எமக்காக உள்ள முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பில் உரிய முறையில் நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம்,

காரணங்கள் ஏதுமின்றி சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களின் விடுதலை தொடர்பான தீர்வுகள் கிட்டும் வரை அமைச்சுப் பொறுப்புக்களை மீள எடுப்பதில் இறுதி தீர்மானம் இதுவரை இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு எடுத்துரைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூரில் பல கோடி ரூபாய்கள் செலவில் கம்பெரலிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இன்று அங்குரார்ப்பனம் செய்து வைத்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிற்பாடு முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட பிரச்சனைகளை அடுத்து அரசிலே அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும்   தங்களது பதவிகளை ஒன்றுபட்டு இராஜினாமா செய்து ஒரு பெரும் அதிர்ச்சியை வழங்கியதை அடுத்து நாட்டின் தலைவர்களும் , மத தலைவர்களும், சர்வதேச நாடுகளும் மீண்டும் அமைச்சுக்களை பொறுப்பேற்று மக்களுக்கான பணிகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகிறார்கள் , ஆனால் நாம் இராஜினாமா செய்த போது அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளில் சில நிறைவேற்றப்பட்டாலும் இன்னும் அரைகுறையாக பல விடயங்கள் உள்ள காரணத்தினால் பதவிகளை ஏற்பது தொடர்பில் நாம் இன்னும் யோசிக்க வேண்டி உள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பின் போது மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட போது ” அநியாயமாக கைது செய்யப்பட்ட சிலர் இன்னும் சிறைகளில் வாடுகின்றார்கள் , இவர்களை விடுவிப்பதில் தடையாக உள்ள பின்னனி காரணங்கள் ,தவறுகள் என்பன பற்றி தெளிவுபடுத்தியதோடு முஸ்லிம்களது உரிமைகள் , பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு நீதி சரியாக நிலை நாட்டப்படுகின்ற போதுதான் நாங்கள் எந்தளவிற்கு அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை மீண்டும் பெறுவது பற்றி யோசிக்க முடியும் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறி உள்ளோம்,
ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்ட இலங்கை முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக , மத அனுஷ்டானங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்காக இந்த நாட்டின் ஒவ்வொரு சமூகத்தினருக்குமான உத்தரவாதத்தை அரசியலமைப்பு வழங்குகிறது, அதுதான் எமது நாட்டின் ஒரே சட்டமாகவும் சொல்லப்படுகின்றது, அந்த சட்டத்தின் பிரகாரம் எமது கலாச்சாரத்தை பேணவும் உரிமைகளை பாதுகாக்கவும், மத அனுஷ்டானங்களை முன்னெடுக்கவும் உரிமை உள்ளது,
எமக்காக உள்ள முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பில் உரிய முறையில் நாங்கள் தீர்மானித்துக் கொள்வோம், வேறு யாரும் வந்து எமக்கு வழி காட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லை ,  ஏதும் மாற்றங்கள் தொடர்பான தேவைகளும்  இல்லை, அவ்வாறான நிலை ஏதும் ஏற்பட்டால் எமது சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் , மத தலைவர்கள் , அரசியல் பிரதிநிதிகள் , சமூக பிரதிநிதிகள் என அனைவரும் இணைந்து அது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானித்துக் கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று வடக்கு கிழக்கிலே உள்ள ஒரே மொழியினை பேசும் இரு சமூகங்கள் மிகவும் சகோதரத்துவத்துடன் வாழ முனையும் போது அவ்வாறான நிலைமைகளை குழப்பி அதில் அரசியல் குளிர்காய வேண்டும் என்பதற்காக தென்னிலங்கையையும் குழப்பும் சில தீய சக்திகள் இங்கு வந்தும் மூக்கை நுழைக்கப் பார்க்கிறார்கள், எங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் தீர்க்கப்பார்க்கிறோம்  அது கல்முனைப்பிரச்சனையாகவோ , கோரளைப்பற்று மத்தியாகவோ , தோப்பூராகவோ இருக்கலாம், எதுவாக இருந்தாலும் அதை உரிய முறையில் பேசி நல்ல தீர்வுகளை அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் , இந்நிலையில் சமாதான சகவாழ்வை குழப்புவதற்காக சிலர் முனைகிறார்கள் ,
விரைவில் ஒரு ஜனாதிபதி தேர்தலை இந்தநாடு எதிர்கொள்வதை முன்னிட்டு சிலர் குழப்பங்களை விளைவிக்க திட்டம் தீட்டலாம், நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாது எனும் தோற்றப்பாட்டினை உருவாக்குவதற்கான அரசியல் சூழ்ச்சிகளும் தேர்தல் வரை இடம்பெறலாம் , ஆகவே அனைத்து மக்களும் இது தொடர்பில் மிக அவதானமாகவும் , விழிப்புடனும் செயலாற்றிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா இங்கு மேலும் தெரிவித்தார்.