பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட வெளிவாரி பட்டாரிகளுக்கு தொழில் வாய்ப்பு.ஶ்ரீநேசன் எம்.பி தகவல்.

ஒரு மாதங்கள் கடந்த நிலையில் செயற்றிட்ட அலுவலகர் என்ற நியமனத்தில் பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட வெளிவாரி பட்டாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொண்டையன்கேணி ஆர்கழி விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரின் கம்பெரலிய திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு மக்கள் பாவனைக்கு ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்ட போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-

கடந்த காலத்தில் காந்தி பூங்காவில் பட்டதாரிகளால் நடாத்தப்பட்ட போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்கவுடன் நானும் கலந்து கொண்டு பட்டாரி பயிலுனர்களாக உள்வாங்கி நிரந்தர நியமனம் வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவாதத்தின் தாமதங்கள் நடைபெற்றாலுல் இந்த விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரிகள் உள்ளார்கள். உள்வாரி பட்டதாரிகளுக்கு கடந்த காலத்தில் தொழில்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2012ம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் வெளியேறிய உள்வாரி பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

ஆனால் வெளிவாரி பட்டதாரிகளை புறக்கணித்தது பிழை என்று பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருந்தேன். ஒத்திவைப்பு பிரேரனை கொண்டு வந்த போது நான் உள்வாரி, வெளிவாரி என்ற பேதம் இல்லாமல் சகலருக்கும் தொழில் வழங்க வேண்டும் என்றும், இவ்வாறு புறக்கணிப்பு கடந்த காலத்தில் இடம்பெறவில்லை என பாராளுமன்றத்தில் கூறினேன்.

உண்மையில் உள்வாரி பட்டதாரி வெளிவாரி பட்டதாரி என்ற பேதங்களை ஏற்படுத்தியவர்கள் அரசாங்கத்தில் இருக்கின்ற முக்கியமான தலைவர் என்று என்னால் அறிய முடிந்தது. இப்போது வெளிவாரி பட்டாரிகளை கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தவர் எங்களுடைய கட்சியில் இருந்து பாய்ந்து இன்னொரு கட்சியில் சேர்ந்து விட்டார்.

ஆனால் தற்போது அவரின் ஒரு பக்கம் மைத்திரியும், மறுபக்கம் மகிந்த ராஜபக்ஸவும் நிற்கின்றார்கள். இந்த விடயத்திற்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசி உள்வாரி வெளிவாரி என்ற பிரச்சனையை தீர்த்து வைத்திருக்க முடியும்.

பொதுமக்கள் போராட்டம் செய்வது அவர்களது கடமை. அதற்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பவர்கள் தான் நாங்கள். தற்போது 16500க்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட உள்ளது. அதேபோன்று 800 வெளி பட்டதாரிகளுக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப்பட உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முப்பதினான்கு வெளி பட்டதாரிகளுக்கும் பட்டதாரி பயிலுனர் நியமனம் எதிர்வரும் முதலாம் திகதி வழங்கப்படவுள்ளது. பதினான்கு நாட்களுக்குள் உள்வாரி பட்டதாரிகள் கடமையை பொறுப்பேற்காவிடின் அந்த வெற்றிடத்திற்கு பதிலாக வெளிவாரி பட்டதாரிகள் உள் வாங்கப்படுவார்கள். இது ஒரு உயர் அதிகாரியிடம் இருந்து நான் பெற்றுக் கொண்ட உத்தரவாதம். ஏனெனில் சில உள்வாரி பட்டதாரிகள் வேறு தொழில்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.

அத்தோடு இன்னும் ஒரு மாதங்கள் கடந்த நிலையில் செயற்றிட்ட அலுவலகர் என்ற நியமனத்தில் பத்தாயிரத்தி ஐநூறுக்கு மேற்பட்ட வெளிவாரி பட்டாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

இது தகவல் யுகம், எனவே சரியான தகவல்களை பெற்று பட்டதாரிக்கு வழங்க வேண்டுமே தவிர தாறுமாறான கதைகளை சொல்வதனால் அவர்களை குழப்பமடைய செய்யலாம். பொய்களை சொல்லி தினமும் ஏமாற்ற முடியாது. எல்லோரையும் தினமும் ஏமாற்ற முடியாது என்றார்.

கொண்டையன்கேணி ஆர்கழி விளையாட்டு கழக தலைவர் யோ.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.நல்லரெட்ணம், திருமதி.ப.லெட்சுமி, இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட தொழில் வழிகாட்டி உத்தியோகத்தர் ஏ.எம்.கனிபா, வாழைச்சேனை இளைஞர் சேவை அதிகாரி த.சபீயதாஸ், கறுவாக்கேணி கிராம அதிகாரி அ.பிரபு, கொண்டையன்கேணி பிள்ளையார் ஆலய தலைவர் பி.கந்தசாமி, பிரதேச இளைஞர் சம்மேளன தலைவர் அ.கேகிலதர்சன், கொண்டையன்கேணி ஆர்கழி இளைஞர் சம்மேளன தலைவர் வி.ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொண்டையன்கேணி ஆர்கழி விளையாட்டு கழகத்தினரின் வேண்டுகோளின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினரின் கம்பெரலிய திட்டத்தின் பத்து இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட பார்வையாளர் அரங்கு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.