கிழக்கு மாகாண தேர்தலை உடன் நடத்துக.

ஜனநாயகரீதியாக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் பகீரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2017ம் ஆண்டு கிழக்குமாகாணசபையின் மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி முடிவடைந்து இரண்டு வருடங்களாகி ஆளுனர்களின் ஆட்சியில் கிழக்கு மாகாண சபை செயற்பட்டு வருகின்றன. தமிழ் மக்களின் (சிறுபான்மையினரின்) அதிகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட மாகாணசபை முறமை வடக்கு கிழக்கில் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் 12 வருடங்களே மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இருந்தது. மிகுதியாக 14வருடங்களுக்கு மேல் மத்திய அரசாங்கத்தின் நிருவாக ரீதியாக ஆளுனரின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணசபை செயல்பட்டு வந்தன.

வடக்கு கிழக்கைத் தவிர ஏனைய மாகாண சபைகள் 28 வருடங்களுக்கு மேலாக மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியே அமுல்படுத்தப்பட்டு வந்தன. அம் மாகாண சபைகளில் பல நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு கூடுதலான வரிகளைப் பெற்று மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. இம் மாகாணசபைகளில் மேலும் கூடுதலான அதிகாரங்கள் குறிப்பாக, மத்தியிலுள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டுமென இம் மாகாண சபைகள் குரல் கொடுத்து வருகின்றன. கிழக்கு மாகாண சபையைப் பொறுத்தவரையில் அதிகாரங்களை அமுலாக்குவதற்குரிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே கடந்த காலத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

எதிர்காலத்தில் மாகாணசபை தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்ட அதிகாரங்களையும் மாகாணசபையிலுள்ள அமுல்படுத்தப்படாமல் உள்ள அதிகாரங்களையும் அமுலாக்குவதற்கும் திட்டமிட்டவாறு அபிவிருத்தி வேலைகளைச் செய்வதற்கும் நல்ல ஆட்சியைக் கொண்டுவருவதற்கும் தமிழர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவர வேண்டும்.

இதற்கு கிழக்கு மாகாணத்திலுள்ள தேசியக் கட்சிகளைத் தவிர ஏனைய தமிழ்க்கட்சிகள் எவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர் ஓருவர் முதலமைச்சராக வருவதற்கும் ஏனைய அமைச்சர்களை தெரிவு செய்வதற்கும், மாகாணசபை தேர்தல் தொடர்பான விடயங்களிலும் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும்.

இதை விடுத்து கிழக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற தமிழக் கட்சிகள் தங்களது அறியாமையை உணராமல் முரண்பட்டுக் கொண்டு வீரவசனம் பேசி கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் முரண்பட்டால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சி தமிழர்களின் கையில் இருந்து பறிபோகும். தமிழர்களின் கையில் இருந்து ஆட்சியைப் பறிப்பதற்கு தேசிய இனவாதக்கட்சிகள் தமிழர்கள் தங்களிடம் மண்டியிடவேண்டும் என்பதற்காக ஒருசில முஸ்லிம் கட்சிகளையும், ஒருசில தமிழர்களையும் கையில் எடுத்துக் கொண்டு தமிழர் வாக்குகளைப் பிரிப்பதற்காக கிழக்கு மகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் பலர் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

இத்திட்டத்தை முறியடித்து தமிழர் ஓருவரை முதலமைச்சராக கொண்டு வருவதற்கும் பலமான அபிவிருத்திக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கும் மாகாண சபையிலுள்ள அதிகாரங்களை அமுலாக்குவதற்கும் கட்சிகளுக்குள் பொது உடன்பாட்டைக் கொண்டு வர அனைத்து கட்சி பிரதிநிதிகளும் முன்னின்று உழைக்க வேண்டுமென அறைகூவல் விடுக்கின்றேன்.