பலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள்

(பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)

தற்போதையை நிலைமைகளில் பலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இழந்துபோன செல்வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சிலுசிலுப்பு அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்கான விடயங்களைக் கையாளுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கம்பெரலிய திட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக வெல்லாவெளி பிரதேசத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்தும் முடிக்கப்பட்ட வேலைகளை மக்கள் பாவனைக்காக வழங்குவதுமான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் பிராகரம் வெல்லாவெளி வேத்துச்சேனை பிள்ளையார் ஆலயத்திற்கு 03 லெட்சம், வெல்லாவெளி சக்தி விளையாட்டுக் கழகத்திற்கு 10 லெட்சம், பாலையடிவட்டை விஷ்ணு ஆலயத்திற்கு 15 லெட்சம் ரூபாக்களில் அபிவிருத்தி வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதையை நிலைமைகளில் பலர் தவிச்ச முயல் அடிப்பதற்கே முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இழந்துபோன செல்வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக எமது மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சிலுசிலுப்பு அரசியலைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அதற்கான விடயங்களைக் கையாளுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவே இருக்கின்றது. குற்றம் சுமத்துபவர்கள் அதனைச் சொல்லிவிட்டு இருந்துவிடுவார்கள். ஆனால் எதைனையும் செய்வதில்லை.

சொல்லிக் கொண்டிருப்பது மிக இலகுவான காரியம். ஆனால் அதனைச் செய்து முடிப்பதுதான் கடினமான விடயம். இங்கிருக்கின்ற பல அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருப்பார்கள் எதனையும் செய்ய மாட்டார்கள். ஆனால் அவர்கள் சொல்லுகின்ற விடயங்களை ஒவ்வொன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்து கொண்டிருக்கின்றது. கல்முனை தொடக்கம் கன்னியா உட்பட எமது உரிமைப் பிரச்சனைகள், அரசியற் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் என அனைத்திலும் எமது தலைமைகளே முற்றுமுழுதாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

எமது பிரதேசங்களில் பல பொய்கள் உலாவித் திரிகின்றன. பொய்களை எடுத்த எடுப்பில் நம்பும் சிலர் உண்மையான விடயங்களை அறிவதற்கு முற்பட வேண்டும். நாங்கள் சிலசில தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் அவ்வாறு தொழில் பெற்றவர்கள் எவரும் ஒரு சதம் கூட செலவழிக்கவில்லை. ஆனால் பலர் இவ்வாறு தொழில்வாய்ப்புக்களை வழங்க லெட்சக் கணக்கில் பணம் வாங்குகின்றார்கள், வாங்கியும் இருக்கின்றார்கள். அதே போன்று அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் கூட எவ்வித சுருட்டல்களும் இன்றி செயற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதே வேளை சுருட்டுகின்ற அரசியல்வாதிகள், நிருவாகிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.

தனிப்பட்ட கோபகுரோதங்களுக்காக நாங்கள் எவரையும் பழிவாங்குவதில்லை. அதேவேளை மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம். நாங்கள் மக்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்போனால் இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் எதிரிக்கெதிரி நண்பன் என்ற ரீதியில் அவருக்கு ஆதரவாகச் செயற்படுகின்றார். ஏன் அவ்வாறான அதிகாரி ஒருவரை அவர் அரசாங்க அதிபராக அலங்கரிப்பதற்குக் கூட ஆசை கொண்டுள்ளார். இவ்வாறு நிலைமைகள் சென்று கொண்டிருக்கின்றது.

என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் ஒரு அதிகாரியின் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு இல்லை அவர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் சக உத்தியோகத்தர்களுடன், மக்களுடன் அணுகும் முறைமை மற்றும் அவரின் லஞ்ச ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் விசாரணைக் குழுவினால் கண்டறியப்பட்டே அவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொய்யான விடயங்களுக்கு இடமில்லை.

எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினை எமது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு சரியான முறையில் ஒதுக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கின்றது. அந்த அடிப்படையில் நிதிப் பங்கீடுகளை மேற்கொண்டு வருகின்றோம். இருப்பினும் எமது பிரதேசங்களின் பரப்பு அதிகமாக இருப்பதால் நாங்கள் எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் மேற்கொண்டாலும் போதாமை என்கின்ற தோற்றப்பாடு இருக்கின்றது. வருகின்ற காலங்களில் இவை தொடர்பிலும் கவனம் எடுப்போம் என்று தெரிவித்தார்.