புலம்பெயர் உறவால் முன்னாள் போராளிக்கு காணி வழங்கி வைப்பு!

கேதீஸ்)

ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வசிக்கும் முன்னாள் போராளியான முத்து பார்த்தீபன் என்பவரது குடும்பத்திற்கு காணி ஒன்று கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்த்தர் கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்து, உடலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வலுவான தொழில்கள் செய்யமுடியாது தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் வறுமையான நிலையில் வசிக்கின்றார்.

இவர்களது குடும்ப நிலையை கவனித்த சமத்துவ மக்கள் நல ஒன்றியம் வாழ்வாதாரத்திற்காக ரூபாய் முப்பதாயிரம் வழங்கியிருந்தார்கள்.

சொந்தமான காணி, வீடு இல்லாததால் ஓந்தாச்சிமடம் கிராமத்தில்  வசிப்பதற்கு நல்லுள்ளம் ஒருவரினால் வாடகையின்றி வீடு வழங்கப்பட்டிருந்தது. இதில்  வசித்து வந்த பார்தீபன் குடும்பத்திற்கு அரசாங்கத்தால் வீடு ஒன்றும்  ஒதுக்கப்பட்டிருந்தது ஆனால் வீட்டைப்பெறுவதற்கு  சொந்தமான காணி இருக்கவில்லை.

பார்த்தீபன் கடந்த யுத்தத்தில் படுகாயமடைந்து நெஞ்சுப்பகுதியில் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியநிலையில்  உடல் வலுவிழந்தும் காணப்பட்டார். இந் நிலைமையினை வீடியோ பதிவு செய்து சமத்துவ மக்கள் நல ஒன்றியம் வெளியிட்டிருந்தது. குறித்த வீடியோவை பார்வையிட்ட கனடாவில் வசிக்கும் கல்முனையைச் சேர்ந்த ப.பிரேம் எனும் புலம்பெயர் உறவு இவருக்கான காணியினை கொள்வனவு செய்து வழங்க முன்வந்தார்.

ஓந்தாச்சிமடத்தில் உள்ள நமசிவாயம் எனும் நல்லுள்ளத்திடமிருந்து  காணி நியாயவிலையில் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டு முன்னாள் போராளியான மு.பார்த்தீபன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

காணி உறுதிப்பத்திரம் சமத்து மக்கள் நல ஒன்றியத்தின் முக்கியஸ்த்தர்களான சடகோபன்  அமைப்பின் ஐரோப்பிய இணைப்பாளர் விஜியகுமாரன் (விஜி) ஊடகவியலாளர் பு.கேதீஸ், பரமேஸ், தேவகுமார் ஆகியோரால்  நேரடியாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த போராளியான பார்த்தீபனுக்கு சத்திரகிசிச்சைக்கு தேவையாக பணத்தை அவரே சிறுக சிறுக தனது முயற்சியால் சேமித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் யாரையும் தங்கியிராது குடும்பத்தையும் பராமரித்து தனது சிகிச்சைக்கும் பணத்தை சேமித்தமை பாராட்டுக்குரியதாகும்.