எமது போராட்டம் ஆரம்பித்த காலத்தில் எமது மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்திற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்த கட்சி ஐக்கிய தேசியக் கட்சி

எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய நாங்கள் இன்று ஒரு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தவதற்காக ஒரு சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண முன்னாள் உபதவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை  தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம்பெற்ற வெலிகடை சிறைப் படுகொலையின் 36வது நினைவு நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது போராட்டம் ஆரம்பித்த காலத்தில் எமது மக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட வெறியாட்டத்திற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சியமைப்பதற்காக தற்போது ஒத்துழைப்பு வழங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாங்கள் நின்று கொண்டிருக்கின்றோம்.
1983ம் ஆண்டு இந்த நாட்டில் ஆட்சியமைத்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில் தான் எமது தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். எமது போராட்டமும் வீறுகொண்டது. அவ்வாறானதொரு கட்சிக்கு நாங்கள் எங்களது ஆதரவைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை விட்டுக் கொடுக்காது, மற்றைய மாற்றுச் சமூகக் கட்சிகள் எந்நேரமும் எப்பக்கமும் சென்று விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எமது மக்களை ஏமாற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
முப்பது வருடமாக ஒரு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தவதற்காக ஒரு சிறுபான்மை சமுகத்திடம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு இன்று நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடிய நாங்கள் இன்று பிரதேச செயலகத்தின் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
அண்மையில் இந்த அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது  பொய் வாக்குறுதிகள் , பொய்யான கடிதங்கள் என்பவற்றைக் காட்டி அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து இந்த அரசாங்கம் தப்பித்துக் கொண்டது. எதிர்வரும் காலங்களில் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதாயின் எமது மக்களுக்கான முறையான தீர்வுகளை வழங்கிய பின்னரே முன்வர வேண்டும்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் சட்டரீதியான முறையில் சுற்றுநிரூபம் வெளியீடு செய்து மத்திய அரசின் நிதிக்கூற்றின் பிரகாரம் அதற்கான ஒரு தனிக்கணக்கினை நடைமுறைப்படுத்தி ஒரு கணக்காளரை நியமிக்க வேண்டும்;. கணக்காளர் என்ற சொல்லி ஒருவரை நியமித்துவிட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து இயக்குவதற்குவதாக இருந்தால் அதற்கு கணக்காளர் தேவையில்லை சிற்றூழியர் ஒருவரே போதும். எனவே எமது தலைமைகள் வெகுவிரைவில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு கல்முனை வடக்குப் பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.