உலகில் கடற்கரைக்கு சுவர்கட்டும் ஒரு பிரதேசம் என்றால் அது கல்முனை தொகுதியே :

அமைப்பாளர் எம்.எஸ்.ஏ.றஸாக் !!
உலகில் கடற்கரைக்கு சுவர்கட்டும் ஒரு பிரதேசம் என்றால் அது கல்முனை தொகுதியே என கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஸாக் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் அவர்களினால் ரன் மாவத் திட்டத்தின் கீழ் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு கோடி 80 லட்சம் ரூபாய் செலவில் காபட் இடும் வேலைத் திட்டதை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று மாலை கல்முனையில் இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை வேட்பாளருமான எஸ்.எல். முஹிஸின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனை தொகுதி ஐ.தே. கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் ரஸாக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  இந்நாட்டில் மிக மோசமான ஒரு வீதியாக பல வருடங்களாக இந்த கல்முனை தொகுதியில் இருக்கும் நகர மண்டப வீதியின் அபிவிருத்தி திட்டத்தை பொறியலாளர்களின் சரியான திட்டமிடலுடன் பல மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நாங்கள் இப்போது ஆரம்பிக்க தயாராக இருக்கிறோம்.
கம்பரலிய திட்டத்தினை கொண்டு பல நூறு மில்லியன் ரூபாயினால் இந்த நாட்டில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடைபெற்று வருகிறது. எமது தொகுதிக்கும் 300 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதனை திட்டமிட்டு செய்ய அந்தந்த தொகுதி எம்.பிக்கள், அமைப்பாளர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல எதிர்வரும் காலங்களில் நான் மக்கள் பிரதிநிதி அந்தஸ்தை பெற்றால் இன்னும் நிறைய திட்டங்கள் செய்ய முடியும் என்றார்.
இந்நிகழ்வுக்கு கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம். நபார் உட்பட திணைக்கள பொறியியலாளர்கள், ஐ.தே. கட்சி பிரதேச முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(நூருள் ஹுதா உமர்.)