பொய்கள், போலிகள், ஏமாற்றுவித்தைகளுக்குக் காலம் பதிலளிக்கும்

(பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)

அரசியல் தேவைக்காக பட்டதாரிகளைப் பயன்படுத்த வேண்டும், என்ற எண்ணம் எங்களிடம் இல்லை. அவர்களைப் பலிகடாவாக்கும் தேவையும் இல்லை. பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கு முன்பிருந்தே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். காலம் உண்மைகளுக்கு இடம்கொடுக்கும். பொய்கள், போலிகள், ஏமாற்றுவித்தைகளுக்குப் பதிலளிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் நியமனப் புறக்கணிப்பு தொடர்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வெளிவாரிப் பட்டதாரிகளை இன்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடி தம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்துதலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் பட்டதாரிகளால் மெற்கொள்ளப்பட்ட போராட்த்தின் விளைவாகவும் அதன் தன்மை பற்றி உரியவர்களுக்கு எடுத்துரைத்ததன் விளைவாகவுமே தற்போது பட்டதாரிகள் நியமனம் வழங்கப்படுகின்றது. ஆனால் இதில் உளவாரி வெளிவாரி என்ற பேதம் குறைபாடாக இருப்பது தவறான விடயம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது.

பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் அமைச்சரவை அனுமதி பெறுவதற்காக அமைச்சரவைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஜனாதிபதி அவர்கள் நியமனம் தொடர்பில் உள்வாரிப் பட்டதாரிகளுக்கு முதலில் கொடுக்க வேண்டும் என்ற தெரிவித்ததாகவும் அதனடிப்படையில் தான் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் பொறுப்புமிக்க அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார்.

இதில் ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும் ஜனாதிபதி அவர்கள் வெறுமனே பாதுகாப்பிற்கு மாத்திரம் பொறுப்பானவர் அல்ல. அமைச்சரவையின் முடிவுகள், தீர்மானங்களை மாற்றிமைக்கும் வல்லமை அவரிடம் இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் இந்த விடயமும் இடம்பெற்றிருக்கும்.

எமது பிள்ளைகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் விளங்கியிருக்கின்றோம். நாங்கள் செய்கின்ற விடயங்கள் விளம்பரத்திற்கு வராமல் இருக்கலாம். சில ஊடகங்கள் சொல்வது போல நாங்கள் அரசியல் செய்ய முடியாது. அதனாலேயே எங்களுடைய கருத்துக்கள் குறிப்பிட்ட ஒரு ஊடகத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. நாங்கள் செய்கின்ற நல்ல விடயங்களை விட்டு எங்களுக்கு மாறான சம்பவங்கள் ஏதேனும் வரும் போது மாத்திரம் அதனைப் பிரசுரிப்பார்கள்.

அரசியல் தேவைக்காக பட்டதாரிகளைப் பயன்படுத்த வேண்டும், ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இல்லை. கடந்த போராட்டத்தின் போது எமது தலைவரும் இங்கு வருகை தந்தவர். தற்போதும் இந்த விடயத்தில் எமது தலைமை உட்பட பலரும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் அரசியலில் உழைத்துக் கொள்வதற்காகவோ, மாடமாளிகைகள் அமைப்பதற்காகவோ, சொத்துச் சேர்ப்பதற்காகவோ வரவில்லை. ஊழல் மோசடிகளும் எங்களிடம் இல்லை.

எங்களைத் திட்டமிட்டு பிழையாகக் காட்டுவதற்குச் சிலர் விளைகின்றார்கள். எனவே எதிர்காலத்தில் புத்திஜீவிகளாக வரக்கூடிய பட்டதாரிகள் சாதுர்யமாகவும், நியாயமாகவும், சாயணக்கியமாகவும் அணுக வேண்டும். இந்த விடயத்தை கூச்சிலிட்டு குழப்புகின்ற செயற்பாடு கூடாது. நாங்கள் பட்டதாரிகளை பிழையான முறையில் வழிநடத்தி அதன் மூலம் பட்டதாரிகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் போது அதற்கும் நாங்கள் தான் பொறுப்புக் கூற வேண்டும்.

பட்டதாரிகளைப் பலிகடாவாக்கும் தேவைகள் எங்களுக்கு இல்லை. பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கு முன்பிருந்தே நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து தீர விசாரித்து விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் குழப்பப்பட வேண்டாம்.

பட்டதாரிகளின் பிரச்சினைகளை நாங்கள் எடுத்து அதற்குத் தீர்வு பெற்றுத் தருவதுதான் எங்கள் பொறுப்பே தவிர அதனை மேலும் பிரச்சினையாக்கி, பட்டதாரிகளைக் காட்சிப் பொருளாகக் காட்டி நாங்கள் அரசியல் செய்யப் புறப்பட்டால் அது சிறுபிள்ளைத் தனமான அரசியலாகவே இருக்கும். அவ்வாறான சிறுபிள்ளைத் தனமான அரசியல் செய்வதற்கு நாங்கள் வரவில்லை.

