கிழக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது

கிழக்கு மாகாண விவசாய, நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி மற்றும் மீன்படி, கூட்டுறவு அபிவிருத்தி, உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் 2017ம் ஆண்டுக்கான உயர்மட்ட செயற்திறனை அங்கீகரிக்கும் முகமாக தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் மதீப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2017 நிதியாண்டுக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

கடந்த 05ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் இவ்விருதினைப் பெற்றுக் கொண்டார்.

2017ம் ஆண்டில் உற்பத்தித் திறன், செயற்திறன், ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளைப் பின்பற்றுதல், பொது நிதியைச் சிக்கனமாகப் பயன்படுத்துதல், வெளிப்படைத்தன்மை முதலானவற்றை சிறந்த முறையில் கடைப்பிடித்தமையின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகின்றது.

2016ம் ஆண்டு இவ் அமைச்சிற்கு வெள்ளி விருது கிடைக்கப்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி ஆண்டு காலப்பகுதிகளில் கிழக்கு மாகாணத்தின் விவசாய அமைச்சராகச் செயலாற்றியவர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்கள். அவரின் சிறந்த வழிநடத்தல் மற்றும் செயற்திறன் என்பவற்றின் காரணமாக இவ்விரு ஆண்டுகளும் இவ் அமைச்சிற்கு விருதுகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.