கதிர்காமம் சென்ற குடும்பஸ்தர் இன்னும் வீடு திரும்பவில்லை.

கதிர்காமத்திற்குச்சென்ற குடும்பஸ்தர் இன்னும் வீடுதிரும்பவில்லை!
நிச்சயம்வருவார் என்று நம்புவதாக மனைவி சோகத்துடன் தெரிவிப்பு.
(காரைதீவு  நிருபர் சகா)

கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவத்திற்காகச்சென்ற 65வயதுடைய குடும்பஸ்தர் இன்னும் வீடு திரும்பவில்லையென கதிர்காமப்பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் களுவாஞ்சிக்குடி  ஓந்தாச்சிமடத்தைச்சேர்ந்த வடிவேல் நடராசா (வயது 65) என்பவராவார்.


கடந்த 13ஆம் திகதி கதிர்காமத்திற்கு பஸ்ஸில் சென்ற இவர் இதுவரைவீடு திரும்பவில்லையென அவரது மனைவி திருமதி சுசீலாவதி நடராசா(வயது55)  என்பவர் கதிர்காமப் பொலிஸ்நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

அவரது மனைவி சுசீலாவதி சோகத்துடன் கூறுகையில்:
கடந்த 7ஆம் திகதி நானும் உறவினரும் கதிர்காத்திற்கு உகந்தையினூடாக காட்டுப்பாதையில் பயணித்து 13ஆம் திகதி கதிர்காமத்தையடைந்தோம்.

அங்கு சென்றதும் வீட்டிற்கு போன் பண்ணினேன். அப்போது மகள் சொன்னார் ‘அப்பா நேற்று என்னுடன் முரண்பட்டுவிட்டு கதிர்காமத்திற்கு பஸ்ஸில் போயிட்டார் ‘ என்று.
நான் அப்போது கதிர்காமத்திலிருந்தேன். அங்கு அவரைத்தேடினோம். காணவில்லை. தீர்த்தம் 17ஆம்திகதி வரைநின்றோம். அதுவரை அவரைத்தேடினோம். கிடைக்கவில்லை. மனச்சஞ்சலத்துடன்  மறுநாள் வீடுதிரும்பினோம்.

அவர் இன்றுவருவார் நாளைவருவார் என்ற நம்பிக்கையில்  இரவுபகலாக இப்பிரதேச ஆலயங்களிலெல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. சாத்திரமும்பார்த்தேன். அவர் அங்கு மூவருடன் நிற்பதாகக்கூறினார்கள். நேர்த்தி வைத்துள்ளேன்.

கடந்த வியாழக்கிழமை(25) மீண்டும் கதிர்காமத்திற்குச்சென்று தேடிவிட்டு பொலிசில் முறைப்பாடு செய்தேன். நேற்று தாந்தாமலைக்குச்சென்றேன். அங்கு காரைதீவு தவிசாளரைச்சந்தித்தேன்.அவர் உதவுவதாக தெரிவித்தார்.அதனாலிங்கு வந்தேன். என்றார்.