எனவே பொறுப்புள்ளவர்கள் என்ற விதத்தில் இந்த விடயத்தில் தேசிய பொருளாதாரக் கொள்கைகள் அமைச்சின் சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு சில தரவுகளைப் பெற்றிருந்தோம். அந்த வகையில் இம்முறை 16800 உள்வாரிப் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் 15948 பட்டதாரிகள் தான் உள்வாரிப் பட்டதாரிகளாக இருக்கின்றமையால் மிகுதியாக இருப்பதில் வெளிவாரிப் பட்டதாரிகளுக்குத் தொழில் வாய்ப்பு வழங்கும் செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மட்டக்களப்பில் 34 வெளிவாரிப் பட்டதாரிகளுக்குத் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

அத்துடன் உள்வாரிப் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற நியமனங்கள் தொடர்பில் அவர்கள் கடமை பொறுப்பேற்பதற்கு பதினான்கு நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். அந்த அவகாசத்துக்குள் அவர்கள் கடமையைப் பொறுப்பேற்காதவிடத்து அவர்களின் நியமனங்கள் இரத்துச் செய்யப்பட்டு அதற்குப் பதிலாகவும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதை விடவும் மேலும் பத்தாயிரம் செயற்திட்ட உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தப் பத்தாயிரம் தொழில் வாய்ப்புகளையும் பெறக்கூடிய சந்தர்ப்பமும் வெளிவாரிப் பட்டதாரிகளுக்கே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் கடந்த காலங்களில் ஒரு ஒத்திவைப்புப் பிரேரணையொன்றைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்திருந்தேன். இதன் போது வெளிவாரி உள்வாரி என்ற பேதமின்றி அனைவருக்கும் தொழில்வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அவ்வாறில்லவிடினும் 75க்கு 25 என்ற அடிப்படையிலாவது கொடுக்கப்பட வேண்டும் என்றுகூட முயற்சி எடுக்கப்பட்டது ஆனால் நாட்டின் தலைவர் கடும் பிடிவாதம் பிடித்ததன் காரணமாக உள்வாரிகளுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பில் வெளிவாரிப் பட்டதாரிகள் தெளிவான விளக்கங்களைப் பெறவேண்டும். அதை விடுத்து அவர்களைக் குழப்பி இன்னும் சிக்கல்களைத் தோற்றுவிக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம். பட்டதாரிகளும் இது தொடர்பில் புரிந்துகொள்ள வேண்டும்.

அந்தவகையில் இந்த சத்தியாக்கிரகத்தை முடிவுறுத்துவதா தொடர்வதா என்பது பற்றி பட்டதாரிகளே முடிவெடுக்க வேண்டும். நான் இது தொடர்பில் எவ்வித ஆலோசனையும் தெரிவிக்கவில்லை. ஏனெனில் இதில் தற்செயலாக ஏதும் தாமதங்கள் ஏற்பட்டால் அதனைக் கூட என் தலையில் கட்டிவிடுவதற்குப் பலர் காத்திருக்கின்றார்கள்.

வருகின்ற காலம் தேர்தல் காலம் என்பதால் இந்த விடயங்கள் சுமுகமாக நடைபெறுவதற்குரிய சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றது. ஏனெனில் அரசியல்வாதிகள் தங்களுக்கு ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவாவது இந்தத் தொழில்வாய்ப்புகளைக் கொடுப்பார்கள்.

பட்டதரிகளை வழிநடத்திச் செல்லுகின்ற தலைமைகள் அவர்களை ஒரு நல்ல நெறிமுறையின் கீழ் கொண்டு வந்து அவர்கள் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவினைப் பெற்றுக் கொள்ளும் விதமாக எங்களுக்கு ஒத்துழைப்புகளைச் செய்ய வேண்டும். அவ்வாறான தலைமைத்துவங்களே எமது சமூகத்திற்குத் தேவை.

அதேவேளை பட்டதாரிகள் எனது வீட்டை முற்றுகையிடப்போவதாக ஒரு தகவலும் கிடைத்தது. நான் ஜனதிபதி அல்ல, பிரதமர் அல்ல, தொழில் வாய்ப்பு வழங்கும் ஒரு அமைச்சரும் அல்ல. இது பட்டதாரிகளால் செய்யப்பட்ட விடயம் அல்ல என்பதும் யாருடைய தேவைக்காக இது திட்டமிடப்படுகின்றது என்பதும் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரியும். எனவே மக்களை இன்னும் ஏமாற்றி அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. உண்மைக்குப் பின்னால் வருவதற்கு அதிகமான மக்கள் இருக்கின்றார்கள். போலித்தனங்கள் ஏமாற்றுவித்தைகள், ஊழல் மோசடிகளுக்கு உதவுகின்ற செயற்பாடுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

நாங்கள் எங்களுடைய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்லப்படுகின்ற தரம், தராதரத்தைக் குறைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. சேற்றைத் தெளிப்பதற்கும் நாம் விரும்பவில்லை. ஆனால் காலம் உண்மைகளுக்கு இடம்கொடுக்கும். பொய்கள், போலிகள், ஏமாற்றுவித்தைகளுக்குப் பதிலளிக்கும் என்று தெரிவித்தார்.