கல்முனையில் மீண்டும் முஸ்லிம்அரசியல்வாதியால் சர்ச்சை!

கல்முனையில் மீண்டும் முஸ்லிம்அரசியல்வாதியால் சர்ச்சை! 
ஆலயவீதியை பள்ளிவாசல்வீதியாக பெயர்மாற்றம்!
பொலிசில் முறைப்பாடு: 
(காரைதீவு நிருபர் சகா)

500வருடங்களுக்கும்மேலாக பயன்படுத்தப்பட்டுவந்த தரவைப்பிள்ளையார் ஆலய வீதியை கடற்கரைப்பள்ளி வீதியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டிருப்பதையடுத்து üகல்முனையில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.


மீண்டுமொரு சர்ச்சையை முஸ்லிம் அரசியல்வாதியொருவர் தோற்றுவித்திருக்கிறார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்றியதற்கு எதிராக கல்முனை நகரசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்திரசேகரம் ராஜன் வி.சிவலிங்கம் ஆகியோர்  கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம்(24) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
பொலிசில் முறையிட்ட த.தே.கூட்டமைப்பின் கல்முனைமாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இதுபற்றிக்கூறுகையில்:
எமது நியாயமான கல்முனை வடக்கு பிரதேசசெயலக விவகாரம் உச்சக்கட்டத்திலிருக்கின்ற இக்காலகட்டத்தில் வேண்டுமென்றே ஜ.தே.கட்சி அமைப்பாளரெனும் அரசியல்வாதி இந்த பெயர்மாற்றத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார்.
இவ்வீதிபெயர்மாற்றம் செய்யப்பட்டு ஜ.தே.க. அமைப்பாளரான றசாக் என்பவரின் படம்போட்ட பெயர்ப்பலகை திறக்கப்பட்டுள்ளது. வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் அனுமதியின்றி நாட்டப்பட்டிருந்த அப்பெயர்ப்பலகையில் அச்சபையின் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரசபைக்கு எதுவுமே தெரியாதாம்.
500வருடங்களுக்கும்மேலாக இருந்துவந்த தரவைப்பிள்ளையார் ஆலய வீதியை ஒரேஇரவில் கே.கே.பி வீதியென்று பெயர்மாற்ற இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? எமது மாநகரசபையில் இப்பெயர்மாற்றம் தொடர்பாக எவ்வித பிரேரணை கலந்துரையாடப்படவில்லை.தீர்மானமுமில்வை.இந்நிலையில் கேவலம்ஒரு அமைப்பாளருக்கு பெயர்மாற்றம் செய்ய அனுமதியளித்தது யார்?
இணக்கம் நல்லிணக்கம் என்றுபேசிப்பேசி இவர்கள் செய்கின்ற நரித்தனமான வேலையை உறவைவிரும்பும் மக்கள் முன்னின்று எதிர்க்கவேண்டும்.இன்றைக்கு ஒருவருடத்திற்கு முன்பு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இப்பாதை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இப்பாதை தரவைப்பிள்ளையார் ஆலய வீதிதான் எனத்தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததை ஞாபகப்படுத்தவிரும்புகிறேன்.


எனவே எமது வடக்குப்பிரதேச செயலகத்தின் தென் எல்லையான தரவைப்பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்றி வரலாற்றை மாற்ற இந்த அரசியல்சக்திகள் முனைகின்றன. கொழும்பில் இணக்கம் பேசுகிறார்கள். இங்கு பிணக்கத்திற்கு சதிசெய்கிறார்கள்.
எனவே உடனடியாக குறித்த றசாக் என்பவர் இப்பெயர்ப்பலகையை நீக்கி இனஉறவுக்கான முட்டுக்கட்டையை களையுமாறு கேட்கிறேன்.