கரடியனாற்றில் அதிபர் ஆசிரியர்களுக்கான நடமாடும் சேவை

மட்டக்களப்பு மேற்கு கல்வி கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர் பற்று கோட்டத்திற்கான நடமாடும் சேவை இன்று(26) வெள்ளிக் கிழமை கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அதிபர், ஆசிரியர்களது சம்பள முரண்பாடு, சுயவிபரக் கோவை,  சம்பள நிலுவை, காப்புறுதி, பெயர் மாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இச் சேவை தொடங்கப்பட்டது.

வலயத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் உள்ள அதிக தூரம் காரணமாக வலயத்திற்கு சென்று தமது சேவைகளை பெற்றுக் கொள்வதில் அதிபர், ஆசிரியர் கள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவர்களது பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் கோட்டத்திலேயே அச்சேவையை வழங்கும் பொருட்டு இந் நடமாடும் சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் மண்முனை மேற்கு, மண்முனை தென்மேற்கு போன்ற கோட்டங்களுக்கும் விடுமுறை காலத்தில் நடமாடும் சேவையை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். வருடத்தில் ஒரு தடவையாவது இவ்வாறான நடமாடும் சேவையினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது கணக்கு கிளை, நிர்வாக கிளை, திட்டமிடல் பிரிவு, முகாமைத்துவ பிரிவு போன்ற பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தமது சேவைகளை வழங்கி இருந்ததையும் குறிப்பிடத்தக்கது