மட்டக்களப்பில் வெலிக்கடை படுகொலை நினைவு தினம்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிகடைப் படுகொலையின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தம் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உபதவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் யோகநாதன், போரதீவுப் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் ரஜனி உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் குட்டிமணி, தளபதி தங்கதுரை ஆகியோரின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1983ம் ஆண்டு ஜுலை 25 தொடக்கம் 27ம் திகதி காலப்பகுதிகளில் இடம்பெற்ற வெலிகடைச் சிறைச்சாலை கலவரத்தின் போது குட்டிமணி தங்கதுரை உட்பட போராளிகள், பொதுமக்கள் என 53 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தினத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தினால் தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக வருடாவருடம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது