பாடு ஒன்றுதான் தமிழினம் தொய்வு நிலையை அடைகிறது என்று மகிழ்ச்சியோடு சிந்திக்கத் தொடங்கும் பேரினவாதத்திற்கு நாம் கொடுக்கின்ற ஏமாற்றமாக அமையும்.

இவ்வகையிலே சிந்திப்போம், செயற்படுவோம், இவ்வாறான நிலைமை உருவாகும் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16வது மாநில மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் பலனளிக்கும் வகையிலான செயற்படு தன்மையை எய்தும் என்பதைனை உணர்ந்து கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.