புணானை என்ற முஸ்லிம் தேர்தல் தொகுதியை உருவாக்கும் நடவடிக்கையைக்குள் எதிராக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணாணையை தனித் தொகுதியாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து வாகரை புணாணை பிரதேச மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்டது.

வாகரை புணாணை பிரதேச மக்களால் புணாணை புகையிரத நிலைய முன்பாக கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் ஏமாற்றாதே ஏமாற்றாதே இனியும் தமிழர்களை ஏமாற்றாதே, தமிழர் நிலங்களை கபடத்தனமாக அபகரிக்க நினைக்காதே, புணாணை தமிழர் பூர்வீகம் பறிக்க நினைக்காதே, வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், தேர்தல் தொகுதிகளை பிரித்து தூண்டாதே அரசியல்வாதிகளே, தமிழர் நிலத்தினை பிரித்து இன வன்முறையை தூண்டாதே என்ற பல்வேறு வாசகங்களுடன் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளருமான கு.குணசேகரன் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கல்குடா தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணானை என்ற முஸ்லிம் தேர்தல் தொகுதியை உருவாக்க அரசாங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியினால் அழுத்தம் கொடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை எனவும், இது தொடர்பில் எங்களுக்கு எந்தவித தகவலும் தெரியாமல் இருந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கையானது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த கல்குடா தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணானை என்ற முஸ்லிம் தேர்தல் தொகுதியை உருவாக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.